சிறுகதை: கற்பூர தீபம்!

Tamil Short Stories - Karpoora Deepam
A girl selling Guava to a Man
Published on

அந்த ரயில்வே கிராஸிங் சிக்கனலில் சிகப்பு விளக்கு எரிவதை பார்த்து நின்ற வாகனங்களுக்கு பின்னால்… ஆனந்தும் காரை நிறுத்தினான்.

அப்போது வெள்ளரி, மாங்காய், அன்னாசி பழ துண்டுகளை கூடைகளிலும், பாலிதீன் பைகளிலும் வைத்தபடி, சிலர், வாகனங்களை சூழ்ந்து கொண்டு, விற்க முயற்சி செய்தனர்.

"அண்ணா, இந்த கொய்யா பழங்களை வாங்கிக்கோங்கண்ணா "

அந்த கூட்டத்தில், ஒரு பத்து பதினோரு வயதை ஒத்த சின்ன பெண் பழங்களை கையில் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்ததை, அவன் கவனித்தான்.

அவள் கருமையான நிறத்தில் இருந்தாலும்... பார்க்க லட்சணமாக இருந்தாள். அவள் அணிந்திருக்கும் கிழிந்த, அழுக்கான உடைகளுக்கு பதில், நல்ல உடைகளை அணிந்திருந்தால்... இன்னும் அழகாக இருப்பாள் என்று நினைத்தான்.

கை நிறைய கொய்யா பழங்களை வைத்திருந்தவள், ஆனந்த் பார்ப்பதை கவனித்து விட்டு, அவனுடைய காரில் முன்பக்கம் வந்து நின்று, கெஞ்சுகிற தொனியில் கேட்டாள்.

"அண்ணா, கொய்யாபழம் வேணுமா அண்ணா… இந்தாங்கண்ணா. வாங்கிக்கங்கண்ணா"

வார்த்தைக்கு ஒருமுறை ‘அண்ணா’ என்று அழைக்கும் அந்த பெண்ணின் குரலில் தெரிந்த கரகரப்பு தொனி… அவன் மனதை என்னவோ செய்தது.

அவள் முகத்தில் வறுமையின் சிரமங்களை தாண்டி... ஏதோ ஒரு மலர்ச்சி, தெளிவு தெரிவதாக அவன் மனதில் பட்டது.

"அண்ணா… இந்த பழங்கள்.. ரொம்ப சுவையாக இருக்கும் அண்ணா… கிலோ எழுபது ரூபாய் தான்... வாங்கிக்கோங்கண்ணா"

அவனுக்கு அப்போது பழங்கள் வாங்குகின்ற எண்ணம் ஏதும் இல்லை. இருந்தாலும் அவள் திரும்ப திரும்ப அண்ணா என்று அழைத்து கேட்பதால், அவளுக்கு ஏதாவது உதவி செய்யலாமே என்று நினைத்தான்.

"எனக்கு பழங்கள் எதுவும் வேண்டாம்மா. இந்தா, இந்த பணத்தை வாங்கிக்கோ." என்று ஒரு நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்தான்.

"அண்ணா.., சும்மா பணத்தை மட்டும் குடுத்துட்டு பழங்கள வாங்காம போகாதீங்க.! இப்ப சாப்பிடலைன்னாலும் அப்புறமா வீட்டுல போய் சாப்பிடுங்க. இல்லைன்னா உங்க வீட்ல அண்ணி, குழந்தைகளுக்கு சாப்பிட குடுங்க. இந்த கொய்யா பழம் ரொம்ப ருசியா இருக்கும்"

அவனிடம் வெறுமனே பணத்தை மட்டும் வாங்க விரும்பாமல், பழங்களை அவனிடம் விற்க விரும்பினாள்.

"இல்லம்மா எனக்கு இப்ப பழம் எதுவும் வேண்டாம். வீட்டில நிறைய வாங்கி வைச்சுருக்கேன். உனக்கு இந்த பழத்தை வித்தா ஏதாவது ஐந்தோ… பத்தோ கமிஷன் கிடைக்கும். இந்த பழங்களை வேறு யாருக்காவது கொடுத்துடு. இந்தா இந்த பணத்தை மட்டும் வாங்கிக்கோ..."

ஆனந்த் அவளிடம் பழங்களை வாங்காமல், திரும்பவும் பணத்தை நீட்டினான்.

"இல்லண்ணா... இப்ப பணத்தை மட்டும் வாங்கிகிட்டா, அது நான் உங்ககிட்ட இலவசமாவோ, இல்ல கடனாவோ வாங்கின மாதிரி இருக்கும். ஆனா, நான் வியாபாரம் பண்ணி சம்பாரிக்கணுமின்னு நினைக்கிறேண்ணா!”

