
கடலின் அலைகளை வைத்த கண் வாங்காமல் கடலின் மணல் எனும் மடியில் அமைந்திருந்தாள் 24 வயதான வர்ஷினி. அவளின் கண்களில் நீர் வடிவது மட்டும் நிற்கவேயில்லை. நினைவுகளில் மூழ்கினாள். யாரிடமும் பகிர்ந்தும் தீராத அவளின் வேதனைகள் அந்த கடலோடு என்றுமே மறையாமல் சத்தமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றன கடந்த இருபது ஆண்டுகளாக.
அது 2004-ம் ஆண்டு. இந்தியாவிற்கு சுனாமி என்பது அதற்கு முன்பு வரை தெரிந்திராத நாட்கள் அவை. டிசம்பர் 26 2004... கடலையும் அதன் அழகையும் காண சென்றவர்கள், கடலோரம் வாழ்ந்தவர்கள், கடலுக்குள் பிழைப்பிற்காக சென்றவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என அனைவரையும் வாரி சுருட்டிக்கொண்டு சென்றது அந்த ஆழிப்பேரலை. அதுவரை கடலின் அந்த கோர முகத்தை கண்டிறுக்கவில்லை யாருமே.
அன்றுதான் கடலை காண வேண்டும் என தான் அடம்பிடித்ததால் வர்ஷினியின் அப்பா அவளையும் அவள் அம்மா மற்றும் அவளின் 2 வயதான தம்பியையும் கடலை காண அழைத்துச் சென்றார். புயலுக்கு முன்னறிவிப்பு உள்ளது போல் ஆழிப்பேரலைக்கு எந்த அறிவிப்புமே அன்று இல்லை. அமைதியாகத்தான் எப்போதும் போல இருந்தது அன்றைய கடல். சிரித்து மகிழ்ந்து ஒன்றாய் நால்வரும் கடலின் மடியில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஐஸ்கிரீம் கேட்டதால் வர்ஷினியின் அம்மா அவளை கடைக்கு கூட்டிச்செல்ல, கடலோடு அவளின் அப்பாவும் தம்பியும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
சில நிமிடங்களிலேயே விஸ்வரூபம் எடுத்தது கடல். யாரும் நினையாத நேரம் தனது மொத்த பலத்தின் பாதியை பிரம்மாண்ட அலைகளாய் கொண்டு வந்தது. தூரமாய் நின்று வர்ஷினியும் அவள் அம்மாவும் பார்க்கும்போது சில நொடிகலிலேயே அவளின் தம்பியையும், தந்தையையும் உடன் இருந்த எல்லோரையும் எந்த பாரபட்சமும் இல்லாமல் வாரி சுருட்டிக்கொண்டு வந்து, அம்மாவை கட்டியனைத்துக்கொண்டு இருந்த வர்ஷினியையும் அவள் அம்மாவையும் ஒரு சேர அணைத்துக்கொண்டது அந்த பேரலை.
மூச்சு இருக்கும் வேளையிலும் தனது கையை இறுக பற்றியிருக்கும் வர்ஷினியை காப்பாற்ற மட்டுமே தோன்றியது அவளின் அம்மாவிற்கு. வந்த வேகத்தில் வாரி சுருட்டிக்கொண்டு அந்த பேரலை கடலுக்குள் திரும்ப சென்றுகொண்டிருக்க மரத்தின் கிளை ஒன்று கையில் கிடைக்க மற்றொரு கையில் இருந்த வர்ஷினியை பாடுப்பட்டு மேலேற்றி விட்டாள் அவளின் அம்மா. அலையின் வேகத்தில் 4 வயதான வர்ஷினியை மட்டுமே அவளின் அம்மாவால் காப்பாற்ற முடிந்தது. காப்பாற்றிவிட்டு, வர்ஷினியின் கண்முன்னே அவளின் அம்மா கடலோடு கலந்துவிட்டாள். 'அம்மா அம்மா' என கதறினாள் வர்ஷினி. இருந்தும் பயனில்லை. பிறகு ஆட்கள் வந்து பார்க்கையில் அழுகையும் அங்கலாய்ப்பும் எதிரொலித்தது கடற்கரை முழுவதும்.
அன்று வர்ஷினியின் குடும்பம் போலவே பலரின் குடும்பங்கள் கடலோடு கலந்துவிட்டன. உயிர் பிழைத்தவர்களை பள்ளிகள், கல்லூரிகள் பொது வழிபாட்டுத் தளங்கள் என தங்கவைத்தனர். 4 வயது வர்ஷினியும் அப்படித்தான் தங்கவைக்கப்பட்டாள். 2 நாட்கள் ஆனது வர்ஷினியை அவள் சித்தி தேடி கண்டுபிடிக்க. பிறகு அவளின் சித்தியின் வளர்ப்பில் அவள் மகளாகவே வளர்ந்தாள்.
ஆழிப் பேரலை அன்று நடத்திய அந்த கோர தாண்டவம் இன்று வரை அவள் கண்களுக்குள் நீங்காமல் நிற்கின்றன. தனது குடும்பம் நினைவிற்கு வரும்போதெல்லாம் கடலோடு வந்து அமைதியாக அமர்ந்திருப்பாள். விழிகளின் வழியே கடலிடம் மௌனத்தில் கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பாள். அப்படி தான் இன்றும் அமர்ந்திருந்தாள். மெய் மறந்து விழி நீரோடு ஆழி அலைகளை பார்த்துக்கோண்டிருந்தவளை நான்கு பிஞ்சுக்கைகள் அம்மா என ஓடி வந்து இறுக பற்றிக்கொண்டன. அருகில் அவளின் கணவரும் புன்னகையுடன் நின்றிருந்தார்.
ஆம் தற்போது வர்ஷினிக்கு திருமணமாகி ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரட்டை முத்துக்கள் உள்ளனர். கடலில் தொலைத்த அவளின் தாய் தந்தையை பிள்ளைகளில் பார்த்து மகிழ்கிறாள்...