

பாடகர்கள் வெறும் ராகத்தையும் தாளத்தையும் மட்டும் வலியுறுத்தும் போது இறைவன் அங்கே இருப்பதில்லை. ராகம், தாளம், பாவம் எங்கு இருக்கிறதோ அங்கே தான் இறைவன் இருப்பான். பாடும் போது உணர்ச்சியுடன் பாட வேண்டும். இறைவன் உணர்ச்சியுடன் பாடும் போது தான் நெகிழ்கிறான்; இசைத் திறமையால் அல்ல!
ராகமோ அல்லது தாளமோ நேர்த்தியாக இருப்பது ஒரு விஷயமே இல்லை; அவை உலகியலில் மட்டுமே பெரிதாக ஈர்க்கும். இறைவன் உண்மையான உணர்ச்சியையே விரும்புகிறான்.
அக்பரின் அரசவையில் தான்ஸேன் என்று ஒரு பெரிய இசைக் கலைஞர் இருந்தார். இரவும் பகலும் அவர் பாடுவார். அவரது இசை மிகவும் இனிமையாக இருக்கும். அவரது இசை மிகவும் நேர்த்தியாக இருக்கும் ஆனால் அதில் ஆழ்ந்த உணர்ச்சி இருக்காது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
ஒரு நாள் அக்பரும் தான்ஸேனும் நகர் வலத்தில் நகரம் முழுவதும் சுற்றி வந்தார்கள். வயதான ஒரு மனிதன் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதை அக்பர் கேட்டார். அக்பர் தனது தேரை நிறுத்தி அந்த பக்தன் பாடிய பாடலை அவன் அறியாமலேயே உற்றுக் கேட்கலானார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவரது உள்ளம் வெகுவாக நெகிழ்ந்தது.
அவர் சிறிது தூரம் சென்ற பின் தான்ஸேனை நோக்கிச் சொன்னார்: “நீங்கள் என் முன்னால் நெடுங்காலமாகப் பாடி கொண்டிருக்கிறீர்கள். உங்களது இசை எனது செவிகளுக்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. ஆனால் அது உள்ளத்தை நெகிழ வைக்கவில்லை. உங்களது இசைக்கும் அந்த பக்தனின் இசைக்கும் என்ன வேறுபாடு என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.”
தான்ஸேன் உடனே இப்படி பதில் கூறினார்; “மஹாராஜா! நான் உங்களை மகிழ்விக்கப் பாடுகிறேன். ஆனால் அந்த பக்தனோ இறைவனை மகிழ்விக்கப் பாடுகிறான். அது தான் வித்தியாசம்!”
ஆகவே ஒரு மனிதனை மகிழ்விக்கப் பாடும் பாட்டு உள்ளத்தை நெகிழ வைக்காது. இறைவனை நோக்கி அழைக்கப்படும் போது தான் அது அந்த விளைவை ஏற்படுத்தும். இறைவனை எது மகிழ்விக்கிறதோ அது மட்டுமே தான் மனிதனின் மனதை மாற்றும்.
அந்த பக்தனும் பெரிய பாடகரான தான்ஸேனும் நன்றாகவே பாடினர். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில் பக்தியுடன் கூடிய உணர்ச்சியே இறைவனை ஈர்க்கும்.
1984, ஏப்ரல் மாதம் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஊட்டியில் ஆற்றிய உரை.