சிறுகதை: தெய்வமான குழந்தைகள்!

வெள்ளையம்மாள் பாட்டி மறைத்து வைத்த குலதெய்வ ரகசியம்...
குலதெய்வ ரகசியம்|grandma telling stories to her grand daughters
குலதெய்வ ரகசியம்AI image
Updated on
MM strip
MM strip

ந்த வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தையின் பெயர் முத்தழகு; மற்றொரு குழந்தையின் பெயர் லட்சுமி. ஆனால், அந்த வீட்டில் உள்ள வெள்ளையம்மாள் பாட்டி, அந்தக் குழந்தைகளை அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைக்கவே மாட்டார். முத்தழகைக் 'கருப்பாயி' என்றும், லட்சுமியைப் 'பாப்பாத்தி' என்றும் அழைத்துக் கொண்டிருப்பார்.

“கருப்பாயி, எனக்குப் போயி வெத்தலை வாங்கிட்டு வாம்மா!"

“பாப்பாத்தி, பாட்டிக்கு ஒரு சொம்பு தண்ணி எடுத்துட்டு வாம்மா!”

“ஐயோ பாட்டி! உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! என்னைக் கருப்பாயினு கூப்பிடாத, அவளைப் பாப்பாத்தினு கூப்பிடாத! நீ சொன்னா கேட்கவே மாட்டியா? எப்பத்தான் திருந்தப் போறியோ!”

“போங்கடி! உங்களுக்கு என்ன தெரியப் போகுது? பாப்பாத்தியும் கருப்பாயியும் கால் தூசிக்கு வருவீங்களா நீங்க?”

“பாப்பாத்தி பெருமையையும் கருப்பாயி பெருமையையும் நீயே வச்சுக்கோ கிளவி!”

இவ்வாறு அந்த வெள்ளையம்மாள் பாட்டி, ஒரு நாளைக்கு மட்டும் பாப்பாத்தி, கருப்பாயி என்ற பெயர்களைப் பல முறை உச்சரித்துக் கொண்டே இருப்பார். தூங்கப் போகும் போது கூட, “பாப்பாத்தி, கருப்பாயி... நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும் தாயே!” என்று அவர்கள் பெயரைக் கூறிவிட்டுத்தான் தூங்குவார்.

காலங்கள் கடந்தன… வெள்ளையம்மாள் பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போனது. படுத்த படுக்கையாகிவிட்டார்.

“பாப்பாத்தியும் கருப்பாயியையும் பார்க்கணும்!” என்று கண்ணீர் மல்க அழுதுகொண்டே தன்னுடைய மகனிடம் கூறினார்.

“லட்சுமி, முத்தழகு... ரெண்டு பேரும் வாங்கம்மா! உங்களைத்தான் பாட்டி பார்க்கணும்னு கூப்பிடுறாங்க!”

“இதோ வாரோம் பா!”

“அம்மா, நீங்க இவ்வளவு நாளா பாப்பாத்தி, கருப்பாயி என்ற பெயரைச் சொல்லிட்டு இருக்கீங்களே... அவங்க யாருமா?” என்று மகன் கேட்டார்.

பாட்டி உடனடியாக படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார். “அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?”

“சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறோம்!”

“ஒரு காலத்துல நம்ம ஊர்ல கருப்பாயி என்ற ஒரு சின்னப் பிள்ளையும், பாப்பாத்தி என்ற ஒரு சின்னப் பிள்ளையும் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் தோழிங்க. எங்க போனாலும் ஒண்ணாதான் விளையாடப் போவாங்க; ஒண்ணாதான் காட்டு வேலைக்குப் போவாங்க. அவங்க படிக்கல, அவங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம். இந்த ரெண்டு பிள்ளைகளும் எப்பவுமே ஒண்ணாதான் இருப்பாங்க, சந்தோஷமா இருந்தாங்க. என்ன செய்யுறது... எமனுக்குப் பொறுக்கலையே!

குலதெய்வ ரகசியம்
குலதெய்வ ரகசியம்AI image

திடீர்னு இந்த ஊர்ல பஞ்சம் வந்துடுச்சு. எல்லாரும் ஊரை விட்டுப் போகணும்னு முடிவெடுத்தாங்க. பாப்பாத்தி குடும்பம் வண்டிகட்டி ஊரை விட்டுப் போக முடிவு செஞ்சாங்க. ஆனா, கருப்பாயி குடும்பம் இந்த ஊர்லயேதான் இருந்தாங்க. பாப்பாத்தி ஊரை விட்டுப் போறது கருப்பாயிக்கு ரொம்ப மனசு வேதனையா இருந்தது. 'அடுத்து எப்பப் பார்க்கப் போறோமோ' என்று அவங்களுக்கே தெரியாது. அதனால பாப்பாத்தியும் கருப்பாயியும் கண்ணீர் விட்டு அழுதாங்க.

