சிறுகதை: கல்யாண நாள் பரிசு!

Husband And Wife
Husband And Wife
Published on

கணவன் மதன் மீது அவள் சரியான கோபத்தில் இருந்தாள். காலையில் ஆபீஸ் கிளம்பும் போது, இன்று சீக்கிரமே வந்து, அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று, அப்படியே வரும் வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று சொல்லி இருந்தான். 

ஆனால், இப்போது இரவு ஏழுமணி ஆகிறது. இதுவரையிலும் வரவில்லை.

இன்று அவர்களின் கல்யாண நாள் என்பதாலும், கணவனோடு கோவிலுக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும், புது புடவை உடுத்தி, நேர்த்தியாக அலங்கரித்து கொண்டு தயாராகி இருந்தாள் மாலதி. இது அவர்கள் முதல் வருட கல்யாண நாள்.

அவனுக்காக அவள் கையால் மசால் வடையும் கேசரியும் பண்ணி வைத்திருந்தாள். நேரம் ஆக… ஆக, மதன் வராதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

மதன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி கிளை மேலாளர் பதவியில் இருந்தான்.  இருவருடைய பெற்றோரும் வெளியூரில் இருப்பதால்... அவர்கள் மட்டும் ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்கு இருந்தார்கள்.

 ‘வேலை பளுவில் மறந்து விட்டானோ!? போன் பண்ணி கேட்கலாமா ?’ என்று யோசித்து விட்டு பிறகு,

'பாவம் ஏதும் வேலையாக இருக்கலாம். அதுதான் வர முடியவில்லை போலும். இருந்தாலும் ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாமே ' 

மனதில் குழப்பத்தோடு 'டீவி' யில் அம்மன் துதி பாடல்களை போட்டு கேட்க ஆரம்பித்தாள்.

கடைசியில், மதன் வருவதற்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. அவன் நேரம் கழித்து வந்ததற்காக 'சாரி' என்று சொல்லி மன்னிப்பு கேட்டு அவளை சமாதானப்படுத்துவான் என்று மாலதி நினைத்தாள். 

அப்படி அவன் சொன்னதும், அவனை நன்றாக திட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருந்தாள்.

ஆனால், மதன் வீட்டிற்குள் நுழைந்ததும்…

"இன்னைக்கு ஆபிசில வேலை அதிகம். அதுதான் லேட்டாயிடுச்சு" என்று மாலதியின் முகத்தை கூட சரியாக பார்க்காமலே சொல்லி விட்டு, நேராக பெட் ரூம் சென்று, உடையை மாற்றிக் கொண்டு பாத் ரூமுக்குள் போனான். பின்பு கைகால் முகம் கழுவி விட்டு, அதை டவலில் துடைத்து கொண்டே கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

மாலதிக்கு அவன் செயல் வித்தியாசமாக இருந்தது. வந்த கோபத்தை கட்டு படுத்திக்கொண்டாள். 

அவள் எப்போதும் அவனிடம் அதட்டியோ கத்தியோ பேசியதில்லை. அவனும் அவளிடம் சண்டை போடுவதோ, சத்தமாக பேசுவதோ கிடையாது. ஏதாவது கோபம், டென்ஷன் என்று இருக்கும் போது மட்டும் அமைதியாகவே இருந்து விடுவான் அல்லது ‘அப்புறம் பேசிக்கலாம்’ என்று முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விடுவான். 

அதனால் அவள் மெதுவாக..

"ஈவினிங் சீக்கிரமா வந்துருவேன். கோயிலுக்கு போலாம்னு சொன்னீங்களே ! மறந்துட்டீங்களா?'' என்றாள்.

"ம்ம் ... அதான் சொன்னேனே, கொஞ்சம் வேலை அதிகம். அசதியா இருக்கு, நாளைக்கு பேசிக்கலாம்..." என்றபடி அவள் முகத்தை கூட நிமிர்ந்து பாராமல் படுக்கையை தயார்படுத்தி, தூங்குவதற்கு ஆயத்தமானான்.

"சாப்பிடலையா ... உங்களுக்காக வடை, கேசரி எல்லாம் ரெடி பண்ணி வைச்சிருக்கேன்” என்று அவசரமாக கேட்டாள்.

