சிறுகதை: நெக்லஸைக் காணோம்!

Tamil short story - necklasai kaanom
Woman putting a necklace on her daughter
Published on

நெக்லஸைக் காணோம். வைர நெக்லஸ். கல்யாண வீடு. மணப்பெண் கீதாவின் அறை. கீதா அழ, அவளது அம்மா சீதா பிரமித்து விக்கித்து நிற்க, ஒரே சோகமயமாக இருந்தது அந்த அறை. காலை எட்டு மணிக்கு இப்படி ஒரு திடுக்கிடும் செய்தி. இன்னும் இரண்டு மணி நேரத்தில் தாலி கட்டியாக வேண்டும்.

சீதாவின் தம்பி - மகேஷ் - உள்ளே வந்தவன் அம்மாவும் பெண்ணும் பேயடித்தாற்போல் நிற்பதைக் கண்டான்.

“ஹெல்ப். ப்ளீஸ்டா, மகேஷ்” சீதா கெஞ்சினாள். மகேஷ் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கம்பெனியைச் சொந்தமாக நடத்துபவன்.

“கவலைப்படாதே! இன்னும் தாலி கட்ட இரண்டு மணி நேரம் இருக்கு” என்ற மகேஷ் கீதாவை நோக்கினான்: “அழாதே, கடைசியா நெக்லஸை, எங்கே வைத்திருந்தாய். சொல்லு” என்றான்.

“ஆறு மணிக்கு காப்பி சாப்பிடும் போது டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்தது. அது மேலே பூவைக் கொண்டு யாரோ வச்சிருக்கா. இப்ப பார்த்தா நெக்லஸைக் காணோம்."

விக்கித்தவாறே கீதா விவரித்தாள்.

“சரி, யார் யார் இங்கே வந்தது? அதைச் சொல்”

“சமையற்காரர் சாமா காப்பி கொடுக்க வந்தார். நம்ம வேலைக்காரி மீனாட்சி பூ கொண்டு வந்தாள். என் பிரண்டு கோகிலா வந்தாள்.

அப்புறம் நம்ம மாமாவோட சொந்தக்காரப் பையன் ரவி என்னைப் பார்த்து கங்ராஜுலேட் பண்ணிட்டுப் போனான்.

அப்புறம் மண்டபத்தில் அலங்காரம் செய்றவங்க இரண்டு பேர் வந்துட்டு போனாங்க.

இப்ப அம்மா, நீ” – நிறுத்தினாள் கீதா.

"இந்த ஆறு பேரையும் ஒவ்வொருத்தராக இங்க வரச் சொல்லு” என்று சீதாவிடம் கூறிய மகேஷ் நெக்லஸின் விலை என்ன என்று கேட்டான்.

“மூணரை லட்சம் ரூபாய்டா” என்றாள் சீதா.

முதலில் சமையல்காரர் சாமா வந்தார். "என்ன விஷயம்?" என்றார். பளீரென்று மகேஷ் கேட்டான்: “நெக்லஸ் எங்கே?"

”ஹி ஹி" என்று சிரித்த சாமா, “சமையல் அறை டெஸ்க் மேலே இருக்கு. ஆமாம், நீங்க வெற்றிலை போடுவேளா” என்றார்.

திடுக்கிட்ட அனைவரும், "டெஸ்க் மேலே நெக்லஸா?" என்றனர்.

சாமா விவரித்தார்: “என்னோட வெத்திலைப் பெட்டி பேர் தான் நெக்லஸ். அதை எப்போதும் பையிலே வச்சு கழுத்திலே தொங்கப் போட்டிருப்பேன். அதுனாலே அதுக்கு நெக்லஸ்னு பேர் வச்சுட்டாங்க நம்ப பசங்க” என்றார் அவர்.

“சரி கொஞ்சம் இங்கேயே இருங்க,” என்ற மகேஷ், "மீனாட்சியை வரச் சொல்" என்றான்.

உள்ளே வந்த மீனாட்சியிடம் அதே கேள்வியைக் கேட்க, அவள் அலறி விட்டாள். “ஐயையோ, காணோமா, ஆயிரம் தடவை சொல்லிட்டேனே, இப்படி அலட்சியமா இருக்கக்கூடாதுன்னு. எடுத்து வைன்னு காலைல ஆறு மணிக்குக் கூடச் சொன்னேனே...”

மீனாட்சியை அங்கே இருக்கச் சொன்ன மகேஷ், “சரி அடுத்து கோகிலாவை வரச் சொல்” என்றான். நெக்லஸ் என்று வாயைத் திறந்ததும் அவள் ஓவென்று அலறினாள்.

“அதை நான் தானே வாங்கித் தந்தேன். ஸ்பெஷலா ஆர்டர் செய்து வாங்கினேன். என் அங்கிள் கடைலே”.

“ப்ளீஸ் வெய்ட்” என்ற மகேஷ், “சரி, மண்டபக்காரர்களை வரச் சொல்" என்றான்.

