
அப்பா அயல்நாட்டிலிருந்த
அந்த நாட்களில்…
விடுமுறை நாட்களில்
வீட்டார் அனைவரும்…
லேண்ட் லைனைச்சுற்றி
நின்றிருப்போம் பேச!
இப்பொழுது அதெல்லாம்
வரலாறாகிப் போச்சு!
வெள்ளத்தின் திட்டினைப்போல்…
அவரவர் அறைகளிலமர்ந்து
கைகளில் இதனுடன்
கரைகிறது காலம்!
மலையில்… வயலில்…
மரத்தின் மேலும்…
ஓடும் ரயிலிலும்…
ஒதுங்கும் இடங்களிலும்…
ஆட்டோ… ஆம்புலன்ஸ்…
அங்கு இங்கென்று…
எங்கிருந்த போதும்
இதுதான் கைகளில்!
உலகம் இதனுள்
ஒன்றாய் அடக்கமாம்!
வங்கியில் பணமும்
பாக்கெட்டில் இதுவும்
இருந்தால் போதும்
இனிதாகும் வாழ்க்கை!
பள்ளியில் படிக்கும்
பாலகர் தமக்கு…
எட்டா உயரத்தில்
இதனைவைத்த நமக்கு…
ஆப்பு வைக்கவென்றே
வந்தது கொரோனா!
பள்ளி நிர்வாகங்கள்
பரப்பியது ஆணை!
இருப்பதைக் கொடுங்கள்!
இல்லையெனில் இன்றே
வாங்கிக் கொடுங்கள்!
வருங்காலப் பாடங்கள்
இதன் மூலமென்றே
இயம்பின பள்ளிகள்!
பிஞ்சுக் கரங்களிலும்
இவற்றின் ஆதிக்கம்
இறங்கிற்று வலுவாய்!
ஒவ்வொருவரும் இதனுடன்
ஒன்றாகி விடுவதால்…
எங்கும் எப்பொழுதும்
இயல்பான அமைதி!
வியப்பான விஞ்ஞானத்தின்
வியத்தகு சாதனமிது!
இதனுள் பணமில்லை!
இருந்தாலும் நாள்தோறும்
பலகோடி ரூபாய்களைப்
பரிவர்த்தனை செய்கிறதிது!
நன்மையைப்போல் தீமைகளும்
நாளும் நடந்திடவே
காரணமாய் இதுவிருந்தாலும்
கடுங்குற்றம் நம்மீதே!
இது எதுவென்று
ஏற்கெனவே அறிந்திருப்பீர்!
கைபேசி செல்பேசி
கதைசொல்லும் மொபைலென்று
ஏகமாய்ப் பலபெயர்கள்!
இதிலும் பலவகைகள்!
சட்டைக்கு ஒன்று
பேண்டுக்கு மற்றொன்றென்று
இரண்டு மூன்றுவைத்திருக்கும்
இளைஞர்கள் பலருண்டு!
'ஒன்றிருக்க ஒன்றுவந்தால்
அமைதி என்றுமில்லை!'
என்ற வரிகள்
இவற்றுக்குப் பொருந்தாதோ?!
போகுமிடம் காட்டுமிது!
புயல்வந்தால் சொல்லுமிது!
நாட்டு நடப்பினையே
நாளும் உணர்த்துமிது!
ஏட்டுப் படிப்பினையும்
இதன்மூலம் கற்றிடலாம்!
காட்டு வழியினிலும்
கனிவான நண்பனிது!
உயர்வான இச்சாதனத்தை
நல்லதுக்கு மட்டுமே
நாளும் உபயோகிப்பதென்று
உளமார உறுதியேற்று
உண்மையாய்ச் செயல்படுவோம்!