பெண்கள்தான் வீட்டின் கண்கள், முதுகெலும்பு. அவளுடைய ஒவ்வொரு செயலும் குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் பிரதி பலிக்கும். அதிலும் வேலைக்குப் போகும் பெண்கள் என்றாலே அலுவலகத்திலும் வீட்டிலும் சரிசமமாய் உழைத்துப்பாடுபட வேண்டி வருகிறது. இது போட்டிகள் நிறைந்த உலகம். எனவே எத்தனை கடுமையாய் உழைத்தாலும் எல்லோரது எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுக்க முடியாமல் போகிறது. வீட்டில் தனக்கு உரிய கவுரவம் கிடைக்காதபோது பெண் மனம் மிகவும் வேதனை அடைகிறது. எனவேதான் உள்ளத்தில் எரிச்சலும், சிடுசிடுப்பும் குடிபுகுந்து விடுகிறது.
ஆனால் எந்த நிலையிலும் பெண்கள் மனதைத் தளரவிடாமல் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
நம்மை நாமே நேசிக்க வேண்டும். அடிக்கடி கண்ணாடியில் பார்த்து சிரிக்க வேண்டும். இதனால் நம் அவசியத்தை பூரணமாக உணரலாம்.
வேறு யாரும் நமக்கு உதவவேண்டும் என்றோ, உங்களைப் புகழ வேண்டும் என்றோ எதிர்பார்க்கக் கூடாது.
நம்மை நாமே பாராட்டிக் கொள்ளவேண்டும். இதனால், வேலைத்திறமை பெருகுவதோடு, தன்னம்பிக்கையும் வளரும்.
எப்போதும் மென்மையாக, அமைதியாகப் பேசவேண்டும். ஒருபோதும் இரைந்த குரலிலோ, கசப்பான சொற்களையோ பேசவேண்டாம்.
வேலைகளை திட்டமிட்ட நேரத்தில் செய்துமுடிக்க வேண்டும். அதன் பின் உடல் நலம் பாதிக்காத அளவு ஓய்வாக இருக்கலாம்.
எந்தச் செயலால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, அந்தச் செயலை தினம் ஒரு தடவையாவது செய்யுங்கள்.
தன்னம்பிக்கையோடு, முகத்தில் புன்முறுவலோடு யாரையும் எதிர் கொள்ள வேண்டும். அதுவே நம்மிடம் திரும்ப வரும்.
நம்முடன் வேலை செய்பவர்கள், மேலதிகாரிகள், வீட்டின் இதர உறுப்பினர்களிடம் குறை காணாமல் இருப்பது நல்லது.
கோபத்தை அடக்கப் பயிலுங்கள். அப்படியே கோபம் வந்துவிட்டாலும், அந்த சூழ்நிலையிலிருந்து விலகிப்போய் வேறு வேலையில் மளதைச் செலுத்தவும். அதாவது புத்தகம் படிப்பது அல்லது பாட்டுப் படிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.
நாம் அணியும் உடைகள், அதன் தன்மை, நிறம் இவைகளை நமக்கு பிடித்தபடி தேர்வு செய்து அணியவும்.
நினைத்தபடி எந்த வேலையாவது நடக்காவிட்டால் 'எல்லாம் நன்மைக்கே' என நினைத்துக்கொள்ள வேண்டும்.
பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோமோ, அப்படியே நாமும் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்.
வீட்டுக் கவலையை அலுவலகத்திலும், அலுவலக வேலை டென்ஷனை வீட்டுக்கும் கொண்டு வராமல் அததை அங்கங்கே வைத்து சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும்.
இதன் பின் பாருங்கள். மனத்தில் கிடைக்கக்கூடிய அமைதி, சாந்தி, சக்தி, தன்னம்பிக்கை போன்றவைகளால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நீங்கள் ஒரு வி.ஐ.பி.தான் என்பதை அனைவரும் உணர்வார்கள்.