
“முதலாளி...” என்றேன் இழுவைக் குரலில்.
ஏதோ கணக்கு சரிபார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்... பார்வையில் ‘என்ன..?’
“வந்து.. என் சம்சாரத்துக்கு கொஞ்சம் உடம்பு முடியலை. ஏதோ வைரஸ் காய்ச்சலாம். ரெண்டு நாளா ராஜசண்முகம் ஆஸ்பத்திரியில கெடக்குறா. குளுகோஸ் ஏத்திட்டிருக்காங்க...”
‘ம்..’ என்றார். அப்படியென்றால் ’சரி அதுக்கு..?’ என்று பொருள்.
“கொஞ்சம் பணமும், அரை நாள் லீவும் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும் முதலாளி. நான் கூட இருந்தா என் சம்சாரத்துக்கு ஆனை பலம். பக்கத்தில் அவ அம்மா துணைக்கு இருக்கிறார் தான். இருந்தாலும்..."
சிறிது நேரம் எங்கோ பார்த்து யோசித்தார். “சரி அப்புறம் பார்க்கலாம்...” என்றார்.
அந்தத் தொனியிலிருந்து எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்னால். ஒருவேளை காத்திருக்கச் சொல்கிறாரோ. சிறிது நேரம் நிற்கலாமா?
அவரோ என்னை மறந்து மீண்டும் கணக்குகளில் மூழ்கினார். நான் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் சில வினாடிகள் நின்றிருந்தேன். சட்டென நிமிர்ந்து பார்த்தவர் கொஞ்சம் கோபமாக முறைத்தார்.