
அப்சல் வீட்டுக்கு அருகிலேதான் குடியிருக்கிறான் ஆதர்ஷ். இரண்டு பேரும் ஒரே காம்பவுண்டிற்குள் குடியிருந்தாலும் எதிர் எதிராகப் பார்த்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள், சிரிக்கக்கூட மாட்டார்கள்! அதென்னவோ தெரியவில்லை இரண்டு பேரின் மனசுக்குள்ளும் அப்படியொரு வெறுப்பு.
இரண்டு பேரையும் சமாதானமாக இருக்கச் சொன்னவர்கள் ஏராளம்! ஆனால், அப்போதெல்லாம் அப்சல்தான் சொல்வான் "நாங்க என்ன சண்டையா போட்டிட்டிருக்கோம்?! ஒண்ணும் பேசிக் கொள்வதில்லை. ஆதர்ஷ் அவன் வேலையைப் பார்க்கிறான். நான் என் வேலையைப் பார்க்கிறேன். அவ்வளவுதான்! எதோ நாங்க சண்டை போட்டுக் கொள்வது மாதிரியும் நீங்க எங்களை சமாதனம் செய்ய நினைப்பது போலப் பேசுவதும் நினைப்பதுவும் நல்லா இல்லை! இல்லாத சண்டையை வளர்த்துவிட்டுடாதீங்க!" என்பான். அதைக் கேட்ட எல்லாரும் ‘நமக்கெதுக்குடா வம்பு! அப்சல் சொல்ற மாதிரி சண்டை இல்லாதவர்களுக்கிடையே எதுக்கு சமாதான முயற்சி?' என்று அமைதியானார்கள்.