

டெல்லி காசியாபாத் சந்தர் நகரில் இருந்து கன்னாட் ப்ளேஸ் வந்த ஜானகி அங்கு பாலிகா பஜாரில் ஊருக்குத் தேவையான துணிமணிகள், செப்பல், அலங்காரப் பொருட்கள் என என்னென்னமோ வாங்கிக்கொண்டிருந்தாள். அவள் வழக்கமாகப் பொருட்கள் வாங்கும் கடையின் உரிமையாளர் "க்யாஜி படா பர்சேஸ்" என தன் பான்பராக் பல்லைக் காண்பித்தபடி கேட்டார்.
"ஆங் மே அப்னா நேட்டிவ் ஜாத்தி ஹும்" என்றாள் ஜானகி முகமலர்ச்சியுடன்.
"அச்சா" என்ற கடைக்காரர். அவளுக்குக் கடைக்குள் இருந்து புதிதுபுதிதாகப் பொருட்களை எடுத்துவந்து காண்பித்தார்.
பர்ச்சேஸ் முடித்து, டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தாள் ஜானகி.
அந்தப் பிரம்மாண்டமான பேக்கேஜைப் பார்த்து அவள் கணவன் சுந்தர் "அரே பாப்ரே, ஜானு நீ ட்ரெயின்ல போகல. ஃபிளைட்ல இதெல்லாம் ஏத்தவே மாட்டான்…" என்றான் கோபமாக.
"இல்லைங்க... ரொம்ப வருஷம் கழிச்சு எங்க ஊருக்குப் போறேன்... அதான்…" என்றாள் ஜானகி சற்று தயக்கத்துடன்.
"ஃபைன் போடுவான் பார்த்துக்கோ" என்றான் சுந்தர் பல்லைக் கடித்தபடி.
"அப்பா, அம்மா ரொம்ப ஆசையா அவங்க பிறந்த ஊருக்குப் போறாங்க. ஃப்ரீயா விடுங்கப்பா," என்றான் அவர்களின் ஒரே மகன் விகாஸ்.
மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் ஜானகி. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என தன் ஒன்றுவிட்ட அக்கா மகன் டெல்லியில் வேலை பார்த்தாலும் பரவாயில்லை என திருமணம் செய்து வைத்தார் ஜானகியின் தந்தை.