
இப்படி ஒரு பிரிவு ஏற்படும் என்று போன மாதம் வரை அவள் நினைத்தும் பார்த்ததில்லை. இத்தனை வருடங்களும் எப்படி இயல்பாய் நகர்ந்து போனதோ அப்படியே இதுவும் இயல்பாய் நடந்தது போலவேதான் இருந்தது.
அவர் அப்படியொன்றும் மோசமானவராய் இருந்ததில்லை என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. ஒரு நிமிடத்தில் அவள் உணர்ந்த ஆதங்கம், இயலாமை, கையாலாகாத்தனம் எல்லாமாகச் சேர்ந்துதான் அவளை இந்த முடிவை எடுக்க வைத்திருக்க வேண்டும். அவளின் பிரிவு அவரை எந்த வகையிலும் வருத்தப் போவதில்லை என்பதும் அவள் உணர்ந்ததுதான். ஒரு வினாடி நடந்தவற்றை நினைக்கும் போது, தான் எடுத்த முடிவு சிறுபிள்ளைத்தனமானதோ என்றும் தோன்றியது.