

"என்ன இன்னிக்கு ஸ்கூல் விட்டு வந்ததிலேருந்தே குழந்தை முகம் சரியில்லையே! இப்படி கலகலப்பே இல்லாம இருக்கத் தெரியாதே அவளுக்கு. இந்நேரம் பேகை வச்சிட்டு ஓடிவந்திருப்பாளே. 'அம்மா என்ன நொறுக்ஸ் வச்சிருக்கிற கொண்டா கொண்டா பசி குடலத்திங்கறது'ன்னு எடுத்துக் கொடுக்கிறதுக்குள்ள பாடாப்படுத்திடுவாளே. என்னாச்சு குழந்தைக்கு?" என்ற மனப்பதைப்புடன், அதேசமயம் நிதானத்தை இழக்காமல் மகள் மேகலைக்குப் பிடித்த மணப்பாறை முறுக்கை தட்டு நிறைய போட்டு எடுத்துக்கொண்டு உள் அறைக்குச் சென்றாள் கலைவாணி.
அம்மாவுக்கு அழுத சுவடு தெரியக்கூடாதென்று முகம் கழுவி துவாலையால் அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தாள் மேகலை.
ஆனாலும் சிவந்திருந்த கண்கள் காட்டிக்கொடுத்து விட்டன.
பதறினாள் கலைவாணி.
"என்னடாக்கண்ணா! அழுதியா என்ன அதுவும் கண்ணும் மூக்கும் சிவந்து போற அளவுக்கு. யாரு என்ன சொன்னாங்க சொல்லும்மா."
அவ்வளவுதான் தாயின் மடியில் தலைசாய்த்து குலுங்கிக் குலுங்கி பெரிதாக அழத்தொடங்கி விட்டாள் மேகலை.
அழுது ஓயட்டும் எனக் காத்திருந்தாள் கலைவாணி.
மகளின் தலையை வருடி அவளை மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.