

ராஜலக்ஷ்மிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது. வாழ்நாளில் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டதில்லை. மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வெளியே உள்ள நீண்ட பிளாட்பாரத்தில் ராஜலக்ஷ்மி நின்றுகொண்டிருந்தாள். மழை வரப்போகும் வாசனை காற்றில் வந்தது. அவள் முகத்தில் பதட்டம். கண்களில் நீர், என்ன செய்யப்போகிறோம் என்ற பயத்தில் நிலைகுலைந்து நின்றாள்.
எல்லா வசதிகளுடனும் வாழ்ந்த ஒரு பெண்ணான தன்னை, இப்படி ஆதரவு இல்லாத நிலையில் காண்பது தாங்க முடியாத அவமானமாக கருதினாள். கோபம், அஹங்காரம், அவசரம்… எல்லாம் ஒன்றாக சேர்ந்து அவளை குழப்பத்தில் தள்ளியது.
ஏன் இப்படி ஒரு நிலமை?
அன்று காலை கணவன் கைலாசம் லண்டன் விமானத்தை பிடிக்க கிளம்பிக்கொண்டிருத்தார். அவர் வியாபார நிமித்தமா அடிக்கடி லண்டன் சென்று வருவார். அடுத்தவாரம் திரும்புவதாக டிக்கட் வாங்கியிருந்தார்.