

இரண்டு முழு பக்கெட் நீரை எடுத்து தடாலென்று அருணின் தலையில் வேகமாக ஊற்றினான் ரமேஷ். ”ம்..” என்றான் அருண் முனகலுடன். முன்னறிவிப்பில்லாமல் இன்னொரு தடவை வாந்தி எடுத்துவிட்டு கால்களை வசதியாக மடக்கி ஈரத் தண்ணீரிலேயே படுத்துக் கொண்டான்.
“ஊஹூம், எனக்கு நல்லாத் தெரியும்ப்பா. இந்த நாயை எழுப்பறது வேஸ்ட். இவன் அவ்வளவு சீக்கிரத்துல எந்திரிக்கமாட்டான்.”
தண்டபானி தன் அத்தனை கோபத்தையும் திரட்டி அருணின் கன்னத்தில் கனமாக அறைந்தார். அவனுக்கு உறைக்கவில்லை. உட்கார வைக்க.. விழுந்தான். மீண்டும் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து ரப்ரப்பென்று முகத்தில் அறைந்தார்.
“ம்ஹூம். ரமேசு, என்னால முடியலை. யாரையாவது உதவிக்கு கூப்பிடு. வேற ஏதாவது செஞ்சு பார்க்கலாம்...” என்றார் பரிதாபமாக.
சட்டென்று கதவு திறந்து சினேகாவின் தாய்மாமா மாணிக்கவினாயகம் எட்டிப் பார்த்தார். “ஓ.. மாப்பிள்ளை இங்கே இருக்காரா. அவரு ரெடி ஆகிட்டாருன்னா வினாயகர் கோவிலுக்குக் கிளம்பலாம். மாலை எங்கே?”
பாத்ரூமில் பார்வை போய் அவரை அதிர்ச்சி தாக்கியது. ”அய்யய்யோ என்னாச்சு மாப்பிள்ளைக்கு.. கீழே விழுந்துட்டாரா.? இதென்ன அலங்கோலம். என்னாச்சு இவருக்கு..?” பதட்டத்தில் கத்தினார்.
”ஒண்ணும் ஆகலை, ஒண்ணும் ஆகலை..” தண்டபானி திணறினார். ”ராத்திரி சாப்பிட்ட சரக்கு கொஞ்சம் அதிகமாகி..”