சிறுகதை: மறக்குமா புகை நெஞ்சம்?

மாற்றங்கள் நமக்குள் தான் இருக்கின்றன. மாற்றுவதும், மாற்ற நினைப்பதும், மாறுவதும் நம் கையில் தான்..!
Mom and Son crying
Mom and Son
Published on
mangayar malar strip

“அந்த மரத்துக் கீழ சிகரெட் குடிக்கிறது சிவகாமி பையன் முரளி தான..! ச்ச.. என்னவொரு தங்கமான அம்மாவுக்கு.. இப்படி ஒரு தறுதலையான புள்ளயான்னு நெனக்கும் போதுதா ரொம்ப கஷ்டமா இருக்கு..!” என்று ஒருவர் கூற,

அதற்கு மற்றொருவர், “அப்பனே சரி இல்லாம இருக்கும்போது, புள்ள எப்படி இருக்கும்..? அப்படி தான இருக்கும்..!” என்று கூறுகிறார். இப்படியே இருவரும் பேசி கொள்கிறார்கள்.

சிகரட்டைப் புகைத்து விட்டு, மிஞ்சியுள்ள சிகரெட் துண்டை கீழே போட்டு காலால் மிதித்துவிட்டு பின் பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு செல்கிறான் முரளி. வீட்டிற்குள் வந்ததும் புகைவாடையை உணர்ந்த அம்மா, “ஒங்க அப்பன் தா இப்படி பண்றான்னு பாத்தா நீயுமாயா..! ஏய்யா முரளி பீடி குடிக்கிறத நிப்பாட்டுய்யா..!”

“ம்..சரி..சரி” என்றபடி ஃபோனை நோண்ட ஆரம்பிக்கிறான். அப்போது, பாயில் கீழே படுத்துக் கிடந்த முரளியின் அப்பா படுத்தபடியே தொடர்ந்து இரும்புகிறார். இதை முரளி கண்டு கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்கிறான். சிவகாமி செம்பில் தண்ணீரை அள்ளிக்கொண்டு, கணவரிடம் வந்து கொடுக்கிறார்.

சிறிது நேரம் கழித்து அம்மாவிடம் சொல்லாமல் நண்பனை பார்ப்பதற்காக முரளி பைக்கில் வெளியே செல்கிறான். நேரம் ஓடுகிறது.. இரவாகியும் முரளி வீட்டிற்கு வரவில்லை. சிவகாமி முரளிக்காக வாசலையே பயம் கலந்த ஏக்கத்தோடு பார்க்கிறார்.11:00 மணியளவில் முரளி வீட்டிற்கு வருகிறான். பதறிக்கொண்டு அம்மா கேட்க, அதற்கு முரளி, “ம்மா.. சுதனோட குடும்பம் வேற வீட்டுக்கு போறதுநால, பழைய வீட்டுல உள்ள ஜாமாவ புது வீட்டுக்கு ஏத்தி எறக்குறதுல லேட் ஆயிடுச்சு..!”என்று கூறி தள்ளாடியபடியே தூங்க செல்கிறான்.

‘கடவுளே நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்.. கேட்கவே மாட்டேன்றான்..! நீ தா அவன காப்பாத்தணும்..!’ என்று மனதில் நினைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறார் முரளியின் அம்மா.

காலையில் முரளிக்கு ஒரு போன் வருகிறது. யார் என்று பார்த்தால் அது சுதன். போனை பேசிவிட்டு அவசர அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு, பல்லு கூட விளக்காமல் பைக்கில் சுதன் வீட்டுக்கு செல்கிறான்.

முரளி கலக்கத்தோடு, “எப்புட்றா நம்பவே முடில..!” அதற்கு சுதன் கண்கள் கலங்கியவாறு, “அப்பா ரொம்ப நாளா ஸ்மோக் பண்ணிக்கிட்டு இருந்தாருடா.. அப்பறம் லங்க் கேன்சர் வந்துருச்சு.. அப்படியும் ஸ்மோக்கிங்க விடல.. இப்போ திடீர்னு அப்பாக்கு இப்படி ஆயிருச்சுடா..!”

மறுபக்கம், தன் கணவனின் இழப்பை நினைத்து சுதனின் அம்மா கதறி அழுந்து ஒப்பாரி வைப்பதை பார்த்த முரளி, சுதனின் அம்மா இடத்தில் தனது அம்மாவை கற்பனை செய்து பார்க்கிறான்.