"நான் வெளிய சாப்பிட்டுட்டேன். நீ சாப்பிடு.”

அவன் போர்வையை போர்த்தி படுத்து கொண்டான்.

"இதென்ன புதுசா இருக்கு. கல்யாண நாள் அதுவுமா வெளியே சாப்பிட்டு வர்றது. நான் உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்னு தெரியுமில்ல ..." 

அவன் பதில் பேசாமல் முகத்தை மூடிய போர்வையை விலக்காமல் அமைதியாக இருந்தான்.

ஆபீஸ் வேலையில் ஏதாவது பிரச்சனை போல, அதனால் ஏதோ மன அழுத்தத்தில் அவன் இருப்பதாக இருக்கிறான் என்று அவளுக்கு தோணியது. ஆனாலும், அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. 

"என்னாச்சு? வாயை திறந்து சொல்லுங்களேன். ஆபீஸ் வேலையில் ஏதும் பிரச்னையா?"

இதற்கும் அவனிடமிருந்து பதில் வரவில்லை. 

அவளுக்கு ஏதும் புரியாமல் ...அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு மனசுக்குள் வேதனை உண்டாகி கண்கள் கலங்கியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: திக் திக் திகில் கதை - இன்னும் ஐந்து செகண்டுகள்தான்!
Husband And Wife

‘ஏதாவது ஒரு பிரச்னை என்றால், அவன் இப்படி குழந்தை தனமாக நடந்துக் கொள்வது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல… இருந்தாலும், அவனுடைய இந்த குணம் மாற வேண்டும். எதையும் மனம் விட்டு பேசினால் தான் மன அழுத்தம் குறையும். நம் மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்’  இதை அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று அவள் மனதுக்குள் நினைத்தாள்.

கொஞ்சம் நேரம் யோசித்து கொண்டே இருந்தவள்… சட்டென அவனை உலுக்கி எழுப்பினாள். மாலதி உலுக்கியதும் மதன் போர்வையை விலக்கி, அவளை திரும்பிப் பார்த்தான். 

அவனுடைய முகத்தை பார்த்ததும் பதறி விட்டாள்.  மாலதிக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. அவன் கண்கள் சிவந்து இருந்தது. கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் போர்வையை போர்த்திக்கொண்டு அழுது கொண்டிருந்ததாகவே தெரிந்தது.

பரபரப்போடு அவன் அருகில் வந்தாள்.

"ஏங்க ... என்ன ஆச்சு, ஏன் அழறீங்க" 

மதன் மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து,  கண்களை துடைத்துக்கொண்டே ... அவளை பார்த்தான்.

மாலதி திருமண நாளுக்கென்று, புது புடவை நகை எல்லாம் அணிந்து, தலையில் மல்லிகை பூ சூடி.. மிக அழகாக இருந்தாள். அவள் முகம்… இப்போது இப்போது குழப்பத்தில் வெளிறி போய் இருந்தது. 

அவளின் ஆசை, உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவன் நடந்து கொண்ட விதம், அவனுக்கே வருத்தமாக இருந்தது.

அருகில் வந்து உட்கார்ந்த மாலதியை, சட்டென கட்டி அணைத்து, அவள் தோளில் முகத்தை சாய்த்துக் கொண்டு தழுதழுத்த குரலில் பேசினான்.

"சாரி மாலதி ... ஆபிஸில் இன்னைக்கு வேலை அதிகம். நீ எனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு தெரியும். நான் வெளியில் எங்கேயும் சாப்பிட்டுட்டு வரலை. நான் உனக்காக ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன். அந்த கிப்ட என் பேண்ட் பாக்கெட்டில் வைத்து இருந்தேன். இப்ப  நம்ம அபார்ட்மெண்ட் பார்கிங்ல வந்து வண்டிய நிறுத்திட்டு .. பாக்கெட்டில் கைவிட்டு பார்த்தா… அந்த கிப்ட காணோம்! எங்கேயோ வழியில் விழுந்துடுச்சு போல. எனக்கு மனசே கேட்கலை. அதனால் திரும்ப வண்டிய எடுத்துகிட்டு வந்த வழியெல்லாம் போய் தேடி பார்த்தேன். கிடைக்கவே இல்லை. அதான்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது."

