

"அம்மாவுக்கு உன்மேல கொஞ்சம் வருத்தம் வசந்த்!”
"ஏன்... என்னவாம்?!"
அம்மா கொடுத்த சூடான, ஏலக்காய் மணம் கமழும் தேநீரின் சுவையை ருசித்ததபடியே… சாதாரணமாக கேட்டான் வசந்தன்.
“இன்னமும் உன் பிடிவாத குணம் மாறாம இருக்கேன்னு, அம்மா கவலைப்படறாங்க! நீ காலையில டிபன் சாப்பிடாம போனதால, பாவம்… அவங்களும் சாப்பிடல!"
அவன் முகம் மாறியது.
"பச்… இதுல பிடிவாதம் எங்க வந்ததுப்பா! எனக்கு உப்புமா பிடிக்காதுன்னு தெரிந்தும் அதை செய்து வைச்சுட்டு, அப்புறம் நான் சாப்பிடாம போய்ட்டேன்னு அவங்க வருத்தப்பட்டா என்ன அர்த்தம்?!
"அப்படி சொல்லாத வசந்த். அம்மா எப்பவுமே நமக்குன்னு பாத்து பாத்து செய்து கொடுக்கிறாங்க! அவங்களுக்கு முன்ன மாதிரி உடம்பு தெம்பா இல்லப்பா! வயசாகிட்டு இருக்கில்ல. நான் கூட வேலையில இருந்து ரிடையர்டு ஆகிட்டேன். ஆனா அம்மா இன்னும் நமக்காக வீட்டு வேலைகளை தொடர்ந்து செய்துகிட்டுதான இருக்காங்க!" என்று சொல்லிவிட்டு, அப்பா அவனை உற்றுப்பார்த்தார்.
ஆனால் அவர் பேசியதை கேட்ட வசந்த், பதில் பேசாமல் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, சலிப்போடு சோபாவில் சாய்ந்து, மீண்டும் டீவியைப் பார்த்தான். அவனுடைய அலட்சியத்தை பொருட்படுத்தாமல், அவரும்,
"இங்க பாரு வசந்த், அம்மாவுக்கு, நானும் நீயும் நேரத்துக்கு சாப்பிட்டு நல்லா இருக்கணுங்கிறது தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால, அவங்களுக்கு நாம உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும், அவங்களை கவலைப்பட வைக்ககூடாது!” என்று பொறுமையாக, ஆனால் கண்டிப்போடு அவனிடம் சொல்ல,