

ரேடியோ... “வா... சகி, வாசகி, வள்ளுவன் வாசுகி...” பாடலைப் பாடிக் கொண்டிருந்தது.
“ரேவதி.. ரேவதி” ரவி மனைவியை வாசலிலிருந்து அழைத்தான்.
“இதோ வந்துட்டேங்க.” டிபன் கேரியரோடு வாசலுக்கு வந்தவளின் நெற்றியில் வியர்வை முத்துக்கள் உருண்டை உருண்டையாய்.
“ஏய்.. என்ன இப்படி ஒரு கோலம்?” ரவி கடிந்து கொள்ளவே,
“அ.. அ.. அது, உங்களுக்கு ஆபிசுக்கு நேரமாயிடுச்சுல்ல? அதான்.”
முந்தானைத் தலைப்பில் முகத்தை ஒற்றிக் கொண்டு, அவள் அவனைப் பார்க்க, பரிதாபமாக இருந்தது ரவிக்கு.
'பாவம். என் மீதுதான் எவ்வளவு அன்பு, அக்கறை. ஆனா, கொஞ்சங்க கூட நவநாகரிகமா உடை அணிய மாட்டேங்கிற? சகஜமா பேசக்கூட மாட்டேன்கிற. சியாமளா, எப்படி எல்லோர்கிட்டயும் நல்லா பழகறா....' என நிமிட யோசனையில் ஆழ்ந்தவனை,
“என்னங்க, ஏதோ கவலைப்படற மாதிரி தெரியுது. உடம்புக்கு ஏதும் முடியலையா?“ ஆசையாய்க் கைப்பிடித்தவளை உதறியவன்,
“ஆரம்பிச்சிட்டியா? உடம்புக்கு ஒன்னுமில்ல. நான் கிளம்புறேன்.”
“என்னங்க, சீக்கிரம் வந்துருவீங்கல்ல?”
“தெரியலை. ம், எனக்காகக் காத்திருக்காம, நீ சாப்பிடு.”
“அப்படி என்னிக்குங்க நான் சாப்பிட்டேன்?“
“தலை வலிக்குது. இனிமே, உன் கிட்ட பேசினா, இன்னிக்கு நான் ஆபிஸ் போன மாதிரி தான்.“
கிளம்பிப் போனான் ரவி.
ஆபீஸ் வேலையில் மூழ்கிப் போன ரவி, மாலை நாலு மணிக்குத் தன் டேபிளில் திடீரென முளைத்த மிக்ஸர், பாதுஷாக்களை கண்டு ஆச்சரியப்பட்டு போனான்.
“ஹாய் ரவி, என்ன முழிக்கிறீங்க? இன்னிக்கு எனக்கு இன்கிரிமெண்ட் நாள். அதான் கொண்டாட்டம்” என்றவளாய், தன் டேபிளில் இரு கை ஊன்றி குனிந்து சிரித்த 'சியாமளா போஸில்' ஒரு கணம் கிரங்கிப் போனான் ரவி.
நல்ல சிகப்பு நிறம். முகத்தில் ரோஸ் பவுடர் சற்றுத் தூக்கலாய்.
தோள் வரை படர்ந்த பாப் செய்த முடி, முன் தலையில் ஏகப்பட்ட கோணல் வகிடுகளில் மேலும் வெட்டுப்பட்டுச் சிலுப்பிக்கொண்டு நின்றது.
உதட்டின் கணத்தைக் கூட்டிக் காட்டும் அளவிற்கு லிப்ஸ்டிக்.
கண்களில் ஒரு போதைப் பார்வை.. 'கிக்' வந்தது ரவிக்கு.
மனக்கண்ணில் ஒரு வினாடி ரேவதி வந்துபோக,
'சே! ஒரு சந்தோசமான நிமிஷத்துல ரேவதி எதுக்கு? இவ அழகு எங்கே? அவ.. ரேவதி எங்கே?'
மனத்தை ஒதுக்கியவன்,
“ஹாய்.. ரொம்ப தேங்க்ஸ்...“ ஆசையாய்க் கை நீட்டி அவளின் கையைக் குலுக்கி, ‘சற்றே’ அழுத்தினான்.
மாலை வீடு திரும்பும் வழியில், ரேவதிக்கு ஏதாவது வாங்க நினைத்தவன், பக்கத்தில் இருந்த ஹோட்டலின் வாசலில் இருந்த ஸ்வீட் ஸ்டாலை அடைந்தான்.
அரைக்கிலோ பால்கோவாவிற்கு ஆர்டர் செய்து, 200 ரூபாயை நீட்டிவிட்டு, எதேட்சையாய் உள்ளே பார்த்தவன்,
'அட! நம்ம மேனேஜர் ஜார்ஜ். கூட யாரு?'
அவர், இவனைப்பார்த்து விட்டு பார்வையை வேறு பக்கம் திருப்ப, 'ஒருவேளை குடும்பத்தோட வந்து இருக்காரோ?' யோசித்தவன், எதிரே தெரிந்த கண்ணாடித் தூணில் சியாமளா முகம் தெரியவே, அதிர்ச்சியில் உறைந்து போனான்.
பார்வையில் 'அதே' போதை.
'சீ! இவளைப் போய் என் ரேவதியோட இணைச்சுப் பார்த்தேனே. அழகு... உடலளவில் இல்லை, உள்ளத்திலதான்னு புரியாமப் போயிட்ட மடையன் நான்.'
வீட்டை நோக்கி வேகமாய்ப் 'பாக்கி' சில்லரை கூட வாங்காது, ஓடும் ரவியைப் பார்த்து ஏகமாய்க் குழம்பிப் போனார் கடைக்காரர்.