.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சமூக வலைதளங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு உபாயமாக இருக்கிறதோ அதே அளவிற்கு அபாயமாகவும் இருக்கின்றன. ஒரு நாணயத்தின் பின்புறம் போல் மக்களுக்கே தெரியாமல் அவர்களையும் நம் மண்ணின் கலாச்சாரத்தையும் ஒரு புதைக்குழியைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக புதைத்துக் கொண்டு இருக்கின்றன.
எந்தவொரு மனிதரிடத்திலும் ஆசாபாசங்கள் இருக்கும். இருந்தாலும் அதனை தொன்று தொட்டு காத்து வரும் நமது கலாச்சாரத்தாலும் தன் நற்பெயரை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும், தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் மானத்திற்காகவும், தன் குடும்பத்தாருக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற நல்ல எண்ணத்திலும், பிறருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தீமை செய்யக்கூடாது என்ற எண்ணத்தாலும், தன் குற்ற உணர்விற்கும் அஞ்சி அந்த வீணாண எண்ணங்களில் இருந்து விலகி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இப்படி வாழ்ந்து வரும் நம் வாழ்க்கையில் களைச்செடியாக முளைத்து வருகின்றன சினாப்சாட் (SnapChat), ஃபிரண்ட் (Frnd), தோஸ்த் (Dostt) போன்ற செயலிகள். இதன் மூலமாக முன்பின் தெரியாத நபர்களிடம், ஆடியோ அழைப்புகள், வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலமாகவும் பேசலாம். ஏற்கனவே கைபேசிகள் வீட்டில் இருப்பவர்களை தனித்தீவுகளாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இச்செயலிகள் ஒருபடி மேலே சென்று அந்நிய வரைமுறையற்ற சகவாசங்களை உருவாக்கி வீட்டாரை வாழ்க்கையில் இருந்தே பிரித்து வைக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதே மிகையான உண்மை.
சற்றே சஞ்ஞலம் கொண்ட மக்கள் இதில் இறங்கிவிட்டால், நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் எல்லாரும் தான் இதை உபயோகிக்கிறார்களே நாமும் உபயோகிக்கலாம் என்று விளையாட்டாக களத்தில் இறங்கி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். உதாரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி இவ்வலைதளத்தை உபயோக்கித்தால், அதிலே அப்பெண்ணைப் பார்க்க வரும் ஆண்கள் கண்டிப்பாக அவளை வர்ணிப்பார்கள். அவளைப் புகழ்வார்கள். அவளுடன் பேசப் பிடித்திருக்கிறது என்பார்கள். உன் பேச்சில் நான் உருகுகிறேன் என்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு ஆண்களும் சொல்ல சொல்ல அவர்களுடன் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றும்.
அவளுக்கு அதுவே ஒரு போதை போன்று ஆகிவிடும். எப்போதும் நல்லது சொல்ல வரும் அப்பாவை அவளுக்கு பிடிக்காமல் போகலாம். அவளிடம் வேலை செய்து பழகச் சொல்லும் அம்மாவையும் பிடிக்காமல் போகலாம். தன்னிடம் சிறு வம்பு சண்டை போடும் அண்ணனையும், தம்பியையும், அக்காவையும், தங்கையையும் பிடிக்காமல் போகலாம். தன்னை வர்ணிப்பவர்களையே அவளுக்குப் பிடிக்கலாம். அதனால் அவர்களிடமே பேச வேண்டும் என்று போனை எடுத்துக் கொண்டு தனி அறைக்கு ஓடுகிறாள். தன்னை வீட்டாரிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்கிறாள். யாரேனும் குறுக்கிட்டால் அவர்கள் மீது எரிந்து விழுகிறாள்.
அவளுக்கு தாம் செய்வது தவறு என்று ஒரு கட்டத்தில் தெரியவந்து இப்படி தவறு செய்கிறோமே என்று குற்ற உணர்வினால் உள்ளத்திலே குமுறுகிறாள். இருந்தும் பழக்கத்தினால் அடிமையாகி அதைவிட மனசில்லாமல் தனக்கு கைபேசியே கதியென்று கிடந்து படிப்பையும், உறவையும், வாழ்க்கையையும் தொலைக்கிறாள்.
