சிறுகதை: 'லக்கி லதா'!

Tamil Short story - 'Lucky Latha'!
Husband and Wife
Published on

நான் என் மனைவி லதாவுடன் வாடகை காரில் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. சாலை ஓரம் இருந்த ஒரு துணிக்கடையில் அந்த புடவை தொங்கிக் கொண்டு இருந்தது. அதைப்போல புடவையைத்தான் என் மனைவி லதா ஒருவாரமாக தேடிக் கொண்டிருக்கிறாள்.

போன வாரம் என் அக்கா பெண்ணோட சீமந்தத்துக்கு போயிருந்தோம். அங்கு தான் அவளுடைய நாத்தனார், அதான் என்னோட அக்கா அந்த மாதிரி புடவை உடுத்தி இருந்தாள். பார்க்க அது அவளுக்கு நன்றாக இருந்தது. அதைப் போலவே தானும் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இப்போது வரை இருக்கிறாள்.

நானும், அவளும் அந்த புடவையோட  போட்டோவை காட்டி எல்லா பிரபலமான கடையிலிருந்து சாதாரண கடை வரை அலைந்து திரிந்து பார்த்து விட்டோம். இதுவரை கிடைத்தபாடில்லை.

’அந்த புடவை உனக்கு நல்லா இருக்காது. வேற காஸ்ட்லியா கூட வாங்கிக்கலாம்’ ன்னு சொல்லிப் பார்த்தேன். ஆனால் லதா குழந்தை மாதிரி பிடிவாதம் செய்வதை விட்டால்தானே?

இன்று அதே மாதிரியான புடவை ஒரு சாதாரண கடையில் வெளியே விளம்பரத்திற்காக தொங்கிக் கொண்டிருந்தது. காரில் போகும் போதே அவளுடைய கழுகுக்கண்கள் அதைப் பார்த்து விட்டன.

ரொம்ப பிசியான ரோட்டில் வேகமாக போய்க் கொண்டிருந்த எங்களது கார் சுமார் 2 கி.மீ. போய் ஒரு யூ டர்ன் போட்டு திரும்பியது. டிரைவரை லெஃப்டு சைட்லேயே மெதுவாக போகச் சொன்னேன். ஒரு குப்பைத் தொட்டியதான் லதா அந்த கடைக்கு அடையாளமா வைச்சுருந்தா. ஒரு வழியா குப்பைதொட்டி பக்கத்தில வண்டிய நிறுத்தினோம். அந்த இடத்தில்  இருந்த கடையெல்லாம் துணிக்கடைதான்.

’என்னால முடியல’ன்னு சொல்லி ஒரு கடை வாசல் முன்னால உட்கார்ந்தேன். ‘அப்பதான் என்னை விட்டு விடுவாள்’ என்று எண்ணிய என்னிடம், ’எப்படிங்க, கடைய சரியா கண்டுபிடிச்சிங்க’ என்றாளே பார்க்கலாம். 

கடை வாசலில் அவள் பார்த்து வைச்ச புடவையை காணவில்லை. ஆண்டவா, அந்த புடவைக்கு மட்டும் என்ன அவ்வளவு டிமாண்ட்’ ன்னு புலம்பிக் கொண்டே என் மனைவியின் ரசணையை பாராட்டினேன். அவளோ, 'சும்மா வாங்கோ’ ன்னு என்னை அதட்டினாள். கடைக்காரனிடம் புடவையின் போட்டோவைக் காட்டி இதே போல மயில் கழுத்து கலர் புடவை ஒன்னு வேணுமென்றாள்’ என் மனைவி.

’அச்சச்சோ, இப்பதான் ஒரு அம்மா தன் புருஷனோட வந்து அத வாங்கிட்டு போனாங்க. வேற ஸ்டாக் வந்தாதான் உண்டு’ என்று சொல்லி முடித்தார். லதா ஏனோ என்னை முறைத்தாள். அந்த புடவையை யார் வாங்கியது என்ற விவரம் தெரியவில்லை.

வயிறு பசித்தது. இருவரும் அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு போனோம். அந்த ஓட்டலில் எங்களுக்கு முன் டேபிளில் இருந்த கணவன் - மனைவி கையில் இருந்த பையை திறந்தார்கள். அதில் இருந்த புடவையை டேபிளின் மேலே வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புடவை தான் லதாவுக்கு வேண்டிய புடவை. லதா அவர்களை கேட்டுப் பார்க்கலாமா? இல்லை அவர்கள் ஏமாறும்போது சுட்டு விடலாமா’ என்றாள். ’எதற்கும் சம்மதம். இனிமேல் என்னால் அலைய முடியாது’ என்றேன். லதா ஏக்கத்தோடு என்னைப் பார்த்து,’ ரொம்ப சாரிங்க’ என்றாள்.

அவர்கள் சாப்பிடுவதற்கு கையை கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்தார்கள். அப்படியே அந்த புடவை பற்றி லதா அவர்களைக் கேட்டாள். புடவை விலை 3500 ரூபாய் என்று சொன்னார்கள். 

'இந்த மாதிரி இன்னொரு புடவை அந்த கடையில் இல்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, இந்த புடவைய நான் உங்ககிட்டேந்து வாங்கிக்கட்டுமா? கூட நீங்க கேட்கற அமவுண்ட கொடுத்துடறோம்’ சொன்னது லதா. இதக் கேட்ட அவுங்க அப்படியே ஷாக் ஆயிட்டாங்க.

இதையும் படியுங்கள்:
என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!
Tamil Short story - 'Lucky Latha'!

ஆனால் அவர்கள் நண்பர் ஒருவர் கேட்டதன் பேரில் வாங்கி செல்வதாகவும், நண்பர், ’வேண்டாம்’ என்று சொன்னால் ’தருகிறேன்’ என்றும் சொன்னார்கள். நாங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டோம். அன்று மாலை கேட்டுவிட்டு சொல்லுவதாக சொல்லிவிட்டு போனார்கள். இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்தது.

எதிர்பார்த்தது போல் அவர்களிடமிருந்து மாலை ஃபோன் வந்தது. அவர்கள் ஃபிரண்டு ஒருத்தருக்கு எடுத்து வச்சிருக்காங்களாம். ஃபோன் கட் ஆகி விட்டது.

மறுநாள் காலை விஜயா காரில் வந்து இறங்கினாள். சர்ப்ரைஸாக லதா விரும்பிய புடவையை அவளிடம் கொடுத்தாள். அதே புடவையைத்தான் அவளும் கட்டிட்டு இருந்தாள்.

’நீயும் இந்த புடவையை சீக்கிரம் கட்டிட்டு வா’னு சொன்ன தன் நாத்தனாரை புன்னகையோடு பார்த்த லதா, புடவையை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்தாள். ’லக்கி லதா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன் நான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com