
தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் இமயம்’ என்று போற்றப்படும் பாரதிராஜா தன் திரைப்படங்களில் கிராமத்தின் பண்பாடுகளை தத்ரூபமாக காட்சிகளால் வடித்து நகர மக்களைக் கவர்ந்தவர். நடிப்பு ஆர்வம் கொண்ட எண்ணற்ற புதிய முகங்களை தனது படங்களில் அறிமுகப்படுத்தி அவர்களை புகழ் பெற்ற திரைநட்சத்திரங்களாக உயர்த்திய பெருமை இவரையே சாரும்.
கிராமிய மணமும், யதார்த்தமும் நிறைந்த இவரது கதாநாயகிகள் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக கருதப்படுகிறார்கள் எனில் காரணம் அவரது கதையில் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் வலிமை அத்தகையது.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய மற்றும் அவரது படங்களில் முக்கிய கதாநாயகிகளின் முத்திரை பதித்த சில கதாபாத்திரங்களை அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இங்கு நினைவுகூர்வோம்.
படம்- 16 வயதினிலே
கதாபாத்திரம் - மயிலு
1977-ல் வெளிவந்த பாரதிராஜாவின் அறிமுகப்படமான '16 வயதினிலே' திரைப்படத்தில் ஸ்ரீதேவி ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'மயில்'. கல்வியில் ஆர்வமுள்ள, புத்திசாலி மற்றும் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார் ஸ்ரீதேவி. செந்தூரப்பூவே என இளமை வேகத்துடன் பாடி கல்வியறிவு குறைவான அந்தக் காலத்தில் ஆசிரியை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன், கிராமத்து சூழலில் வாழும் 16 வயது சிறுமியாக மயிலின் கதாபாத்திரம் எண்ணற்ற கிராமத்தின் இளம்பெண்களை தங்களையே மயிலாக எண்ணி கனவுகளில் ஆழ்த்தியது எனலாம். கனவுகளுடன் கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் பலம், பாதிப்புகள் மற்றும் அவளைச் சுற்றியுள்ள நிகழ்வுகளில் மயிலு கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது. வயது வேகத்தில், பொருந்தாத மருத்துவரைக் காதலித்து ஏமாந்தது, தன்னையே சுற்றி வரும் சப்பாணியை புறக்கணித்து இறுதியில் வாழ்க்கையில் அழகை விட காதலே முக்கியம் என உணர்வது, தன்னை சீரழிக்க நினைக்கும் கயவனிடம் காட்டும் எதிர்ப்பு என மயிலு இன்றும் நம்மால் நேசிக்கப்படுகிறார்.
படம் -கிழக்கே போகும் ரயில்
கதாபாத்திரம் - பாஞ்சாலி
'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வரும் கள்ளமற்ற வெகுளிப்பெண் பாஞ்சாலியையும் கொஞ்சிப் பேசும் அவள் காதலையும் எவராலும் மறக்க முடியாது. நாவிதர் மகனான பரஞ்சோதி மேல் பாஞ்சாலி வைக்கும் காதலின் போராட்டத்தை கவிதையாக்கிய கதாபாத்திரம். ஒரு இளம்பெண் தனது காதலனுக்காக காத்திருந்து போராடும் பாத்திரம். அதிலும் ஜாதி மற்றும் தீண்டாமை, மூடநம்பிக்கை என அத்தனையையும் கடந்து பின் துரத்தி வரும் கலகக்காரர்களிடம் இருந்து தப்பித்து தன் காதலனுடன் ஓடிச்சென்று கிழக்கில் போகும் ரயிலில் ஏறும் பாஞ்சாலியைப் போலவே அதைப் பார்க்கும் நமக்கும் "தூய காதல் ஜெயிக்கும்" எனும் நம்பிக்கை தரும். தன்னை அடைய நினைக்கும் அக்கா கணவரிடம் காட்டும் சினம், காதலன் எப்படியும் வந்து தன்னை அழைத்துச் செல்வான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை என அறிமுக நடிப்பிலேயே அசத்திய ராதிகாவின் பாஞ்சாலி எப்போதும் நமது நினைவில் இருப்பாள்.
