

அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எப்போதுமே காலேஜ் பீஸ் அவன்தான் கடைசியில கட்டுவான். எல்லா ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவான். அவன் என்ன செய்வான் பாவம்! அவன் குடும்ப சூழ்நிலை அப்படி இருந்தது. அவளுடைய அம்மாட்ட கேட்கும் போது, அவளும் இப்ப தாரேன், அப்பறம் தாரேன்னு கடைசி நேரத்துல அடிச்சு புடிச்சு பணத்தை புரட்டி மகன்ட்ட கொடுத்து விடுவாள். அவனும் கடைசி நேரத்தில கட்டிடுவான்.
“அம்மா இந்த செமஸ்டர் 5,000 ரூபாய் கட்டணும்.”
“அப்படியா சாமி! கொஞ்சம் காசு கம்மியா தான் இருக்கும்னு நினைக்கிறேன். இந்த ஒரு வாரம் களை எடுத்துக்கிறேன். ஏதாவது கொஞ்சம் பணம் கிடைக்கும். அதுக்கப்புறம் பத்தாட்டி என்னோட கல்லுத்தோடு தான் அடகு வைக்கணும்”
“மூணு மாசத்துக்கு முன்னாடிதாம்மா குடிசை ஒழுகுதுன்னு மராமத்து பாக்கணும்னு கல்லுத்தோட அடகு வச்சு அதுல கிடைச்ச 4,000 ரூவாய வச்சு குடிசை போட்டோம்! அதுக்கப்புறம் இப்பதான் கல்லுத்தோட திருப்பி காதுல போட்டு இருக்க, மறுபடியும் அடகு வைக்கணுமா? எத்தனை தடவைதான் அந்த கல்லு தோடையும் நீயும் அடகு வைப்ப, திரும்பி திருப்புவ எனக்கே சங்கடமா இருக்கு!”