

சேந்தம்பட்டி கிராமம் காலை கண்விழித்ததில் இருந்து சுற்றி வந்தது பேச்சு. குழாயில் தண்ணீர் பிடிப்பவர்கள், விவசாய வேலைகளுக்கு செல்பவர்கள், கடைவீதியில் வெட்டிப் பேச்சு பேசும் ஆண்கள், என அனைவரின் காதுகளையும் கடித்த செய்தி, "வாத்தியார் பழனிச்சாமி பொண்டாட்டி எதிர்வீட்டு கம்பவுண்டர் குமரன் பயலோட ஓடிட்டாளாம் யார் கிட்டவும் சொல்லிடாத..." என பறை அறிவிக்காமல் தெரிந்த ரகசியம்.
"இது என்ன கூத்து" என நையாண்டி செய்தவர் பாதி "அடி பாவி மவளே எனக்கு தெரியும் அடிக்கடி அந்த குமரன் வீட்டுக்கு போயிட்டு போயிட்டு வந்தா இல்ல, இப்படித்தான் நடக்கும்னு நெனச்சேன்" என பாதிப்பேர், தங்களுக்கு தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றையெல்லாம் பேசினர். "இரண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு போக இந்த கயலுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ. புருஷன் காரன் நல்ல வாத்தியார் வேலை பார்க்கிறான். சம்பளத்துக்கும் குறைச்சல் இல்லை நல்ல குடும்பத்து பொம்பளையா இருந்தா இப்படி செய்திருப்பாளா?"
பழனிச்சாமியும் அவன் அம்மா சின்னாத்தாவும் காதுகளை பொத்திக் கொண்டனர். "சண்டாளி இப்படி ஒரு அவமானத்துக்கு எங்களை ஆளாக்கிட்டு போயிட்டியே!