
அன்று வெள்ளிக்கிழமை, காலை நேரம், மீனா தலைக்கு குளித்து விட்டு, சுவாமி படங்கள் ஒவ்வொன்றுக்கும் மலர் வைத்து, சுவாமி அலமாரியில் இருக்கும் குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி, புதிதாக திரி போட்டு, விளக்கு ஏற்றினாள். கந்தசஷ்டி கவசத்தை மெதுவாக சொல்லிக் கொண்டே நமஸ்காரம் செய்தவள், தன் தாய், தந்தை இருவருக்கும் நமஸ்காரம் செய்தாள். இன்று அவள் புதிதாக வேலைக்கு போகிறாள்.
மகளின் செயலைக் கண்டு, அவள் அம்மா மரகதம் பூரித்துப் போனாள். இங்கு மட்டுமல்ல, இவள் போகும் இடத்திலும் சிறப்படைய வேண்டும் என்றும், நல்ல வரன் அமைய வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக் கொண்டாள்.
ராமநாதன் மரகதம் தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். எல்லாமே பெண் பிள்ளைகள். அவர்கள் வளரும் பருவத்தில், பெற்றவர்கள் அடைந்த கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. 'பெண்மை' என்ற கோட்டுக்குள் வளர்க்க வேண்டிய அவசியம், கடிகார முட்களாய் ஓயாமல் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்... எல்லாமே அவர்களை நிழலாய் தொடர்ந்தன.