முரளி, “மச்சான் உன்னோட வலி எனக்கு தெரியுது.. இருந்தாலும் நீதா இதுக்கப்புறம் தைரியமா இருக்கணும்.. அம்மாவ கடைசி வர பாத்துகனும்டா.! ஒனக்கு நா இருக்கேன்..டா” என்று சுதனை ஆறுதல் படுத்துகிறான். ஒப்பாரி சத்தமும், அழுகை குரலும் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருந்தன.

மாலை வரை சுதனின் வீட்டில் இருக்கிறான். பின் முரளி வீடு திரும்புகிறான். போகும் வழியில் ஒரு பெட்டிக்கடையில், ஒரு சிகரெட் பாக்கெட்டையும் ஒரு தீப்பெட்டியையும் அதோடு இரண்டு நிஜாம் பாக்குகளையும் வாங்கிக் கொண்டு தனது பாக்கெட்டுக்குள் போட்டு செல்கிறான். வழக்கமாக சிகரெட் குடிக்கும் அந்த மரத்துக்கு அடியிலுள்ள பெஞ்சில் உட்கார்ந்து சிகரெட்டை பற்ற வைக்கிறான். அப்போது திடீரென்று ஒரு சத்தம் கேட்கிறது.

பார்த்தால் பைக்கில் சென்றவரை கார்காரன் மோதி விடுகிறான். முரளி பதறிக்கொண்டு அருகில் செல்கிறான். பைக்கில் வந்தவர் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்கிறார். கூட்டம் கூட ஆரம்பிக்கிறது; ஐந்து நிமிடம் கழித்து சிவப்பு விளக்கு சுழன்றபடி பேரொலியுடன் ஆம்புலன்ஸ் வருகிறது. முரளி ஒரு பக்கம் அடிபட்டவரை பிடித்து ஆம்புலன்ஸில் தூக்கி விடும்பொழுது, அடிபட்டவரின் சட்டைப் பையில் இருந்து ஒரு சிகரெட் பாக்கெட் கீழே விழுகிறது.

சிகரெட் பாக்கெட்டானது முழுவதும் இரத்தம் படிந்து காணப்பட்டது. இதைப் பார்த்த முரளி அதிர்ந்து போகிறான். அந்த அதிர்ச்சியிலேயே தனது பாக்கெட்டிலிருந்த சிகரெட் பாக்கெட்டை கையில் எடுத்து புதருக்குள் தூக்கி வீசுகிறான். சோகத்தோடு வீட்டிற்கு செல்கிறான்.

வீட்டில் அம்மா பரிதவிப்போடு, “தம்பி முரளி.. என்னையா.. என்ன ஆச்சு? காலையில சொல்லாம கொள்ளாம எங்கய்யா போயிட்ட” என்று கேட்டக, நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் சொல்கிறான். இறுதியில், அம்மாவிடம் அழுது கொண்டே, “அம்மா என்னைய மன்னிச்சுக்கோம்மா, இனிமேல் நா சிகரட்ட வாழ்க்கையில தொட்டுக் கூட பாக்க மாட்டேம்மா! சாரிமா.. இனிமே உன்னைய கஷ்டப்படுத்த மாட்டேம்மா..!” என்றபடி அம்மாவின் காலில் விழுகிறான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'புகை'யூர்
Mom and Son crying

“இந்த ஒரு வார்த்தைக்காக தான்யா உசுர கையில பிடிச்சுகிட்டு இருந்தேன்! இனிமே ஏம் பையன் என்னைய பாத்துக்குவாங்ககுற நம்பிக்க வந்துருச்சுயா! அழுவாத முரளி.. விடுயா இதுக்கப்பறம் நீ நல்லா வருவயா..!” இதைக் கேட்டு முரளி தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறான்.

“சரிய்யா.. இனிமேலு நீதா சுதனுக்கு பக்க பலமா இருக்கணும்..! சரியா..” என்று தன் மகனிடம் கூறுகிறார். அப்படியே தனது அப்பாவிடம் சென்று எல்லாவற்றையும் கூறி மன்னிப்பு கேட்கிறான் முரளி.

மாறுதலுக்கு உட்படாத வரை மாற்றங்கள் நமக்குள் ஏற்படுவதில்லை... மாற்றங்கள் நமக்குள் தான் இருக்கின்றன... மாற்றுவதும், மாற்ற நினைப்பதும், மாறுவதும்  நம் கையில் தான்..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com