அவன் நா தழுதழுக்க ஒரே மூச்சில் நடந்ததை சொல்ல ... மாலதிக்கும் கண்கள் கலங்கி விட்டன. அவளுக்கு அவனுடைய வருத்தம் புரிந்தது.

"சரி விடுங்க ... நீங்க அழுததை பார்த்ததும் பயந்துட்டேன். உங்க நிலை எனக்கு புரியது. ஆனா, இப்படி கவலையை மனசுக்குள்ள வச்சிக்கிட்டு அழுது கிட்டு இருந்தா எப்படி?! எதுனாலும் மனச விட்டு சொல்லுங்க. அப்பதான் மனசுல பாரம் குறையும்”  என்றபடி அவன் கண்களை துடைத்து விட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“கிப்ட ரொம்ப விலை போட்டு வாங்கிட்டீங்களா... "

"ஆமா, அது  ஒரு கோல்ட் வித் டைமன் கம்மல். சின்னதா அழகா இருந்தது. உனக்கு ரொம்ப பிடிக்கும். நம் திருமண நாள் பரிசா உனக்கு கொடுக்க நினைச்சது ... இப்ப மிஸ் ஆயிடுச்சு." 

அவனுடைய கவலையான முகமும் வார்த்தைகளும், அவள் மனதை கஷ்ட படுத்தியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - இதுவொரு வயசு!
Husband And Wife

"எங்க விழுந்திருக்குமின்னு தெரியலையா? சரி ... விடுங்க! நீங்க கஷ்ட பட்டு சம்பாதித்த பணம் .. கடவுள் அருளால் திரும்ப கிடைக்கும், கவலைப் படாதீங்க." 

"என்னை புரிஞ்சுகிட்டு இவ்வளவு இதமா ... அன்பா பேசற மனைவிக்கு, கல்யாண நாளுக்கு ஒரு பரிசு தர முடியலைன்னு வருத்தமா இருக்கும்மா" என்று அவன் மீண்டும் சொல்ல…

"எனக்கு கல்யாண நாள் பரிசே… நீங்களும் உங்க சந்தோஷமும் தான். வாங்க பசிக்குது. நாம சாப்பிடலாம்." 

என்று சொல்லியபடி சமையல் அறைக்கு சென்றாள் .

அப்போது காலிங் பெல் அடித்தது.

"இந்நேரத்தில் யார் காலிங் பெல் அடிப்பது?" என்று மதன் அவசரமாக எழுந்து, வாசல் கதவருகே போய் பாதுகாப்பு துளை வழியே பார்த்தான்.

வெளியே அபார்ட்மெண்ட் செக்யுரிட்டி கேசவ் நின்றிருந்தார்.

மதன் அவரை பார்த்ததும், கதவைத் திறந்தான்.

"சார் இது உங்களுதுதானே .."

அவர் ஒரு கவரை அவனிடம் தந்தார்.

அது… அவன் வாங்கி கொண்டு வந்த அதே கிப்ட் கவர் ! இது… இது எப்படி இவரிடம் வந்தது? மதனுக்கு ஒரே ஆச்சரியம்!

"ஆமா என்னுடையது தான்... இது உங்களுக்கு எப்படி கிடைத்தது" உச்சகட்ட மகிழ்ச்சியோடு கேட்டான்.

"சார், நா ரவுண்ட்ஸ் வரும் போது, நம்ம அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் ஏரியால ஒரு பில்லர் கிட்ட இது கிடந்தது. அது கூட இருந்த பில்லில் உங்க பேரு அட்ரஸ் இருந்தது. அதனால் இப்ப கொண்டு வந்தேன்." 

மாலதி இவர்கள் பேசுவதை கவனித்து விட்டு, மிகவும் சந்தோஷமாகி போனாள்.

“நீங்க கஷ்ட பட்டு சம்பாதித்த பணம்... கடவுள் அருளால் திரும்ப கிடைக்குமுன்னு நான் சொன்னது சரியா இருக்கு பாத்திங்களா?" என்று சொன்னபடியே கையில் வைத்திருந்த கேசரியை, அப்படியே செக்கியுரிட்டி கேசவிடம் கொடுத்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com