
அதிகாலை நாலு ஐந்து மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளியெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து எல்லாரையும் அனுப்ப அன்றைய தினமும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் பாமா.
"மாமா… நானொருத்தி இங்க கழுதை மாதிரி கத்தீட்டிருக்கேன்.. நீங்க பாட்டுக்கு உக்கார்ந்து டிவி பார்த்திட்டிருந்தா எப்படி?! பையனை ஸ்கூலுக்கு அனுப்பணும், பொண்ணைக் எக்ஸாமுக்கு கரெக்டா செண்டர்ல கொண்டு விடணும்…! அதெல்லாம் பத்திக் கவலைப் படாம, அப்படி என்ன டீவில மூழ்கி இருக்கீங்க?!" அவள் கஷ்டம் அவளுக்கு..! கத்தினாள்.
கணேசன் சாவகாசமாய் எழுந்து குளிக்கப்போனான்.
பாத்ரூமுக்குள் போனதும்தான் தெரிந்தது வழக்கம்போல, தான் தலை துவட்டத் துண்டை எடுத்துப் போகவில்லை என்று!
"பாமா..!" அன்பாய்க் கூப்பிட்டான் உள்ளிருந்து.
"மாமா..!" மறுகினாள் வெளியிலிருந்து.
"ஒரு துண்டை எடுத்துப் போடேன்!" கெஞ்சினான்.
"உச்சு..!" என்றொரு சப்தம். பிறகு, ஒரு ஐஞ்சு நிமிஷம் சப்தமே இல்லை!
அரைகுறையாய்த் திறந்து வைத்திருந்த பாத்ரூம் கதவு வழியே டொம்முனு வந்து விழுந்தது... பக்கெட்டில் நிறைந்து விளாவி வைத்திருந்த வென்னீர் கலந்த குளிக்கும் தண்ணீரில் ஒரு டர்க்கி டவல்....