ரிதலைபிரசவத்துக்குப் போய் வந்த மங்களம், தன் குழந்தையைப் பூஜை அறையில் கிடத்தி, நமஸ்கரித்தாள். அந்தப் பிஞ்சுதளிர் தன் கைகால்களை உதைத்து விளையாடி கொண்டிருந்தது.
ஆனால், மாலி என்கிற மகாலிங்கம் குழந்தையை வாரி எடுத்து கொஞ்சவோ, முத்தமிடவோ, விருப்பபடதாது போலக் காணப்பட்டான்.
எப்படி இந்தக் கல் மனசு ஏற்பட்டிருக்கும்? எதனால் இந்த மாற்றம்? ஏன் இந்த வெறுப்பு பார்வை? வந்தது முதல் ஒரு வார்த்தை ஆறுதலாகப் பேசலையே?... மங்களம் மனதுக்குள் புலம்பினாள்.
ஒரு பெண் அவளது நிறம் மூலமாகவே அடையாளம் காணப்படுகிறாள் என்ற எண்ணம் உடையவன் அவன். அதனால் தான் சிவப்பு நிறமுடைய பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று தேடி தேடி அலைந்து, தந்தையற்ற, ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் பரவாயில்லை என்று, தன்னைக் கல்யாணம் செய்து கொண்டபோது மிகவும் சந்தோசப்பட்டான்.
“நம்ம இரண்டு பேரும் நல்ல சிவப்பு; நமக்குப் பொறக்க போற குழந்தையும் நல்ல சிவப்பாதான் பிறக்கும்; நீ வேணுமின்னா பாரேன்.” கணவர் சொன்ன காரணம், தனக்கு விசித்திரமாகவும், விந்தையாகவும் தெரிந்தது அப்போது அவளுக்கு.
அந்தப் பெண் குழந்தை மிகவும் அழகான கண்களுடன், தன்னைப் பார்த்துச் சிரித்ததும், அந்தக் குழந்தைய வாரி எடுத்து முத்தமிட்டாள் பக்கத்து வீட்டு லட்சுமி. “குழந்தை மிகவும் அழகாக லட்சணமாக உள்ளது, வாழ்த்துக்கள் மாலி” என்று சொன்ன போது,
“அட போ லட்சுமி! குழந்தை இப்பவே இவ்வளவு கறுப்பா இருக்கு. வளர வளர ரொம்பக் கறுப்பாகப் போறா! இந்தக் கருப்புச் சனியனை கொஞ்சுவதற்கு எனக்குப் பிடிக்கவில்லை“ என்று சொன்னதும், வெறுப்பானாள் லட்சுமி.
"அட பாவி! குழந்தை நல்ல சிகப்பா இருந்து கண் தெரியாமல் இருந்தாலோ, இல்ல காது கேக்காம இருந்தாலோ, இல்ல வேற ஏதாவது குறை இருந்தாலோ பரவாயில்லையா?" என்று கேட்டதும் அதற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
நிறம் ஒரு தகுதியா? இதைத்தான் நாம் வாழும் சமுதாயம், எதிர்பார்க்கிறதா? தன் கணவனும் அப்படிச் சொன்னதும் தன் அழுகையை, மங்களத்தால் கட்டுபடுத்த முடியவில்லை. கறுப்பு எந்த விதத்தில் தரக்குறைவு? போதைப் பொருளுக்கு, அடிமையாவதைப் போல் நிறத்திற்கு அடிமையாகியுள்ள வக்கிர எண்ணத்தை மனதுக்குள் வைத்திருந்ததால்தான், அவன் குழந்தையைக் கொஞ்சாமல் இருந்தானோ?
புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்தச் சமூகத்தில், கறுப்பு நிறத்தில் உள்ள ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் அவமானங்களைச் சந்திக்க வேண்டும் போல் இருக்கிறதே!.
“இதற்காக நான் மனம் தளரப்போவதில்லை. மனதிற்கும், குணத்திற்கும் வழங்கப்படாத மதிப்பு நிறத்திற்கு வழங்கப்படும் நிலை கண்டிப்பாக மாறும்.“
”சபாஷ் மங்களம்! உன்னுடைய தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்; இப்படித்தான். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடணும்,” லட்சுமி ஆதரித்து சொன்னாள்.
நாட்கள் கடந்தன. நாரசமான வார்த்தைகள் அவனிடமிருந்து தெரித்தன... இல்லை இல்லை உமிழப்பட்டன! வானமே இடிந்து விடும் நிலையில் இருந்தாள் மங்களம். எவ்வளவு கேவலமான, வக்கிர புத்தி. இனிமேலும் இவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா? தினமும் இவன் மரம்கொத்தி பறவை மாதிரி, தன் மனதை ரணபடுத்திக் கொண்டு இருப்பான். அவள் நினைத்து போலவே தினமும் தொடரவே, தன் மாமா சாம்பசிவத்துக்குத் தகவல் கொடுத்தாள்.