படம் - 'மண் வாசனை'
கதாபாத்திரம் - முத்தழகு
1983 ல் வந்த 'மண் வாசனை' திரைப்படத்தின் முத்தழகு கதாபாத்திரம், தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு யதார்த்தமான பெண் கதாபாத்திரமாகும். பாரதிராஜா தனது எண்ணத்தில் உதித்த வீரப்பெண் 'முத்தழகு' கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரேவதி. இந்த ஒரே படத்தின் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். காரணம் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக அதே சமயம் தன் காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் கம்பீரமான பெண்ணாகச் சித்தரிக்கப்பட்ட முத்தழகு கதாபாத்திரம் ஏதோ ஒரு விதத்தில் ஆணாதிக்கம் மூலம் அடிமைப் பட்டுக் கிடந்த அன்றைய பெண்களுக்கு துணிவு தந்த பாத்திரம் ஆகும். முதல் படத்திலேயே ரேவதி தனது அசாத்தியமான மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். முத்தழகுவின் தூய காதலும் அதற்காக அவர் செய்த தியாகமும் மொட்டுவிட்ட மல்லிகைப் பூவாக இன்னும் மணக்கிறது.
படம்- புதுமைப்பெண்
கதாபாத்திரம்- சீதா
1984-ஆம் ஆண்டு வெளியான 'புதுமைப் பெண்' ணின் நாயகி சீதா பாரதி கண்ட நிஜ புதுமைப்பெண்ணாகவே பாரதிராஜாவின் கதாபாத்திரம் ஆனார்.
பெண்களின் உரிமை, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு எதிரான அவர்களின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பெண்ணியம் பேசும் இப்படத்தின் பிரதான நாயகியான சீதா மிகவும் எளிமையான, அடக்கமான கிராமத்துப் பெண்தான். ஆனாலும் கணவனின் கொடுமைகளை எதிர்த்துப் போராடி, இறுதியில் தன் சொந்த காலில் நின்று ஒரு புதுமைப் பெண்ணாக உருவெடுப்பதே சீதாவின் பலம். சமூகத்தின் பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு பெண் எப்படி சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதை இக்கதாபாத்திரம் வலியுறுத்தும். குறிப்பாக ராமாயண கால சீதாவாக தீக்குளிக்காமல் கணவனின் கொடுமைகளில் இருந்து மீண்டு எழுந்து வரும் உணர்வுபூர்வமான புதுமைப் பெண் சீதாவாக வாழ்ந்து காட்டியிருப்பார் ரேவதி. குறிப்பாக சிறை சென்று வெளியே வரும் கணவன் தனது நடத்தையைச் சந்தேகப்படும்போது, தன் தந்தை தந்த இந்து புனித நூல்களை குழிதோண்டி புதைத்துவிட்டு புயலாகப் பொங்கி எழுந்து படிதாண்டுவதன் மூலம் பெண்களின் துணிச்சலான பக்கத்தை காட்டியிருப்பார்இயக்குனர். இன்றும் பேசப்படும் கிளாசிக் பாத்திரம் தான் சீதா.
படம் - 'கடலோரக் கவிதைகள்' (1986)
கதாபாத்திரம் -ஜெனிபர் டீச்சர்.
