

வருடம் 2050!
அந்த கிறிஸ்டல் டவரின் 18 ஆவது மாடியில் தான் இண்டர்வியூ.
ராகவனும் லலிதாவும் லிஃப்டில் ஏறினர்.
ராகவன் 18 நம்பரைத் தொட்டார். கதவு மூட, லிஃப்ட் பூ போல மேலே சென்றது.
18 ஆம் மாடியில் இருவரும் நடந்து செல்ல காரிடாரில் பலரும் காத்திருந்தனர்.
ஒரு டை கட்டிய நபர் இவர்கள் பெயரை விளித்தார்.
"மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராகவன்."
இருவரும் எழுந்து அவர் பின் செல்ல ஒரு விசாலமான அறைக்கு அழைத்துச் சென்றார்.
"உட்காருங்க... ம்... சொல்லுங்க, உங்களுக்கு எத்தனை மணி ஸ்லாட் வேணும். ஒரு மணி நேரம்ன்னா பத்தாயிரம், இரண்டு மணி நேரம் என்றால் இருபதாயிரம். துணி துவைக்க மாட்டாங்க. காய வைப்பாங்க. நீங்க தான் காய்ந்ததும் எடுத்து மடிச்சுக்கணும். சமையல் பண்ண தனியா பத்தாயிரம். பீக் அவர்ஸ் காலை எட்டு முதல் பத்து. அந்த டயத்துக்கு வர புக் ஆயிட்டு. பத்து டூ பன்னிரண்டு தான் இருக்கு. மாலை வரமாட்டாங்க. வீடு பெருக்கி பாத்திரம் கழுவுவாங்க. நீங்க டீ காபி டிபன் தரவேண்டாம்."
"ஓகே சார், பத்து டூ பன்னிரண்டு அனுப்புங்க"
"ஓகே... ஸ்லாட் புக்ட்... உங்க ஐடி இதுதான். ஒரு கார்டு தந்தார்.
அதில் இவர்கள் விலாசம் போட்டு நேரம் குறித்து இருந்தது.
"அட்வான்ஸ் அம்பதாயிரம் கட்டுங்க. நாளை காலை முதல் மிஸ் பானு வருவாங்க. என்ன பானு ஓகேவா."
சேரில் அமர்ந்திருந்த பானு இயந்திரத்தனமாய் தலையாட்டினாள்.
"தாங்க்ஸ்."
இருவரும் லிப்டில் ஏறி கீழே இறங்கினர்.
"தெய்வாதீனமா ஒரு ஸ்லாட் இருந்து, பானு கிடைச்சிட்டாள்..." என்றாள் லலிதா.