

(காலம் மாறிப் போச்சு. பரபரப்பாக இயங்கும் டெக்கி உலகத்தில், பேச நேரமில்லை. மனிதக் குரல் கேட்கத் தவிக்கும் முதியவர்களின் பரிதவிப்போ! ---- பரிதாபம்!.)
கிராமத்தில் பதினோறாம் வகுப்பு வரை படித்திருந்த முருகேசனுக்கு, நகர்ப்புறத்திலுள்ள உணவு விநியோக கம்பெனியில் எப்படியோ வேலை கிடைத்தது. பாசமான பொன்னுத்தாயி அம்மாவை சமாதானப்படுத்தி வேலைக்கு சேர்ந்து விட்டான். அம்மா வழக்கம் போல, கிராமத்தில் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.
முருகேசன் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. கம்பெனியில் அவனுக்கு ஒரு பழைய மொபைல் கொடுத்திருந்தனர். வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு தடவை அம்மாவிடம் பேசியவன், பிறகு வேலையில் பிஸியாகிவிட்டான். போன் செய்யவில்லை.
முருகேசனுடைய மாலை நேர ஷிப்ட் சமயம்... இரவு சுமார் 8 1/2 மணியளவில் வந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்ய புறப்பட்டான். பார்சலில், இரண்டு இட்லி, சட்னி, மற்றும் இரு வாழைப்பழங்கள் மட்டுமே இருந்தன.
அட்ரஸைத் தேடிப் போனான். சிதிலமடைந்த கட்டடம் ஒன்றில் இரண்டாவது மாடியில் இருந்தது. கதவு மணியை மூன்று தரம் அழுத்தியும் திறக்கவில்லை. 'திரும்பி விடலாமா?' என முருகேசன் எண்ணுகையில், வயதான பெண்மணி ஒருவர் மெதுவாக வந்து கதவைத் திறந்தார். வெள்ளை தலைமுடி, நடுங்கும் கைகள், இடுங்கிய கண்கள். அவரது முகத்தில் சோர்வு தெரிந்தது.
"இது மேரி மேடம் வீடுதானே!" என முருகேசன் கேட்கையில்,
"ஆமாம். நான்தான் மேரி. தயவுசெய்து பார்சலை உள்ளே வைத்துவிடு. என் கைகள் நடுங்குகின்றன" என்று கூற, உணவை மேஜையின் மீது வைத்துவிட்டுத் திரும்பிய முருகேசனிடம் மீண்டும் அவர், "தம்பி, ஒரு அஞ்சு நிமிடம் உட்கார முடியுமா? தனியாகச் சாப்பிட பிடிக்கவில்லை."
முருகேசனின் ஷிப்ட் முடிந்துவிட்டிருந்த போதும், ஏதோ அவனை அமரச் செய்தது.
அந்த அறையின் மூலையில், இயேசு நாதரின் சிறிய படம் ஒன்று இருந்தது. எதிரே இருந்த சுவரில், மூன்று புகைப்படங்கள் மாட்டியிருந்தன.
மேரி மேடம் மெதுவாகக் இட்டிலியைச் சாப்பிடத் தொடங்கினார். ஒவ்வொரு இரண்டு வாய் சாப்பிட்ட பிறகும், அவர் முருகேசனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
சாப்பிட்டு முடிக்கையில், "தம்பி! நான் வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்வதில்லை. மனிதக் குரல் கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று எனக்கு ஒரு மனிதக் குரலைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஆர்டர் செய்தேன்" என்றவர் தொடர்ந்து, "முதல் போட்டோவில் என்னுடன் இருப்பவர் எனது அன்பான கணவர். கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து ரிட்டையரானவர்; சில வருடங்களுக்கு முன்பு காலமானார். பென்ஷன் வருகிறது. இரண்டாவது போட்டோவில் இருப்பவன் மகன். ஜெர்மனியில் இருக்கிறான். பணக்கார ஜெர்மனி பெண்ணை மணந்தபிறகு என்னை மறந்துவிட்டான். மூன்றாவது போட்டோவில் இருக்கும் மகள் என் மீது அன்பாக இருப்பாள். ஆபீஸ் பிக்னிக் போயிருக்கையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட, அவளும் இல்லை. வயதானதால், எனக்கும் முடியவில்லை..." என்று அழ ஆரம்பித்தார்.
முருகேசனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. "நான் புறப்படுகிறேன் அம்மா! நேரமாச்சு! பாத்து இருங்க!" எனக் கூறி எழுந்திருக்கையில்,
"உனக்கு அம்மா இருக்காங்களா தம்பி?"
"கிராமத்துல இருக்காங்க. கஷ்டப்பட்டு உழைச்சு என்னை படிக்க வெச்சாங்க. நான் இங்க வேலை செய்யறேன்."
"தம்பி! உங்க அம்மா கூட தினம் பேசுவீங்கதானே? என்னோட அன்பா ரெண்டு வார்த்தை பேச ஆளில்லாம பரிதவிக்கிறேன். மனிதக் குரலே கேட்பதில்லை. நீங்க என்னை அம்மான்னு கூப்பிட்டதும் சந்தோசமா இருந்தது. அதான் கேட்டேன்."
"பேசுவேன்!" என்று சொல்லி வெளியே வந்த முருகேசனுக்கு அழுகை வந்தது. 'மூன்று மாசமாக அம்மாவிடம் பேசவில்லையே. ச்சே! மேரி மேடம் மாதிரி, நம்ப வயசான அம்மாவிற்கும், பாசமான மனிதக் குரல் தேவைப்படும்தானே?'
உடனே அம்மாவிற்கு போன் போட்டான்.
"முருகேசு! உன் குரல் கேட்டதும் ரொம்ப சந்தோசமா இருக்கு. நீ சொகமா இருக்கியா? நேரத்துக்கு சாப்பிடு. ஆமா! இந்நேரத்துல போன் போட்டிருக்கே! ஏதாச்சும் உடம்பு சரியில்லையா? முடியலைன்னா ஊருக்கு புறப்பட்டு வா. கூழோ! கஞ்சியோ! சேந்து சாப்பிடலாம்."
அழுகையை அடக்கியவாறே, "நல்லா இருக்கேன் அம்மா! நீங்க உங்க உடம்பை பாத்துக்கங்க! நான் தினமும் உங்க கூட போன் பேசுவேன்! என் குரல் கேட்கும்!" என்று கூறி போனை அணைத்தவன், அடக்கிய அழுகையை, அழுது தீர்த்தான்.