

விபச்சார வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட பெண் கைதிகளை ஏற்றிக் கொண்டு திகார் ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருந்த அந்த போலீஸ் வேன், யமுனை நதிப் பாலத்தைத் கடக்கும் போது டிராபிக் ஜாமீல் மாட்டிக் கொண்டது.
மற்ற பெண் கைதிகளுடன் உட்கார வைக்கப் பட்டு இருந்த அகல்யா, நொடியில் முடிவு செய்தாள்.
காவலுக்கு உடன் வந்திருந்த பெண் கான்ஸ்டபிள்கள் என்ன காரணத்துக்காக டிராபிக் ஜாம் என்று தெரிந்து கொள்வதற்காக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனது இருக்கையில் இருந்து வேகமாய் எழுந்த அவள், அந்த போலீஸ் வேனின் கதவைத் திறந்தாள். அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து அவர்கள் சுதாரிப்பதற்குள் வேனில் இருந்து இறங்கி அவள் ஓடினாள்.
யமுனை ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் அவள் குதித்தாள்.
இந்தக் காட்சியை யம லோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்ர குப்தன் பதறிப் போனான். அவன் எம தர்மனிடம் ஓடினான்.
“பிரபோ. பூலோகத்தில் இன்று ஒரு அநியாயம் நடந்து விட்டது. ஊழலுக்கு எதிராகவும், வறுமை ஒழிய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரும் அகல்யா என்ற இளம் பெண்ணை விபச்சாரம் செய்தாள் என்று ஒரு வழக்கு ஜோடித்து, கோர்ட்டில் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.”
”ஜோடிப்பது என்றால்?”
“செய்யாத குற்றத்தை செய்ததாக பொய் வழக்கு போட்டு தண்டனை வாங்கிக் கொடுப்பது.”
“பூலோகத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதா? அது இருக்கட்டும். மேலே என்ன நடந்தது, சொல்...”
”ஜெயிலில் அவளை அடைக்க கொண்டு போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது அவள் போலீஸ் வேனில் இருந்து தப்பித்து விட்டாள்.”
“தப்பித்து ஓடி விட்டாளா?”
“இல்லை பிரபு. அவள் அப்படி தப்பித்து ஓடி விடக் கூடியவள் இல்லை. அவள் தப்பித்தது, தற்கொலை செய்து கொள்ள, யமுனை ஆற்றில் குதித்து விட்டாள். நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று போராடிய அந்த அகல்யாவின் உயிரை தாங்கள் எடுக்க வேண்டாம் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்ளவே நான் ஓடோடி வந்தேன் பிரபு.”
”அகல்யாவா? அகலிகையா?”