

"என்னங்க.. என்ன சொல்றீங்க.. உங்க தங்கச்சி பொண்ண நம்ம ஆல்வினுக்கு குடுக்குறதுக்கு ஓகே சொல்லிட்டாங்களா? எப்படிங்க..?" நம்ப முடியாமல் திணறினாள் நான்சி.
கணேஷ் அமைதியாக உட்கார்ந்திருந்தார். "ஆமாம்மா காலையில இருந்து இதையே எத்தன தடவ கேப்பம்மா!" என்றார் சிரித்தபடி.
"இல்லைங்க.. நம்ம கல்யாணதுக்கு அப்புறம் பெருசா அவங்க நம்மகிட்ட பேசுனது கூட இல்ல. உங்க தங்கச்சி கல்யாணதுக்கு கூட நம்மள பெருசா கூப்பிடல. அதான் இப்ப எப்படினு தோணுச்சு!"
"அதெல்லாம் அப்படிதான். என்ன இருந்தாலும் சொந்தம் விட்டு போய்ட கூடாதுல்ல அதான்" என்றார் கணேஷ்.
"அதுவும் சரிதாங்க!" என்றவாறு சர்ச்சுக்குக் கிளம்பத் தொடங்கினாள் நான்சி. வீடு முழுவதும் கிறிஸ்தவ வாசம் நிரம்பி இருந்தது. மகன் ஆல்வின் இன்னும் கிளம்பாமல் இருப்பது கோவத்தை ஏற்படுத்தியது.
"என்னடா நீ? இப்பதா கர்த்தரோட ஆசீர்வாதத்துல உங்க அத்தை பொண்ண கட்டிக்க வழி கிடைச்சிருக்கு நன்றி சொல்ல வேணாமா? கெளம்பு சீக்கிரம்" என்றபடி உள்ளே சென்றாள்.
ஆல்வினுக்கும் தனது அத்தை மகள் நந்தினியை மிகவும் பிடித்துதான் சம்மதம் சொன்னான். நிச்சயம் அன்று அவனது வருங்கால மாமனார், "நந்தினிக்கு மிகவும் பிடித்தது கிருஷ்ணர்" என்று கூறி அந்த தீமில் அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். அம்மாவுக்கு சற்று நெருடலாக இருந்தது. புரிந்தாலும் புது மாப்பிள்ளை களை அதற்கு இடமளிக்க மறந்தது.
நான்சியும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்து புது மணத்தம்பதி மாடியில் குடி வைக்கப்பட்டனர். நாட்களும் நகர்ந்தன. நந்தினியின் தாயார் வரும் பொழுதெல்லாம் தனது அண்ணனுக்கு விபூதி இடுவது வழக்கமானது. இது வேண்டுமென்றே செய்யப்படுவது போன்றும் தனது மகனையும் பிரித்து விடுவர் என்ற எண்ணம் அரிக்க துவங்கியது.
ஒரு நாள் மாலை வெளியில் சென்று விட்டு திரும்பிய நந்தினியும், ஆல்வினும் கையில் ஒரு பார்சலுடன் வந்தனர். ஆல்வின் அலுவலகத்தில் புது வருட காலண்டர் கொடுத்திருந்தனர். நந்தினி அதை ஹாலில் வைத்து திறந்து பார்த்து விட்டு கண்களை அகல விரித்தாள்.
"ஆல்வின் இங்க பாருங்க.. எனக்கு புடிச்ச ராதே கிரிஷ்ணா ஊஞ்சல்ல அழகா ஆடிட்டு இருக்காங்க சோ கியூட்" என்று கொஞ்சினாள். உடனடியாக அதனை ஹால் சுவற்றில் மாட்டிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டாள். காலை இறங்கி வந்தவளுக்கு அதிர்ச்சி அதை கழற்றி அலமாரியில் யாரோ வீசியிருந்தது தெரிந்து கணவனிடம் முறையிட்டாள்.
சத்தம் கேட்ட நான்சி, "ஏம்மா! என்ன ஆச்சுனு இப்படி என் மகன்ட்ட கத்துற என்றாள்?"
"நான் எங்க அத்தை கத்துனேன்?" என்றவாறு மாடிக்கு சென்றாள் நந்தினி.
"என்னம்மா! ஏம்மா இப்படி பண்றீங்க?" என்றான் ஆல்வின்.
அவ்வளவுதான் நான்சி வெடித்து விட்டாள். "என்னடா அவ சொல்ரானு நீயும் என்னை கேள்வி கேக்குற?" என்றவாறு தனது அறைக்குள் புகுந்தாள். ஆல்வின் குழப்பத்துடன் தனது அப்பாவை பார்த்தான்.
"என்னப்பா! அம்மா தானப்பா கல்யாணம் பண்ண சொன்னாங்க இப்ப ஏன்பா?" என்றான் உடைந்த குரலில். அப்பா நிதானமாக சொன்னார். "உன் அம்மா லவ் மேரேஜ் பண்ண நான்சில இருந்து மாமியாரா மாறிட்டா!"
"எங்க கல்யாணம் ஆன புதுசுல இப்படிதான் உங்க பாட்டியும் சண்ட போட ஆரம்பிச்சாங்க. அதனாலதான் பேச்சு வார்த்தையே இல்லாம போச்சு. இவ்ளோ நாளுக்கு அப்புறம் சரியாக உன் கல்யாணம் தேவப்பட்டுச்சு. ஆனா acceptance இங்க முழுசா இல்லப்பா!"
"லவ் மேரேஜ் பண்ண அம்மாவுமா இப்படி?" என்றான் ஆல்வின்.
"எல்லாம் சரி ஆய்டும்பா கவலப்படாத" என்று கூறி வெளியில் சென்றார் தந்தை.
தன்னுடையது லவ் மேரேஜ் ஆ இல்லையென்றால் அரேஞ்ச்ட் மேரேஜ் ஆ என்று புரியாமல் குழம்பினான் ஆல்வின்.