பெண் என்பவள்
பல்வேறு வடிவமாய் நிறைந்து நிற்பவள்!
தேயாத அறிவு கூர்மைக்கு சொந்தக்காரியும் அவள் தான்!
சில நேரங்களில் தேற்றுதலுக்கு கூட ஆளின்றி தவிப்பவளும் அவள் தான்!
மூச்சுக்காற்றில் கூட
முன்னேற்றத்தை சுவாசிப்பவளும் அவள் தான்!
சில நேரங்களில் மூச்சு விடக் கூட நேரமின்றி
உழைத்துக் கொண்டிருப்பவளும் அவள் தான்!
தாயாய் மாறி
அனைவரையும் தாங்குபவளும் அவள் தான்!
சில நேரங்களில் தோள் சாய கூட துணை இன்றி
குழந்தையாய் மாறி அழுபவளும் அவள் தான் !
குடும்பத்தில் அனைவரின்
நேரத்தையும் நிறைத்து நிற்பவளும் அவள்தான்!
சில நேரங்களில் தனக்கென கொஞ்சம் நேரம் கிடைக்காதா?
என ஏங்குபவளும் அவள் தான்!
எல்லோரையும் தாங்குவதில்
பூமாதேவியும் அவள் தான்!
சில நேரங்களில் ஆறுதல் சொல்ல கூட ஆள் இன்றி
வறண்டு போகும் பாலைவனமும் அவள்தான்!
தேடித் தேடி அனைத்தையும்
கற்றுக்கொள்பவளும் அவள்தான்!
கற்றவை அனைத்தையும் மொத்தமாய் கட்டி வைத்து விட்டு
சமையல் கட்டில் கால் தடுக்க நிற்பவளும் அவள் தான்!
குழந்தைகளையும் குடும்பத்தையும்
தாங்கிப் பிடிக்கும் கோபுரமும் அவள் தான்!
தன் நிழலை தாங்கிப் பிடிக்க துணையில்லாத
கோபுர கலசமும் அவள் தான்!
பார் போற்றும் படித்தோர்களே!
உங்களிடம் கேட்பதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்!!
பெண்ணை 'ஆகா! ஓகோ!' என ஒருபோதும் புகழ வேண்டாம்!
அவளுக்கும் ஒரு மனசிருக்கு
புரிந்து கொள்ளுங்கள் போதும்!