கவிதை: தீங்கறியா நாயகியே!
தீங்கறியா நாயகியே!
நன்றி மிகக்கொண்டோர்
நானிலத்தில் உயர்ந்திடுவர்!
கல்வி ஒன்றுதான்
கடினமான இவ்வாழ்க்கையை
எளிதாக்கும் ஒரே ஆயுதம்
என்பதே பேருண்மை
எதுவுமில்லை அதற்கீடு!
பள்ளிப் படிப்பும்
பட்டங்களும் மட்டுமே
கல்வி என்றெண்ணாதீர்
கற்கும் தொழிலனைத்தும்
கல்வியின் பாற்பட்டதே!
கண்களை ஒளியாக்கும்
கல்வி என்பதனால்
பெண்மையின் பிறப்பிடமாம்
பெருமைமிகு சரஸ்வதியை
அதற்குத் தனித்தலைவியாய்
ஆக்கியே வைத்திட்டார்!
வெள்ளைத் தாமரையில்
வீற்றிருந்து அவருந்தான்
வெள்ளாடை தரித்தே
விளம்புகிறார் அமைதியினை!
கற்றிட்டால் கனிவுவரும்
கற்றதனால் உயர்வுவரும்!
உள்ளத்தில் உயர்வுவந்தால்
உலகினிலே அமைதிவரும்!
அமைதியே இன்றைய உலகின்
அவசர மாமருந்து!
கலைமகள் சரஸ்வதிக்குக்
கனிவுடனே நன்றி சொல்லும்
சாந்ததினமே சரஸ்வதி பூஜை!
இந்த நன்னாளில்
இறைவி அவருக்கு
உளமகிழ்ந்து அனைவருமே
உதிரத்தால் நன்றி சொல்வோம்!
உயிரற்ற பொருட்களையும்
உயர்வாய் நாம்மதிப்பதனால்
எந்திரங்கள் ஆயுதங்கள்
என்றைக்கும் நமக்குதவும்
அஞ்சறைப் பெட்டிமுதல்
அடுக்களைப் பொருட்களுக்கும்
தெய்வ சன்னிதானத்தில்
சிறப்பாக நன்றி சொல்லும்
ஆயுதபூஜை தனையும்
அகமெலாம் மிக மகிழ்ந்து
ஆனந்தமாய்க் கொண்டாடிவோம்!
தாயே சரஸ்வதியே!
சங்கடங்கள் தனைநீக்கி…
ஏஐ(AI) உலகிற்கு
இன்பம் மட்டும்
தரும் விதமாய்…
பலபேர் வாழ்க்கைக்குப்
பாதகமாய் அமையாமல்
பார்த்துக்கொள் தாயே!
இனிவரும் நாட்களிலே
இவ்வுலகம் அமைதியிலே
திளைத்திடவே வழிசெய்வாய்
தீங்கறியா நாயகியே!