"அட பரவாயில்லம்மா... உனக்கு இந்த அண்ணன் செய்ற உதவியா நினைச்சு வாங்கிக்கம்மா "

“வேண்டாண்ணா... தப்பா நினைச்சுக்காதீங்க! ஒரு தடவை இப்படி பணத்தை வாங்கிட்டா… தினமும் இது மாதிரியே யாராவது கொடுக்க மாட்டாங்களான்னு தோண ஆரம்பிச்சிடும். ஆனா தினமும் உங்களை மாதிரி யாரும் கொடுக்க மாட்டங்களேண்ணா! அதனால நீங்க குடுக்கிற பணத்துக்கு, இந்த பழங்களை வாங்கிக்கங்கண்ணா. அதுதான் நீங்க எனக்கு செய்ற உதவியாக இருக்கும்."

அவள் மிகவும் தெளிவாக உறுதியாக பேசவே...

அவளுடைய பேச்சிலிருந்த நேர்மையை பார்த்து ஆனந்த் பிரமித்தான்.

குறிப்பாக 'நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை' என்று சொல்லாமல், சொல்கிறாள் என்று நினைத்தான்.

"நல்லா பேசறயேம்மா… என்ன படிக்கிறே? "

அவள் பள்ளி விடுமுறை நாட்களில் இந்த வேலையை செய்கிறாள் என்று அவன் நினைத்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!’ (கிரைம் கதை)
Tamil Short Stories - Karpoora Deepam

"இந்த வருஷம் ஆறாம் வகுப்போடு என் படிப்பை நிறுத்திட்டேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால நான் பள்ளிக்கூடம் போக முடியல. இப்படி பழங்களை வித்தும், வீட்டு வேலைகளுக்கு போயும் கிடைக்கிற வருமானத்தில நானும் அம்மாவும், என் தம்பிய படிக்க வைக்க போறோம்."

இப்படி எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தவள்.... ஏதோ நினைவுக்கு வந்தவள் போல வேகமாக…

"அண்ணா... சிக்னல் போட்ருவாங்க.... சீக்கிரம் வாங்கிக்கங்க... இதை விட்டா எனக்கு வேற வியாபாரம் ஆகாது. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு இந்த லைன்ல ரயில் ஏதும் வராது. அந்த நேரத்தில எதிர்த்தாப்புல இருக்கிற டிபன் கடையில தட்டு, பாத்திரம் கழுவ போகணும். இந்தாங்கண்ணா நேரம் ஆகுது."

சுற்றும் முற்றும் பார்த்தபடி, அவள் ஆனந்தை அவசரப்படுத்தினாள்.

அவளுடைய அவசரத்தை கண்டு, அரைமனத்தோடு பழங்களை வாங்கிக்கொள்ள நினைத்தவன், அவள் கடைசியாக சொன்னதை கேட்டு அசந்து விட்டான். அவளுக்கு கிடைக்கிற ஒரு மணி நேரத்தையும், உழைப்பாக மாற்றி சம்பாதிக்க முயற்சிக்கிறாள். கற்பூர புத்தி என்று சொல்வார்களே அப்படி பட்ட அறிவு அவளிடம் இருப்பதாக அவன் நினைத்தான்.

ஆனால் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல், தம்பியை படிக்க வைக்க அவள் படுகிற பாட்டை பார்த்து, அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நெக்லஸைக் காணோம்!
Tamil Short Stories - Karpoora Deepam

"சரி, குடும்மா வாங்கிக்கிறேன். இந்தா பணம். உன் பெயர் என்ன?”"

“'தீபா’ன்னா” என்றபடியே அவன் கொடுத்த நூறு ரூபாய் தாளை மிகுந்த மரியாதையோடு வாங்கி.. கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

அப்போது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், கண்களில் மின்னிய ஒளியையும் பார்க்கும் போது... ஒரு ஒளி விளக்கின் பிரகாசத்தை காண்பது போல இருந்தது.

ஆனால் விளக்கின் ஒளி எவ்வளவு பிரகாசமா எரிந்தாலும், அது பகலில் எரியும் போது, அதனுடைய வெளிச்சம்… ஜொலிப்பு வெளியே தெரியாது. அது போல, இந்த தீபாவின் அறிவும் திறமையும், அவளுடைய வறுமையினால்... வெளியே அறியப்படாமல் காற்றில் கரைந்து, மறைந்து போகும் கற்பூர தீபமாக ஆகிவிடும். என்று நினைத்தான்.

அப்போது ரயில்வே சிக்னலில் சிவப்பு விளக்கு, பச்சை நிறத்திற்கு மாறியது. ஆனந்த், கனத்த மனதோடு தனது காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான். அவன் மெல்ல தலையை திரும்பி மீண்டும் அந்த பெண்ணை பார்த்தான்.

அந்த பெண் இப்போது ஓரமாக நின்று, கையில் எவ்வளவு பணம் சேர்ந்து இருக்கிறது என்று எண்ணிபார்த்து கொண்டிருந்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சாந்தா!
Tamil Short Stories - Karpoora Deepam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com