

மிதாலி ராஜின் நீண்டகால சாதனையைத் தகர்த்து, டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஸ்மிருதி மந்தனா.. அவரது இந்த உத்வேகம் தரும் சாதனைப் பயணம் எப்படி சாத்தியமானது? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!
9 வயதில் தொடங்கிய ஆட்டம் இந்திய மகளிர் அணியின் தலைவரானது வரை தொடர்ந்து பயணிக்கும் ஸ்மிருதி வந்தனாவின் மகத்தான சாதனைகள்...!
டெஸ்ட் போட்டிகளில் 9 ஆட்டங்களில் 788 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 120 ஆட்டங்களில் 5,411 ரன்களும், 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் 178 ஆட்டங்களில் 4,788 ரன்களும் எடுத்ததன் மூலம் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய மற்றும் உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். மேலும், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (18) அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளவரின் தலையில் மேலும் ஒரு கிரீடம் அது தான் இந்திய மகளிர் அணியின் கேப்டன் எனும் கிரீடம் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் தான் ஸ்மிருதி மந்தனா.
"டைம் 100 என்பது"அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியல் ஆகும். அரசியல், கலை, வணிகம், அறிவியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இதில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அன்மையில் வெளிவந்த உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். உலகளாவிய விளையாட்டுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வீரர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சிறப்பிக்கும் இப்பெருமைமிகு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் இவராவார்.
'ஸ்மிருதி மந்தனா '1996 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். கிரிக்கெட் எப்போதுமே மந்தனா குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. அவரது அப்பா, சகோதரர் ஸ்ரவனும் கிரிக்கெட் விளையாடிவர்கள், அதனால் இளம் ஸ்மிருதிக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் துளிர்விட்டது. தன் சகோதரனைப் பின்தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்றார்.
ஸ்மிருதி மந்தனா தனது ஒன்பது வயதிலேயே மகாராஷ்டிராவின் 15 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்தார். பின்னர், வெறும் 11 வயதிலேயே 19 வயதுக்குட்பட்ட மாநில அணிக்கு விரைவாக முன்னேற்றப்பட்டார். கிரிக்கெட்டையும் படிப்பையும் சமன் செய்வது கடினமாகிவிடும் என்பதை அறிந்திருந்த அவர் வணிகவியல் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். இது கிரிக்கெட்டிற்கு அதிக நேரம் ஒதுக்க அவருக்கு உதவியது.
2013 ஆம் ஆண்டு ஸ்மிருதி மந்தனா ஏப்ரல் 5 அன்று வதோதராவில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. தொடக்க ஆட்டக்காரரான மந்தனாவுக்கு சாதனைகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. 29 வயதான இவர், உள்ளூர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளைப் பெற்றார். மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் 18 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் இவர் உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 600 பவுண்டரிகள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர்/வீராங்கனை என்ற அசாத்திய சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
ஒரு வருடத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஒருநாள் சர்வதேச ரன்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் மந்தனா பெற்றார்.
மந்தனா, 2024 மற்றும் 2026ம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் தலைமை தாங்கி மகளிர் பிரீமியர் லீக் பட்டங்களை வென்றார். கடந்த ஆண்டு இந்தியா வெற்றிபெற்று ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது துணைத் தலைவராகப் பணியாற்றி, அந்தத் தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் சோஃபி டிவைனுடன் இணைந்து அதிவேக டி20 அரைசதம் (18 பந்துகள்) அடித்தவர். ஒரு இந்தியப் பெண் அடித்த அதிவேக டி20ஐ அரைசதம் (23 பந்துகள்), இந்தியப் பெண் வீராங்கனை அடித்த அதிவேக ஒருநாள் சதம் (50 பந்துகள்), டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியப் பெண். ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்களை அதிவேகமாக எடுத்த இந்தியப் பெண், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டிய இளம் மற்றும் வேகமான வீராங்கனை. ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்.
டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியப் பெண் என பல சாதனைகளுக்கு மந்தனா சொந்தக்காரர்.
பின்னர் 2025ம் ஆண்டில் தனது முந்தைய சாதனையை முறியடித்து, பிபிசி இந்திய ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் எல்லிஸ் பெர்ரியைத் தவிர, மதிப்புமிக்க ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற ஒரே வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தான். தனது 300-வது சர்வதேச போட்டியை ஜூலை 11 2026 ல் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார். சர்வதேச அளவில் 300 போட்டிகளில் விளையாடிய 12-வது வீராங்கனை மற்றும் இளம் வயதிலேயே இந்த சாதனையை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார்.
இந்நிலையில் துபாயில் 2026 செப்டம்பர் 3 ல் ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் மந்தனா ஏற்கெனவே இருந்த சாதனைகளை முறியடித்து, மகளிர் கிரிக்கெட்டில் இரண்டு உலகச் சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
இந்திய அணியின் துணைத் தலைவரான அவர், 64 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்களுடன் 124 ஓட்டங்களை விளாசினார். அதன் மூலம் அவர், அனைத்துலகப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை அடித்திருந்த இந்திய மகளிர் அணியின் முன்னாள் தலைவர் மிதாலி ராஜை (10,868 ஓட்டங்கள்) மிஞ்சினார். அதோடு18 வது சதத்தையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
அதன் வழியாக, இதற்கு முன்னர் 17 சதங்களை அடித்திருந்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் மெக் லானிங்கையும் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டையும் அவர் பின்னுக்குத் தள்ளினார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவராக, ஸ்மிருதி மந்தனாவின் கிரிக்கெட் பயணம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக தொடர்கிறது.