டீச்சர் என்றாலே கண்டிப்பான தோற்றமும், தலைமுடியை இறுக்கமாக தூக்கிக் கட்டிய கொண்டையும் என்ற அடையாளங்களை சற்றே மாற்றிக் காட்டி தளரப்பின்னிய கூந்தலுடன் அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தது ஜெனிபர் கதாபாத்திரம். ஆனாலும் டீச்சரின் மற்றொரு அடையாளமான குடையுடன் கடல் மண்ணில் கால்களை புதைந்த படி வந்த அவரது நளினம் ஆஹா ரகம். சிறைவாசம் அனுபவித்த ஒரு முரடனுடனான பழக்கம் அதனால் வரும் மனமாற்றம் என நெருடலான ஆசிரியை மாணவர் காதலை அழகாக வெளிப்படுத்தும் கதாபாத்திரம். முரடன் எனத் தெரிந்தும் அவரை மாற்றி அவர் மீது தனக்கு வருவது வெறும் அக்கறை மட்டுமல்ல காதலும் எனத் தெரிந்து கொள்ளும் தருணத்தில் ஜெனிபர் டீச்சரின் தெளிவு நிம்மதி தரும் பார்க்கும் நமக்கு. கற்றுத்தரும் ஆசிரியைக்கு கற்றுக் கொள்ளும் மாணவர் மீது காதல் வரலாமா? இந்தக் கேள்வி தரும் தர்ம சங்கடமான சூழல் மற்றும் காதலுக்கிடையில் தடுமாறும் ஜெனிபர் டீச்சர் பாரதிராஜா படைத்த பெண் கதாபாத்திரத்திரங்களில் அசத்தல்.
படம் - முதல் மரியாதை
கதாபாத்திரங்கள் - குயில், பொன்னாத்தாள்
சிவாஜி கணேசன் நடித்த மாபெரும் காவியமான முதல் மரியாதையின் பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெவ்வேறு உணர்வு பின்னணி என்றாலும் குறிப்பாக கவர்வது குயில் மற்றும் பொன்னாத்தாள் தான். கிராமத்தில் மரியாதையான பெரியவர் மீது தான் வைத்துள்ளது மரியாதை மட்டுமல்ல காதலும் தான் என ஓடம் ஓட்டும் குயிலுக்கு புரியும் போது நமக்கும் அவரது காதல் கடத்தப்படுவது உண்மை. காதலுக்கு வயது எந்தவிதத்திலும் தடையாகாது என்பதை தனது அழகான அன்பான காதல் செய்கைகளில் உணர்த்திய குயிலுக்கு ஏகோபித்த வரவேற்பு அன்றும் இன்றும்.
அதேபோல பெரியவரின் மனைவியாக வரும் பொன்னாத்தாள் கதாபாத்திரம். தனக்கு கீழ் உள்ள ஆணை சந்தர்பவசத்தால் கணவனாக அடையும் ஒரு பெண்ணின் அடாவடித்தனத்தின் மொத்த உருவமாக வரும் கதாபாத்திரம். தனது கணவர் வேறு பெண்ணிடம் காதல் கொள்வதை அறிந்து ஆவேசமாகும் அதே நேரம் தனது தவறை இறுதியில் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பொன்னாத்தாள் அடக்கம் உள்ள பெண்களிடையே விதிவிலக்கு.
படம் - கருத்தம்மா
கதாபாத்திரம்- கருத்தம்மா
படம் வெளிவந்து 30 வருடங்களுக்கு மேலானாலும் கருத்தம்மா தந்த தாக்கம் இன்னும் குறையவில்லை எனலாம். காரணம்தென்மாவட்டங்களில் நிலவும் பெண் சிசு கொலையை மையமாக வைத்து வறண்ட கிராமத்து மண் சார்ந்த கருத்துக் காவியமாக இருந்ததுதான். தமிழகத்தின் பல மாவட்டங்களில் கள்ளிப்பால் தந்து பெண் குழந்தைகளை பலியிட்டு வந்த நிலையில் பெண்களின் மதிப்பை புரிய வைத்து பெரிய தாக்கத்தையும், விழிப்புணர்வையும் சமூகத்தில் ஏற்படுத்திய படம். .
