
-நித்தீஷ்குமார் யாழி
அதிகமான உடல் எடையை உடைய பெண்கள் இன்றளவும் பலரால் கேலி செய்யப்பட்டுவருவதை நெடுநாட்களாக பார்த்து வருகிறோம். ஓர் ஆண் அதிக எடையுடன் இருந்தால் அவன் உடற்பயிற்சி கூடம் சென்று அல்லது விளையாட்டு மைதானம் சென்று உடற்பயிற்சி செய்ய அவனுக்கு வாய்ப்பும் நேரமும் கிடைக்கிறது.
ஆனால், ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்புகள் எளிதில் கிடைப்பது இல்லை. அவர்கள் வீட்டுவேலையைச் செய்யவேண்டும்; நேரத்திற்கு சமைத்துத் தர வேண்டும் என்பதும், ஆண்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு வீட்டில் அனுமதி தரமறுப்பதும் பெண்களுக்கு சிரமமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட பெண்களுக்கு வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்க எளிய வழிகளில் ஒன்று நடனமாடுதல்.
ஆம், நம்மில் பலர் நடனத்தை ஒரு பொழுதுபோக்கு என்றும் அல்லது இது ஒரு கலை என்றும் பார்த்து இருப்போம். ஆனால், நடனமாடுதல் ஒரு சிறந்த உடற்பயிற்சியும்கூடதான்.
ஒரு நபர் ஒரு மணிநேரம் நடனமாடுவதால் சுமார் 250 – 330 வரை உடலில் உள்ள கலோரியைக் குறைக்கலாம். மேலும், இதன் மூலம் பெண்கள் பி.சி.ஓ.டி பிரச்னையில் இருந்தும் விடுபடலாம். உடல் எடை குறைப்பது மட்டுமின்றி நடனத்தில் மேலும் சில நன்மைகள் உண்டு.
· நினைவாற்றலை அதிகரிக்கும்.
· மகிழ்ச்சியை மேம்படுத்தும்.
· மன அழுத்தத்தை குறைக்கும்.
· சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும்.
· ஆற்றல் அதிகரிக்கும்.
பி.கு:- நடனம் என்பது முறையாகப் பயின்ற பாரம்பரிய நடனமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. நமக்கு பிடித்த இசையை / பாடல்களை பின்னணியில் போட்டுவிட்டு நம் மனதிற்கு ஏற்றவாறு ஜாலியாக ஆடலாம்! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தனிமையிலும் ஆடி மகிழலாம்!