பதின்பருவத்தினர் மட்டும் இதிலே பாதிக்கப்படுவதில்லை. திருமணமான பெண்களும் கூட சிறு சஞ்சலத்தால் தெரிந்தோ, தெரியாமலோ இது போன்ற நஞ்சு செயலியை உபயோகித்து தன் வாழ்க்கையை தாமே நரகமாக்குவது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாருக்கும் துரோகம் விளைவித்து அவர்களையும் அக்குழியில் தள்ளுகிறார்கள்.
சில செயலிகள் கண்ணைக் கவரும் விளம்பரத்துடன் இதனை உபயோகிப்பதால் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று பணத்தாசையைத் தூண்டுகின்றன. பல ஆண்கள் தம்முடன் பேசுவதற்கு பணம் கொடுக்கிறார்கள் என்றால் அதன் பெயரென்ன? தாம் பணம் சம்பாதிப்பதற்காக நம் பெண்களை விலைமகளாக்கப் பார்க்கிறது இது போன்று துஷ்ட செயலிகள். இவற்றிடமிருந்து நம் பெண்களையும் நம் கலாச்சாரத்தையும் நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
நாம் எந்த செயிலியை பதிவிறக்கம் செய்ய நினைத்தாலும் அதை எத்தனை நபர்கள் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள், எத்தனை நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மட்டும் பார்க்காமல் இது நல்ல செயலியா, கெட்ட செயலியா என்று ஒருமுறைக்கு பத்துமுறை ஆராய்ந்து பதிவிறக்கம் செய்யுங்கள். உபயோகிக்க ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே உங்கள் உள்ளுணர்வு இது நல்லது, இது கெட்டது என்று காட்டிக் கொடுக்கும். அதையும் கவனியுங்கள். பலர் அதை கவனிப்பதே இல்லை.
வீட்டாரிடம் கேட்டு அவர்களின் கைபேசியையும் எடுத்தாராய்ந்து இதுபோன்ற தீதான செயலிகள் இருக்கிறதா என்று அவ்வப்போது கண்காணியுங்கள். அவர்களையும் அதிலிருந்து காப்பாற்றுவது நம் கடமையே. வருமுன் காப்பதே சிறந்தது.
குழந்தைகள் உபயோகித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு பொறுமையாக விளக்கி விட்டு அதனை அகற்றி விட்டு, அந்த அக்கவுண்டை டெலிட் செய்துவிடுங்கள். செட்டிங்ஸில் உள்ள பேரண்டல் கண்ட்ரோல் (Parantal Control) அமைத்து செயலியின் வயது வரம்பை குறைத்து விடுங்கள். இதனால் மேற்கொண்டு நாம் இல்லாத நேரத்தில் அவர்களால் அதை மறுபடியும் பதிவிறக்கம் செய்ய முடியாது.
வீட்டினுள் ஒற்றுமையும் நேர்மையும் ஒழுக்கமும் இருந்தால் தான் மனதிலே நிம்மதி கிடைக்கும். நாம் ஏதேனும் குற்ற உணர்விலே உழுன்று கொண்டு இருந்தால் அதை மறைக்க மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டும். இதனால் மேலும் குற்ற உணர்வு அதிகமாகும். மனஅழுத்தத்திற்கு ஆட்பட நேரிடும்.
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.”
என்ற திருக்குறளுக்கு இனங்க, இன்பமான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே சிறந்தது என்று புரிந்து தேவையில்லாத தீயொழுக்கத்திற்கு வித்தாகும் சினாப்சாட் (SnapChat), ஃபிரண்ட் (Frnd), தோஸ்த் (Dostt) போன்ற செயிலிகளை பிடுங்கி வீசுங்கள்.