

“இந்தாம்மா..”
அழைத்தது போதாது என்று கை தட்டினார் ராமச்சந்திரன்.
மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தன் தள்ளுவண்டியில் தரம் பிரித்துக் கொண்டிருந்த நாச்சம்மாள் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.
பங்களா வீட்டு கேட்டுக்குள் நின்றிருந்த ராமச்சந்திரன் அவளை தன் அருகில் வருமாறு சைகை செய்ய.. கேள்விக்குறியுடன் அவரை நோக்கி வந்தாள். அவரது தோற்றம் பார்த்து மிரண்டாள்.
“ஏனுங்க..?”
அளவெடுப்பது போல அவளை மேலும், கீழுமாக பார்த்தவர் “ம்.. உன் பேரு என்ன..?” என்றார்.
“நாச்சம்மா..ங்க..” என்றாள் மென்று விழுங்கினபடி.
“ம்! எங்கிருக்கே? உன் வீட்டு விலாசம் சொல்லு..”
“இங்கே பெரிய மாரியம்மன் கோவில் கிட்ட மகாத்மா காந்தி நகர், ரெண்டாவது வீதி..”
ஒரு தாள் எடுத்து அவள் சொன்னவவைகளை குறித்துக் கொண்டார் கவனமாக.
“ஓ. தினம் எத்தனை வீட்டுக் குப்பைக சேரும்.. எத்தனை வீதிக்கு ரவுண்ட் அடிக்கிறே..?”
“பத்து பன்னண்டு வீதி வரும்ங்க. ஒரு நானூறு வீடு இருக்கும்..”
“ம்.. ஒரு நாளைக்கு எத்தனை கிலோ குப்பை சேரும்?”
“சரியாத் தெரியலைங்களே. இதெல்லாம் எதுக்கு..?”
“ம் சொல்றேன். நூறு கிலோ போட்டுக்குவா.? எத்தனை வீட்டுல மக்கும், மக்காத குப்பைகளை சரியாப் பிரிச்சுத் தர்றாங்க..?”
“பாதி வீட்டுல கூட இல்லைங்க. நானும் எத்தனை தடவை தலைதலையா அடிச்சுக்கிறது! கண்ணாடி பாட்டிலையெல்லாம் உடைச்சு காகிதத்துல சுத்திப் போட்டுர்றாங்க. சொல்லவும் மாட்டேன்றாங்க. தெரியாம கை பட்டு கிழிச்சுடுது..”
“சரி உன் வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க. எத்தனை பசங்க உனக்கு..?”
“குழந்தைங்க இல்லை சாமி.. எனக்கு மட்டும் வாரிசு இருந்திருந்தா இந்த கேடு கெட்ட பொழப்புக்கு..” அவள் குரல் இறங்கியது.
“சரி சரி.. அவ்வளவு தான். இனி நீ உன் வேலையைப் பார்க்கலாம் போ..” நகர்ந்தார் அவர்.
“சாமி இருங்க. எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க.? முனிசிபாலிட்டில என் மேல புகார் எதுவும் கொடுக்கப் போறீங்களா. நான் ஒண்ணுமே..”
“அதெல்லாம் இல்லை. பயந்துக்காதே.” சிரித்தார். “என்னோட பேத்தி படிக்கிற ஸ்கூல்ல இது ஒரு ப்ராஜெக்ட்.! நமக்கு உதவியா இருக்கிற சமூகப் பாதுகாவலர்கள்ன்ற தலைப்புல ஒரு அசைன்மெண்ட் கொடுத்திருக்காங்க. அவ உன்னைப் பார்த்தா பயந்துக்கறா. அதனால தான் நான் விவரம் கேட்டுக்கிட்டேன்.. அடுத்து லைன்மேன் கிட்ட பேசனும். போஸ்ட் மேன் இன்னைக்கு வருவாரான்னு தெரியலை..”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “சரிங்க புகார் எதுவும் பண்ணிடாதீங்க. ஏற்கனவே பொழப்பு சிரிப்பா சிரிக்குது..”
பத்து வருசமா இந்தத் தெருவுல குப்பை அள்ளிட்டிருக்கோம்.. இத்தனை நாளும் கண்டுக்காம இருந்த மனுசன் இன்னைக்கு யாரோ சொன்னாங்கன்றதுக்குப் பேசறான்.. நம்ம கூடப் பேச, ஸ்கூல்ல சொல்லித் தர வேண்டியதா இருக்கு!’
அங்கலாய்த்தபடியே நகர்ந்தாள் அவள்.