அன்னை சாரதாதேவி: "அனைத்து துன்பங்களுக்கும் நம்முடைய ஆசையே காரணமாகும்!"

இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியாகவே கருதினார்.
 சாரதாதேவி...
சாரதாதேவி...
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

கொல்கத்தாவிற்கு மேற்குப் பகுதியில் சுமார் எண்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 22 டிசம்பர் 1853 அன்று அவதரித்தவர் அன்னை சாரதாதேவி.

இராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் அன்னை சாரதாதேவிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்களது வாழ்க்கையானது ஒரு குருவிற்கும் சிஷ்யைக்கும் உள்ள உறவைப் போன்று புனிதமாக விளங்கியது. உலகில் வேறு எவரும் இப்படியான ஒரு புனித வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியாகவே கருதினார். அன்னை சாரதாதேவி தன் வாழ்நாளில் அவ்வப்போது பல அமுதமொழிகளைக் கூறியுள்ளார். அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளுவோம்.

* கடவுளின் காலடியில் அனைத்து ஆசைகளையும் சமர்ப்பிப்பதே மிகவும் சிறந்ததாகும். நமக்கு எது நல்லதோ அதை கடவுள் நமக்குச் செய்வார்.

* ஆசையற்ற தன்மைக்கு நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுதல் வேண்டும். ஆசையே நம்முடைய அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகும். இந்த எண்ணமே பல பிறவிகள் எடுப்பதற்கு காரணமாகிறது.

* ஒருவர் இறைவனைக் கண்டுவிட்டால் அவரது மனம் தூய்மை அடைகிறது. மனம் தூய்மை அடைந்தால் இந்த உலகில் நிலையானது எது நிலையற்றது எது என தெளிவாக அறியும் ஞானம் அவருக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ சாரதாதேவி கடைபிடித்த அறநெறி வாழ்க்கை தத்துவங்கள்-10!
 சாரதாதேவி...

* நீரில் நீந்தி விளையாடும் வாத்துக்களின் உடலின் மீது நீர் ஒட்டுவதில்லை. அப்படியே ஒட்டினாலும் அவை ஒரு உதறு உதறியவுடன் சிதறிப்போகும். இது போலவே நாம் உலகப்பொருட்களின் இடையே வாழ்ந்தாலும் அவற்றின் மீது உள்ள பற்றை மனதிலிருந்து அறவே உதறித் தள்ள வேண்டும்.

* ஆன்மாவை உடல் என்று கருதுவது அழிய வேண்டும். இந்த உடல் தீக்கு இரையாகும்போது மிஞ்சுவது ஒருபிடி சாம்பலே. அழகு நிறைந்திருந்தாலும் வலிமை நிறைந்திருந்தாலும் இவ்வுடலின் முடிவு ஒரு பிடி சாம்பல்தான். இவ்வளவு அகங்காரம் எதற்கு ?

* தூய்மையான மனதை உடையவர்கள் அனைத்தையும் தூய்மையாக காண்கிறார்கள். அனைத்தும் மனதில் தான் உள்ளது. தூய்மை, தூய்மையின்மை இரண்டுமே மனதில் தான் உள்ளது.

* வேலை ஏதுமின்றி ஒருவர் இருக்கும்போதுதான் வேண்டாத எண்ணங்கள் அவர் மனதைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. வேண்டாத நினைவுகளை மனத்திலிருந்து துரத்துவதற்கு வேலை உதவுகின்றது.

* உனக்கு அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைப் பார்க்காதே. அதற்குப் பதிலாக உன்னிடமுள்ள குறைகளைப் பார்.

* உலகம் முழுவதையுமே உனது சொந்தமாக்க கற்றுக்கொள். இந்த உலகில் யாரும் அன்னியர் அல்ல.

* இந்த உலகத்தில் காணும் அனைத்து தீமைகளுக்கும் கஷ்டங்களுக்கும் அடிப்படை காரணம் பணமே. எப்போதும் பணம் மனத்தை கறைபடுத்துகிறது.

* இறைவனின் கருணையானது சிறுகுழந்தையிடம் இருக்கும் மிட்டாயைப் போன்றது. அதனிடம் இருக்கும் மிட்டாயை தனக்குத் தரும்படி சிலர் கெஞ்சுகின்றனர். ஆனால் அந்த குழந்தை தனக்குப் பிடித்தவர்களிடமே அந்த மிட்டாயைத் தருகிறது. தான் விரும்புகிறவர்களிடம் மட்டுமே இறைவன் தன் கருணையைப் பொழிகிறான்.

* உன்னுடைய சொல் செயல் இவற்றில் நீ உண்மையான இரு. நீ பேறு பெற்றவன் என்பதை உணர்வாய். உண்மையான அன்பு. இதையே கடவுள் விரும்புகிறார். வெறும் வார்த்தைகள் இறைவனைத் தொடுவதில்லை.

* எவ்வளவு பெரிய மகாபுருஷராக இருந்தாலும் உடல் தரித்துப் பிறந்து விட்டால் உடலின் அனுபவங்களை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். ஆனால் வேறுபாடு இதுதான். சாதாரண மனிதன் இறக்கும்போது அழுது கொண்டே போகிறான். மகாபுருஷர்கள் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு மரணம் ஒரு விளையாட்டு.

* மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ அந்த என் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பைத் தெரிவித்து விடு. எனது நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
மனித குலத்தின் நினைவில் அவர் இன்னமும் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்வார்.
 சாரதாதேவி...

* என்னுடைய ஆசியின் வாயிலாக நீ பூரண ஞானத்தைப் பெற முடியுமானால் நான் உன்னை மனப்பூர்வமாக ஆசிர்வதிக்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com