
சுவாரசியமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ஜெகநாதன். நெருங்கி வந்த பைரவி பட்டென்று டிவி சுவிட்சை அணைத்தாள். பதறினார் அவர். “ஏய் என்ன பண்றேம்மா நல்ல ந்யூஸ் அது..”
இடுப்பில் கை வைத்து முறைத்தாள் பைரவி. “முதல்ல வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குங்க. அப்புறம் உலக செய்தி பார்க்கலாம்..!” புரியாமல் விழி உயர்த்தினார். “என்ன சொல்றே.?”
“வீட்டுல இருக்கீங்கன்னு தான் பேரு, ஆனா ஒண்ணையும் கவனிக்கற தில்லை நீங்க.. ப்ச்..” புலம்பினபடியே சோபாவில் கணவர் அருகே உட்கார்ந்தாள்.
“பாரு சுத்தி வளைக்காம விசயத்துக்கு வா. என்ன குழப்பம்..”
“எனக்கு இதுதான்னு சரியா சொல்லத் தெரியலைங்க.. ஆனா நமக்குத் தெரியாம என்னவோ இந்த வீட்டுல நடந்துக்கிட்டிருக்கு.. அல்லது இனி நடக்கப் போகுது..!” மர்மமாக எதையோ சொல்லி கண் கசக்கினாள் பைரவி.
சிறிது நேரம் அமைதி காத்தார் ஜெகநாதன். தன் மனைவி சொல்வதை புரிந்து கொள்ள முயற்சித்தார்.
மகன் பூபதி அலுவலகம் சென்றிருந்தான். மருமகள் வனிதா ப்ளவுஸ் தைக்க வேண்டுமென்று டெய்லர் கடைக்கு சென்றிருந்தாள். குட்டிப் பேரன் தருண் மழலையர் வகுப்பிலிருந்து இன்னும் வீடு வந்திருக்கவில்லை.