

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கல்கி குழுமம் வாசகர்களிடம் 'சாய்பாபாவின் அனுபவங்கள்' குறித்த படைப்புகளைக் கோரியது. வாசகர்கள் அனுப்பியிருந்த படைப்புகள் மிகுந்த உயிர்ப்புடனும் சிலிர்ப்புடனும் அமைந்திருந்தன.
கல்கி குழுமத்தின் ஆன்லைன் வாசகர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் படைப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.
1. பண உதவி செய்த இளைஞர்!
நான் ஒரு முறையை மும்பையில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்யும்போது என்னுடைய பயணச்சீட்டைத் தொலைத்துவிட்டேன். அப்போது போன் வசதிகள் எதுவும் கிடையாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.
அப்போது டி.டி.ஆர். வந்து டிக்கெட் கேட்க, நான் இல்லை என்றும் என் பெயரை எல்லாம் சாட்சியுடன் நிரூபித்தாலும்...
அவர், “நீங்கள் டிக்கெட் வாங்கவில்லை. புதிதாக டிக்கெட் வாங்க வேண்டும்" என்று சொல்லிவிட்டார்.
என்னிடம் டிக்கெட் வாங்கும் அளவுக்குப் பணம் இல்லாததால் நான் கண்கலங்கி நின்றபோது, என் எதிரே இருந்த இளைஞர் எனக்குப் பண உதவி செய்து டிக்கெட் வாங்கச் சொன்னார். நான் ஊருக்குச் சென்றவுடன் அவருக்கு அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
ஆனால், நான் வணங்கும் சாய்பாபாதான், அந்த இளைஞர் உருவில் வந்து எனக்குப் பண உதவி செய்ததாக இப்போது நினைத்தாலும் என் உள்ளமும் உடலும் புல்லரிக்கும்.
- உஷா முத்துராமன்
2. பாபா தன் கைகளாலேயே கொடுத்த புடவை!
நான் ஜாம்ஷெட்பூரில் வசிக்கிறேன். 2010 ஜூலை மாதத்தில் ‘ஈஸ்வராம்மா தின விழா’வை ஒட்டி ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சத்ய சாய்பாபா பால் விகாஸ் குழந்தைகள், புட்டபர்த்தியில் ‘Maa’ என்கிற டிராமாவை நடத்தினார்கள். அது மகாபாரதத்தில் வருகின்ற ஒரு காட்சி. அதாவது தாய் என்பவள் எத்தனை மதிக்கப்பட வேண்டும்; பெண்களை எப்படிப் போற்றவேண்டும் என்ற கருத்தோடு அந்த நாடகம் நடைபெற்றது.
அந்த நாடகத்திற்காக நானும் குழந்தைகளோடு சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 15 குழந்தைகள் பங்கேற்றார்கள். என் மகளும் அதில் அர்ஜுனனாக நடித்தாள். நான் பாபாவை அப்போதுதான் முதல்முறையாக நேரில் பார்த்தேன்.
நாடகம் நடைபெறும் தினத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். தினமும் குழந்தைகளுக்கான ஒரு தனி இடத்தில் ரிகர்சல் நடைபெறும். அந்தச் சமயங்களில், நானும் என்னுடைய தோழி மற்றும் என்னுடைய மகன் மூன்று பேரும் அந்த புட்டபர்த்தி ஆசிரமத்தை இங்கும் அங்குமாக சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்போம்.
ஒரு நாள் பஜனை நடந்து முடிந்துவிட்டு நாங்கள் வெளியே வந்துவிட்டோம். பிரசாதம் எங்கு வாங்க வேண்டும் என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. பிரசாதம் கிடைக்கவில்லையே என்ற சோகத்தோடு நாங்கள் வந்துகொண்டிருந்தோம்.
அப்பொழுது எங்களின் பின்னால் இருந்து ஒருவர், “அம்மா உங்களுக்குப் பிரசாதம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார். அதுவும் தமிழிலே... அங்கு இருப்பவர்கள் எல்லோரும் தெலுங்கிலேயே பேசிக்கொண்டிருக்கும்போது இவர் மட்டும் தமிழில் பேசினார் என்று நாங்கள் ஆச்சரியமடைந்தோம். அவர் வெள்ளை கலரில் பைஜாமா ஜிப்பா போட்டிருந்தார்.
நாங்களும் “ஆமாம்... பிரசாதம் கிடைக்கவில்லை” என்றோம்.
அவர் தன் கைகளில் இரண்டே இரண்டு லட்டுதான் வைத்திருந்தார். ஒன்றை என் கையில் கொடுத்தார். மற்றொன்றை என் தோழியிடம் கொடுத்தார்... நாங்கள் வாங்கிவிட்டு திரும்பி பார்ப்பதற்குள் அங்கு யாருமே இல்லை. அப்போதுதான் புரிந்தது, அது சாட்சாத் பாபா என்று....
மறுநாள் நாடகமும் நடைபெற்றது. நான் பாபாவிற்கு மிக அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவேமுடியாது. நாடகம் முடிந்த உடனேயே, நாடகத்தில் நடித்த அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பாபா தன் கைகளாலேயே புடவையைக் கொடுத்தார். நான் இன்னமும் அந்தப் புடவையைப் பத்திரமாக பாபாவின் ஞாபகார்த்தமாக எடுத்து வைத்திருக்கிறேன். அந்தப் புடவையை போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறேன்.
இதில் என்ன ஒரு வருத்தம் என்றால், அதற்கு பிறகு பாபாவை என்னால் பார்க்கமுடியாமல் போய்விட்டது. ஆனால், பாபா இன்றும் நம்மோடுதான் இருக்கிறார். என்றென்றும் நம்முடன் இருந்து அவருடைய அருளை வழங்கி நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
- அகிலா சிவராமன்