படத்தின் நாயகியான கருத்தம்மா அந்த வறண்ட கிராமத்தில் வசிக்கும் ஆண்களின் ஆணாதிக்கத் திமிருக்கு அடிபணிந்து போகாதவராக கிராமத்துப் பெண்ணின் தெனாவட்டுடன் வலம் வருவார். நோய்வாய்ப்பட்ட தந்தை, அக்கா, அவள் பிள்ளைகள் , தான் வளர்க்கும் மாடுகள் என அனைத்தையும் நேசிக்கும் பெண்ணாக இருப்பார். குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்புகளையும், ஒற்றை ஆளாகச் சுமந்து தனது சுயத்தை அழுத்தமாக பதிவு செய்வார். பெண் சக்தி பெரும்சக்தி என கையில் வெட்டறிவாளோடு ஆண் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து ஆணாதிக்கத் திமிரோடு தன்னை பலவந்தம் செய்ய முனையும் மைத்துனனையும் கிராம சேர்மனையும் ஈவு இரக்கமின்றி கருத்தம்மா செய்யும் கொலை கிராமத்து பெண்ணியத்தின் மறுபக்கம். குறிப்பாக பாரதிராஜா தன் தாயின் பெயரான கருத்தம்மாவை அதன் தைரியமான கதாநாயகிக்கு வைத்து கால முழுவதும் அப்பெயரை நிலைக்க செய்தது சிறப்பு.
படம் - கிழக்கு சீமையிலே
கதாபாத்திரம் - விருமாயி
தமிழ் மண்ணின் சகோதர பாசத்தை சற்றே மிகையான உணர்வுகளுடன் சொன்ன படம் தான் கிழக்கு சீமையிலே. அண்ணன் தங்கைகளை அழ வைத்த உணர்வுப்பூர்வமான கிராமியத் திரைப்படமாகும். இதில் தங்கையாக வரும் விருமாயி கதாபாத்திரம் பாசமான அண்ணன் மற்றும் கணவரின் இடையே நடக்கும் ஈகோ வில் மாட்டிக்கொண்டு பிரச்னைகளை சந்திப்பது சாட்சாத் நமது குடும்பங்களில் நிகழ்வதைப் போல என்பதுடன் அந்தப் பாத்திரத்தில் நடித்த ராதிகா மற்றும் அண்ணனாக நடித்த விஜயகுமாரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
அண்ணன்-தங்கைக்கு இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு கல்வெட்டாக அமைந்ததற்கு காரணம் இறுதியில் அண்ணனைக் கொல்ல நினைக்கும் கணவர் கட்டிய தாலியை கழட்டி எறிந்து பாசமுமள்ள தங்கையாக அண்ணன் மடியில் இறக்கும் காட்சியும் எனலாம். அண்ணனிடம் பேசக்கூடாது எனும் கணவரின் கட்டளையை மீள முடியாமல் தவிக்கும் விருமாயி ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியாக எப்போதும் ரசிக்கப்படுகிறாள்.
படம் - அலைகள் ஓய்வதில்லை
கதாபாத்திரம் - மேரி
காதலுக்கு இலக்கணம் எழுதி அன்றைய இளைஞர்களுக்கு புது உற்சாகம் தந்த 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தில் அறிமுகக் கதாநாயகியாக ராதா ஏற்று நடித்த கதாபாத்திரம் தான் மேரி. வசதியான ஆனால் பழமைவாத கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக சமூகக் கட்டுப்பாடுகள், மதம் மற்றும் சாதி தடைகளைத் தாண்டி, ஏழை பிராமண இளைஞனைக் காதலிப்பவராக இளமைத் துள்ளலுடன் நடித்த மேரி அன்று இளைஞர்களின் கனவுக்கன்னி ஆனவர். கோபக்கார அண்ணனை எதிர்த்து வேற்று மத இளைஞனை தீவிரமாகக் காதலிக்கும் துணிச்சலான இளம்பெண்ணாக அசல் கிறித்துவப் பெண்ணாகவே மாறி இருந்தார் . காதலுக்காக தன்னை பாசமுடன் வளர்த்த அண்ணனையே எதிர்த்து காதலனுடன் இணையும் இளம் பெண் மேரி சாதி மதம் கடந்த தூய்மையான காதலின் அடையாளமாகவே பார்க்கப் படுகிறாள்.
இவர்கள் மட்டுமல்ல பாரதிராஜாவின் பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு புதிய செய்தியை நம்மிடத்தில் கடத்துபவர்களாகவே இருப்பது ஆச்சரியம்.