“சார், நாங்க உள்ளேயே வரலை சார். அரை நிமிஷத்திலே பூவைக் கொடுத்துட்டு போயிட்டோம்," என்றார்கள் அவர்கள். சரி, இங்கேயே கொஞ்சம் இருங்க என்றான் மகேஷ்.

கடைசியாக வரவேண்டியது ரவி தான்.

“ரவி, நெக்லஸ் ஒன்றைக் காணோம். பார்த்தயா?” மகேஷ் கேட்க ரவி சீரியஸான முகத்துடன் “ஆ” என்று அலறி விட்டு தன் பையை எல்லாம் காண்பித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சாந்தா!
Tamil short story - necklasai kaanom

“நான் நேரே ஸ்டேஷன்லேர்ந்து இங்கே வந்தேன். கங்க்ராஜுலேட் பண்ணேன். அதோ என் பை அங்கே ஹாலில் இருக்கு. அதிலே வேணும்னாலும் பாருங்கள். தாலி கட்டியவுடன் மத்தியான ரயிலைப் பிடிச்சு ஊருக்குப் போகணும்.”

மகேஷ் கேட்டான்: “வந்தது எந்த ரயிலு?"

“காலைலே வந்தேனே, பாண்டியன் எக்ஸ்பிரஸ் . அஞ்சரை மணிக்கு வந்தது. கரெக்ட் டைம். நேரே இங்க வந்தேன். இப்ப மத்தியானம் பஸ்ஸை பிடிச்சு ஊருக்குப் போகணும். நாளைக்கு ஒரு மீட்டிங்.”

மகேஷ், “சரி, நெக்லஸைக் கொடுத்துடு, எங்கே வச்சிருக்கே?" என்றான்.

“ஐயோ, இது என்ன அபாண்டம், என் பையைக் காண்பிக்கிறேன்..." என்ற மகேஷ், ஓடிச் சென்று தன் பையைத் திறந்து கொட்டினான். அதில் நெக்லஸ் இல்லை.

“சார், நாங்க தான் இவரோட பையை எங்க வண்டிக்குப் பக்கத்திலே பூச்செடி கிட்ட வச்சோம். அவர் வந்தவுடன் அதை எடுத்து எங்க கைலே கொடுத்து மண்டபத்திலே வைக்கச் சொல்லிட்டார் சார்” என்றனர் மண்டபக்காரர்கள்.

உடனே மகேஷ் அவர்களிடம் ”எந்த இடத்தில் பையை வைத்தீர்கள், சற்று காண்பியுங்கள்” என்றான்.

மண்டப வாசலில் இருந்த பூச்செடியை அவர்கள் காண்பித்தனர். “சார் இங்க வந்து பையை வாங்கிட்டார்” என்றார்கள் மண்டப வேலைக்காரர்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; இன்று மட்டும்...
Tamil short story - necklasai kaanom

பூச்செடியைக் கவனமாகப் பார்த்த மகேஷ் கையை விட்டு அதைச் சுற்றித் தோண்டினான்.

‘அட நெக்லஸ்’. அனைவரும் ஆவென்று அலறி விட்டனர்.

“போலீஸ் வந்து உன்னைக் கைது செய்வதற்குள் ஓடிப் போ. சொந்தக்காரன் என்பதால் விடுகிறேன்” என்றான் மகேஷ்.

எல்லோரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டனர்.

சீதா கண்களில் மகிழ்ச்சி பொங்க, “எப்படிடா கண்டுபிடிச்சே” என்று மகேஷை கேட்டாள்.

“ஒண்ணுமில்லைக்கா. சிம்பிள். இன்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் வரவே இல்லை. ஒரு ரயில் டீரெயில் ஆயிடுத்து. அது வர இன்னும் நான்கு மணி நேரம் ஆகும். என் பிரண்டைக் கூப்பிட ஸ்டேஷனுக்குப் போனேன். அப்பதான் இது தெரிஞ்சது. ஆகவே, ரவி பொய் சொல்ரான்னு தெரிஞ்சது. பூச்செடியில் மற்ற இடமெல்லாம் காய்ஞ்சி இருக்கு. அதன் வேர் கிட்ட மட்டும் ஈரமா இருக்கு. அப்பறமா வந்து எடுத்துக்கலாம்னு இங்கே புதைச்சு வச்சுட்டான். கீதா அசந்த ஒரு நிமிஷத்திலே இதை பாக்கெட்லே போட்டிருக்கான்” – மகேஷின் விளக்கம் ஒரு புறம் இருக்க மண்டபத்தில் நாதஸ்வர, மேள சத்தம் ஓங்கிக் கேட்டது.

இது சாதாரண நெக்லஸ் இல்லை. ரோஜா நெக்லஸ் என்று ரோஜா செடியைச் சுட்டிக் காட்டியவாறே அதை வாங்கிக் கொண்ட சீதா, தன் பெண்ணின் கழுத்தில் அதைச் சூட்டினாள். அனைவர் முகமும் மலர்ந்தது!

இதையும் படியுங்கள்:
சிறுகதை; உயிர் உருகும் உறவுகள்!
Tamil short story - necklasai kaanom

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com