

காதல் போதைகொண்டு கன்னியைக் கண்டதும்,
கண்ட இடமெல்லாம் சுற்றும் கட்டழகா!
காதல் ஒரு காட்டாறு; கனவு காணாதே.
காற்றில் மிதக்காதே; கவிழ்ந்து விடுவாய்.
கவனமாய் இரு.
கவலைக்குக் கடிவாளம் போடு.
பிரிந்திருக்கும் காதலியை
நினைத்துக் கண்ணீர் வரும்
என்று நினைத்த அவனுக்கு,
முகத்தில் வியர்வைதான் வந்தது; திருமணத்திற்குப் பின்
அவள் கொடுக்கும்
தொல்லையை நினைத்து.
நெருப்பில் கை வைத்தால்
சுடும் என்று தெரிந்தும் விரல் வைத்தேன்.
விரல் சுடவில்லை; ஏனென்றால்
அவள் சுடும் வார்த்தையை விட,
நெருப்பின் வலி பெரிதாகத் தெரியவில்லை.
பூ விற்கும் இளம்பெண்ணிடம் கேட்டேன்,
"ஏன் உன் தலையில் பூ இல்லை?" என்று.
அவள் சொன்னாள், "நான் விற்கத்தான் முடியும்,
பூ வைத்துக்கொள்ள முடியாது," என்று.
மனது வலித்தது.
"கண்ணாடியில் பார்த்தால் முகம் தெரியும்," என்றார்கள்.
நானும் சென்று பார்த்தேன்.
என் முகம் கண்ணாடியில் தெரிந்தது;
ஆனால் என்னால், என் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
மாலையில் மல்லிகைப் பூ மணம்
என்னை மயக்கும் என்று நினைத்தேன்; மயக்கவில்லை.
எனது மனைவியின் தலையில் வைத்தவுடன் மயக்கம் வந்தது.
பூ வாசனையைப் பார்த்து அல்ல;
பூ வைத்தவுடன் என் மனைவியின் அழகைப் பார்த்து.