
“தமிழ்த் திரை உலகின் இமயம் விண்ணோடு...
அவர் நினைவுகள் நம்மோடு...
தமிழ்த் திரை உலகின் இமயம் விண்ணோடு...
அவர் நினைவுகள் நம்மோடு”...
ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்களை முதன் முதலாக வெளிப்புறப் பகுதிகளுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர்.
திரை மொழியில் தனி மொழி பேசியவர்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி சகாப்தத்தை உருவாக்கியவர்.
கிராமத்து மக்களின் எதார்த்த வாழ்க்கையை அதன் உணர்வுகளோடு கடத்துவதில் சமர்த்தர். ஒப்பனை இல்லாமல் எளிய மனிதர்களாக உலாவும் கதாபாத்திரங்கள். அவரின் பிளஸ்.
சின்னக் கிராமம், பெட்டிக்கடை நடத்தும் பெண்மணி, டீச்சராக வேண்டும் என கனவு காணும் அவரின் மகள், யார் என்ன சொன்னாலும் வேலை செய்யும் ஒரு அப்பாவி இளைஞன் , கோமண உடை பொழுதுக்கும் வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டே விந்தி விந்தி நடப்பவர், ஊர்வம்பு பேசி வாழ்க்கையை கடத்தும் நக்கலான நபர்... சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா... இவர்கள் எத்தனை யுகங்கள் ஆனாலும் நம் மனதில் புத்தம் புதுசாய்..
'ஆத்தா நான் பத்தாம் வகுப்பு பாஸ் ஆயிட்டேன்' என வரப்பு மேல் ஓடிவரும் ஸ்ரீதேவி டாக்டரிடம் பேசுறப்போ காதலை கண்கள் வழியே கடத்தும் காட்சி..
'ஆசை தோசை அப்பள வடை'ன்னு கமல்கிட்ட சொல்றப் போ... மூஞ்சியை சுழித்து ஒரு புன்னகைக்கும் சீன்..
‘ஐ லைக் யூ’ ன்னு மயில் சொல்றப்போ கமல் தன்னைத்தான் அப்படி சொல்றாரு நினைச்சி சந்தோஷப்படுற சீன்... இப்படி கிராமத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உண்மைக்கு பக்கத்தில் சென்று படம் பிடித்து இருப்பார் இந்தப் படத்தில்.
சமூகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகள் மற்றும் மூடநம்பிக்கைகளை தைரியமாக வேதம் புதிதில் சாடியிருப்பார்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இந்த படத்தின் வசனங்கள் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வேதம் புதிது ... நினைவுக்கு வரும் இரண்டு குறிப்பிட்ட வசனங்கள்.
'பல்லக்குல வர்ற சாமிக்கு கால் வலிக்கும்ன்னா அந்த பல்லக்கு தூக்கி வரவாளுக்கு கால் வலிக்காதா?'
'பாலுன்றது உங்க பேருன்னா...தேவர்ன்றது நீங்க வாங்கின பட்டமா..?'
சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அது பிறப்பால் வருவதில்லை என்பதை இப்படி சமூகநீதி வசனங்கள் மூலம் சொல்லி, சாதிப்பித்து பிடித்த அனைவரின் முகத்திலும் அறைந்திருப்பார் இயக்குனர் இமயம்.
கண்பார்வையற்ற பக்தி பாடகன் ஒருவருக்கும், தாயாரின் விருப்பப்படி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே மலரும் காதல்; அதனால் ஏற்படுகின்ற உணர்வு பூர்வமான சிக்கல்களை... கவித்துவமாக பாடலின் மூலம் காட்சி இருப்பார் இமயம்.
படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் உன்னதக் கலைஞனின் இசைக்கதறலாய்...
இந்த யுகத்தில் இனி ஏதும் இந்த மாதிரி பாடல்கள் கிடைக்காது.
இயக்குனர் இமயம் - இசைஞானி - வைரமுத்து - எஸ்பிபி காம்போ வில்... நெஞ்சு குழிக்குள் இறங்கி உயிரை அறுக்கும் பாடல்கள் இவரால் மட்டுமே சாத்தியமானது.
கடலோரத்தில் பாடம் படித்தல், நீரில் மூழ்கி வலம்புரி சங்கு எடுத்து வருதல், கிறிஸ்தவ மத செல்வாக்கு, மீனவர்களின் வலைகளை சீரமைத்தல் இப்படி நெய்தல் நிலத்துக்கான காட்சிகளை அழகாக அடுக்கி அதில் கடலோரத்தில் நிகழும் காதலை கவிதையாக காட்டிருப்பார்.
உறவுகளால் பிரித்து வைக்கப்பட்ட காதலர்கள் இறுதியில் இறப்பில் கட்டி தழுவும் அந்த ஒரு காட்சி போதும் பாரதிராஜாவின் இயக்கத்தைப்பற்றிப் பேச. ...
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காதல் பாடல் வரிசையில் முதலிடத்தில் ‘கொடியிலே மல்லிகை பூ’ தான் அதன் காட்சி அமைப்புகள் தான். (மணலில் ஏபிசிடி இசட் வரை அழகான கவிதை)
ராதா என்கிற இளம் பெண், கிராமத்து தலைவர் இந்த இரண்டு மனிதர்களையும் வயது மட்டுமல்ல சாதி மற்றும் வர்க்கத்தினாலும் பிரிக்கும் அன்பு... கடைசியில் கிளைமாக்ஸில்...
பாடல்களைக் கொண்டு நிரப்பி இருந்த விதம்... காதலை கவிதையாய் வடித்து இருப்பார்.
எல்லோரும் மனசிலும் முதல் மரியாதை
காதலாய் (இ) என்றும்...!
கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை... கிராமத்து பின்னணியில் ஒரு வலுவான காதல் கதை என்றே சொல்லலாம்.
இரைச்சலான இசை,
புரிதலற்ற பாடல்கள்,
இரட்டை அர்த்த வசனங்கள்,
நம்ப முடியாத ஹீரோயிசம்,
செயற்கை தனமான காட்சிகள்... இவைகள் அற்ற ஒரு நல்ல திரைப்படங்கள்தான் இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும்...
தன் தாய் ‘கருத்தம்மா’வின் பெயரில் வெளிவந்த படத்திற்கான தேசிய விருதை தன் தாயே பெற்றுக் கொள்ள வைத்த பெருமைக்கு உரியவர்.
திரை உலகில் இவரது பயணம் நீண்ட பயணம். அந்த மகா கலைஞனின் வாழ்க்கையில் இருந்து ஒரு சில படங்களை மட்டும் நினைவு கூர்ந்து உள்ளேன்.
'நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்'
இன்று இந்தக் குரல் மௌனமாகி போனாலும்...
அவர் உருவாக்கிய கதைகள், கதாபாத்திரங்கள் தலைமுறைகள் கடந்தும் வாழும்... சந்தேகமே இல்லை.