மரணமில்லா பிரசவம் பார்க்கும் TN மாவட்டம்!

7,991 பிரசவங்கள்; ஆனால் ஒரு பிரசவகால உயிரிழப்பும் பதிவாகவில்லை..!
Births
Baby With Mom
Published on

கருவுற்ற பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவியாகவே கருதப்படுகிறது. பிரசவத்தின் போது தாய்க்கோ, சேய்க்கோ மரணம் ஏற்படுவதை தடுப்பது மகப்பேறு சுகாதாரத்தில் சிறப்பு கவனம் பெறுகிறது. பிரசவ கால இறப்பு விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 70 பேர் என்ற இலக்கினை  அடைய இந்தியா உறுதி பூண்டுள்ளது.

பேறுகால இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவில், கேரளம், மகாராஷ்ட்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவாக 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில், பேறுகால இறப்பு விகிதம், ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 58 என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடிகள் மூலமாக சத்து மாவு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மேலும் 2,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு பெட்டகங்கள் நான்கு மாதத்திலும், ஆறு மாதத்திலும் வழங்கப்படுகின்றன. அந்தப் பெட்டகங்களில், ஒரு கிலோ புரோட்டீன் பவுடர், நெய், ஒரு கிலோ பேரீச்சம்பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், ரூ.18,000 பணம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குழந்தை பிறந்து ஓராண்டு வரை அக்குழந்தையைக் கண்காணிப்பதும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் பணியாக உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் ஆட்சியர் 2022ஆம் ஆண்டு அரசு, தனியார் மகப்பேறு மருத்துவர்களை ’விருகேர்’ செயலி மூலம் ஒருங்கிணைத்துள்ளார். இம்மாவட்டத்தில் 75% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. இச்சுகாதார மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையில் 7,991 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அதில் ஒரு பிரசவகால உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன் மூலம் விருதுநகர் சுகாதார மாவட்டம், தமிழ்நாட்டில் பேறுகால சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைப் புரிந்துள்ளது.

2022-2023ஆம் வருடத்தில் பதிவான 8,483 பிரசவங்களில் ஆறு கர்ப்பிணிகள் மட்டுமே பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி இரண்டு சுகாதார மாவட்டங்களில், சிவகாசி மாவட்டத்தில் அதே காலகட்டத்தில் இரண்டு பிரசவ மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
பெண்கள் தன்னம்பிக்கை பெற சில டிப்ஸ்!!!
Births

அங்குள்ள பெண்களுக்குத் திருமணமானதும் கர்ப்பமானால் உடனடியாக அதை பதிவு செய்து விடுகிறார்கள். இதுதவிர, கர்ப்பிணிகளுக்கு தட்டம்மை, டிப்தீரியா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மேலும், ஃபோலிக் அமிலத்திற்கான மாத்திரைகளைத் தவறாமல்  எடுத்துக் கொள்கின்றனர். மேலும், இரும்புச் சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ‘இரும்புப் பெண்மணி’ எனும் உள்ளூர் திட்டத்தின் வாயிலாக, தேவைப்படும் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள், இரத்தம் ஏற்றுதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதுகாப்பான பிரசவத்துக்காக கருவுற்ற நாள் முதல் தீவிரமான மருத்துவ கண்காணிப்பின் கீழ் கருவுற்ற தாய்மார்கள் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இது சார்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

இயற்கையான சுகப்பிரசவத்தையே கருவுற்ற தாய்மார்கள் விரும்புகின்றனர். எனினும், தவிர்க்க இயலாத சூழ்நிலையில் தாய்-சேய் இருவரின் நலன் கருதி மருத்துவர்களால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும் நிலையில், பெற்றோர்கள் அதற்கு ஆயத்தமாகுகிறார்கள். இருப்பினும் பிரசவ கால இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க முடிவதில்லை. இதற்கு பெரும்பாலும் கருவுற்ற தாய்மார்களுக்கு  தம் உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆகும்.                      

இதையும் படியுங்கள்:
எண்டோமெட்ரியோசிஸ் வந்தால் செயற்கை கருத்தரிப்பு தான் தீர்வா..? - மருத்துவர் விளக்கம்!
Births

இந்நிலையில் விருதுநகரில் தொடங்கியுள்ள இந்த மரணமில்லா பிரசவம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அப்போதுதான் அறிவியலும், மருத்துவ கண்டுபிடிப்புகளும் நாட்டின் கடைமகனைக் கூட சென்றடைந்து விட்டதாய் நாம் பெருமை கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com