“இத பாருங்க மாப்பிள்ளை நீங்க நினைக்கிறது பெரிய முட்டாள் தனம். நமது ஜீன்கள் பரம்பரை பரம்பரையாக எல்லாவற்றையும் ஞாபகமாய்க் கடத்திவருபவை. அப்படி வருவதால் குழந்தை உருவாகும் பொழுது நமது ஜீனின் எந்த ஞாபகப்பதிவு செயல்திறன் மிக்கதாய் (Dominent) இருக்கிறதோ, அதன்படி அந்தக் குழந்தை உருவாகும். உங்களது பரம்பரையில் எவரேனும் கறுப்பாய் இருந்திருப்பார்கள். குரோமோசோம்களில் கறுப்பு நிறத்துக்கான ஜீன் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் தோன்றினால், மரபணு சோதனை செய்யலாமே?”
“என் முடிவில் மாற்றமில்லை. சீக்கிரம் விவகாரத்து, நோட்டீஸ் வரும்" என்று கடுமையாகச் சொன்னது மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னான் மாலி.
"என் நடத்தையில் சந்தேகபட்ட உன்னுடன் நானும் வாழ விரும்பல; மனதிலுறுதி வேண்டும், காரியத்திலுறுதி வேண்டும்; விடுதலை வேண்டும், என்கிற பாரதி, பாட்டுக்கு இப்ப உயிர் கொடுக்கப் போறேன். எனக்கு சுய கௌரவம் தான் முக்கியம்."
கட்டிய புடவை கைக்குழந்தையுடன், தன் சொந்த ஊருக்கு வந்து, தன்னுடன் தன் தங்கைகளையும் சேர்த்துக்கொண்டு கேட்டரிங் ஆரம்பித்தாள். நல்ல பேரும் கிடைத்தது. வருமானமும் வந்தது.
ஆனாலும், ஒற்றைப் பெற்றோராகப் பாரதியை வளர்ப்பது சிரமமாகதான் இருந்தது..
தன் பெண் பாரதியை, நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். அவளுக்கு இப்போது ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் படித்து வந்தாள்.
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்பதை பாரதி அன்று உணர நேர்ந்தது.
"என்ன ஏம்மா கறுப்பா பெத்த?" என்று பாரதி அழுதுகொண்டே, தன் ஸ்கூல் பையை ஒரு மூலையிலும், ஷூவை ஒரு மூலையிலும் எறிந்து விட்டு கேட்கவும், அவள் கேள்விக்குப் பின்னால் உள்ள வலியும், வேதனையும் மங்களத்தினல் புரிந்து கொள்ள முடிந்தது.
நடந்த விஷயத்தைப் பாரதி சொல்லவும், புரிந்து கொண்ட மங்களம் நேரிடையாக பள்ளியின் முதல்வர் அறைக்கு நுழைந்து ஆக்ரோஷமாகப் பேச ஆரம்பித்தாள்.
“நாட்டில் பெண்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஒரு வகையான ஊனம் போலே அப்படித்தானே? வெள்ளை உயர்வு என்பதும் தவறு; கருப்புத் தாழ்வு என்பதும் தவறு! என்று பெரியோர்கள் சொன்னதை மறந்து விட்டீர்கள். இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல், நிறத்தை காரணம் காட்டி, பள்ளிகூட ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் உயரத்தின் அடிப்படையில் வரிசையை அமைக்காமல், நிறத்தின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இது என் இதயத்தை மட்டுமல்ல, என் பாரதி இதயத்தையும் நொறுக்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
“கருவறையில் இருக்கும் சாமி கருப்பு, நடந்து போகும் சாலை கருப்பு, மழை பொழிகின்ற மேகம் கருப்பு, தலையில் இருக்கும் கூந்தல்கருப்பு, கண்ணுக்குள் இருக்கும் பாப்பா கருப்பு, காக்கை கருப்பு....”
மங்களாவின் பேச்சு நெத்தியடியாக இருந்ததால், அந்தப் பள்ளியின் முதல்வரால் எதுவும் பேச முடிய வில்லை. தன் செயலுக்கு மங்களாவிடம் மன்னிப்பு கேட்டார். தன் பெண்ணை மதிக்காத அந்தப் பள்ளியிலிருந்து, டி.சி. வாங்கி வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்த மங்களா வீட்டை அடைந்தபோது, சாம்பசிவம் மாமா வந்திருந்தார்.
“சேதி தெரியுமா மங்களம்? உன்னை விவாகரத்து பண்ணிட்டு , உன்னை மாதிரி நல்ல சிவப்பா, ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் முன்னாள் புருஷன் மாலிக்கு, அந்தப் பொண்டாட்டி மூலம் கருப்பு நிறத்தில் பெண் குழந்தை பொறந்து இருக்காம்! கடைத்தெருவில் லட்சுமியின் பையன்தான் தகவல் சொன்னான்."