

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாண ஓடை கிராமம் தான் கவினுக்கு சொந்த ஊர். கல்யாண ஓடை காரணப் பெயர். ஊரை ஒட்டி ஓடும் நதியின் பெயரும் கல்யாண ஓடை தான். அது நதியுமில்லை, ஓடையுமில்லை இரண்டுக்கும் நடுவிலான நீர் நிலை.
பெரிய வாய்க்கால், அதில் முங்கி எழுந்து கரையை ஒட்டியுள்ள கல்யாண புரீஸ்வரர் ஆலயத்தில் சாமி கும்பிட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும், நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும் என்பார்கள்.
கவின் சிறு வயதில் கல்யாண ஓடையே கதியென்று கிடப்பான், கண்கள் சிவக்க தண்ணீரில் ஆட்டம் போடுபவனை அம்மா வந்து அடித்து இழுத்துக் கொண்டு போவாள்.
படிப்பு, வேலை என்று வந்த பின் இப்போதெல்லாம் எப்போதாவது ஊருக்கு வரும்போது மட்டும்தான் கல்யாண ஓடைக் குளியல்.
அமெரிக்கா டெக்ஸாஸ் ஹூஸ்டன் டவுனில் உள்ள கம்பெனியில் இருந்த கவினை, அவன் அப்பாவின் மரணம் சென்னைக்கு வர வைத்தது. டெக்ஸாஸ், சென்னை எல்லாமே கவினுக்கு கசக்கிறது.