'நான் பாப்பாத்தியோட போறேன், என்னை விட்டுவிடுங்கள்' என்று சொல்லி அழுதாள் கருப்பாயி. 'இல்லைன்னா பாப்பாத்திய இங்கேயே விட்டுட்டுப் போங்க, நானும் கருப்பாயியும் ஒண்ணா இருந்துக்கிறோம்' என்று ரெண்டு குழந்தைகளும் அழுது ஆர்ப்பரித்தார்கள். ஆனால், அவங்களைப் பெத்தவங்க இந்த குழந்தைகளின் பேச்சைக் கேட்கவே இல்லை!

பாப்பாத்தியின் குடும்பத்தார்கள் அந்த மாட்டு வண்டியில் அவளை அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். கருப்பாயி பிரியா விடை கொடுக்க முடியாமல் கண்ணீர் ததும்ப அழுது கொண்டிருந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கையசைத்துக் கொண்டார்கள்.

இரவானது. பாப்பாத்தியின் குடும்பம் அந்த காட்டுப் பகுதியில் தங்கியிருந்தது. அன்று இரவில், தன்னுடைய அப்பா, அம்மா உறங்கிய பிறகு, கருப்பாயி... பாப்பாத்தி சென்ற மாட்டு வண்டியின் தடம் (சுவடு) வழியே அவளைத் தேடி நடந்து வந்துகொண்டிருந்தாள். அதேபோல பாப்பாத்தியும் அன்று இரவு தங்கியிருந்த இடத்திலிருந்து, தான் வந்த திசையை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தாள்.

அப்போது கருப்பாயியும் பாப்பாத்தியும் நேருக்கு நேர் சந்தித்தார்கள்! இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி! ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டார்கள். 'நாம் இனி சேர முடியாமல் பிரிந்துவிடுவோமே' என்று வருத்தப்பட்டார்கள். அப்போது அவர்களின் அருகே ஒரு பாழடைந்த வட்டக் கிணறு ஒன்று இருந்தது.

அப்போது பாப்பாத்தி கூறினாள்: 'நாம் ஒருவருடன் ஒருவர் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது என்பது கடினம். நம்மளுடைய அப்பா, அம்மா இருவரும் நம்மைப் பிரித்துச் சென்றுவிடுவார்கள். ஆகையால், நாம் ஒன்றாக வாழத்தான் முடியவில்லை; அதனால் இருவரும் சேர்ந்து ஒன்றாகவே இறந்துவிடுவோம்,' என்று இருவரும் முடிவு செய்து, அந்தப் பாழடைந்த கிணற்றில் கைகோர்த்து உள்ளே குதித்து உயிரை விட்டார்கள்.

மறுநாள் காலையில் பொழுது விடிந்தவுடன், கருப்பாயினுடைய பெற்றோர்களும் பாப்பாத்தியினுடைய பெற்றோர்களும் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகள் நடந்து வந்த பாதையின் தடத்தைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்போது அந்தப் பாழுங்கிணற்றில் எட்டிப் பார்க்கும்போது, இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்துச் செய்வதறியாது இருவர் குடும்பமும் கண்ணீர் விட்டு கதறி அழுது நின்றது.

இதையும் படியுங்கள்:
ஆசை 1x; மகிழ்ச்சி 10x: அந்த காலம்... அது வசந்த காலம்...
குலதெய்வ ரகசியம்|grandma telling stories to her grand daughters

தாங்கள் செய்த தவறை உணர்ந்து, அவர்கள் இருவருக்கும் சிலை செய்து, அந்த இடத்திலேயே ஒரு கல்லறை (கோவில்) எழுப்பி, அவர்களைத் தலைமுறை தலைமுறையாக வணங்கி வருகிறார்கள். பாப்பாத்தியும் கருப்பாயியும்தான் நம்மளுடைய குலதெய்வங்கள். அவங்க எப்போதும் நமது குடும்பத்தையும், குடும்பத்தில் உள்ள குழந்தைகளையும் காத்துக்கொண்டு வராங்க...” என்று அந்தப் பாட்டி கதை சொல்லி முடிக்க...

வெள்ளையம்மாளின் உயிரும் பிரிந்தது — கருப்பாயியும் பாப்பாத்தியும் சென்ற அதே இடத்திற்கு...!

logo
Kalki Online
kalkionline.com