
"என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள் செல்லம்மா பாட்டி. எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை அதக்கிய வாயோடு இவள் பேசுவதை புரிந்து கொள்வது கேக்கறவங்க பாடு. ஆனால் இப்போது அப்படியில்லை. மென்னு மென்னு சாரற்ற வெத்திலையை விட இந்த சங்கதி அதி முக்கியம். ஆட்டைப் பிடித்துக் கொண்டு போகும் பூவம்மாவை கேட்டாள் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த செல்லம்மா பாட்டி. "போயிட்டு வரையில மறக்காம எனக்கு ஒரு தைல குப்பி வாங்கியா பூவு. முட்டுவலி ஆளைக் கொல்லுது."
"உக்கும். இங்கே போவறதுக்கே அடி வயிறு கலக்குது" என்று நொடித்துக் கொண்டு நடந்தாள் பூவம்மா. கொஞ்ச நிலபுலமும் ஆடு மாடு கோழிகளும்.. ஒரே ஒரு மகளும்தான் பூவம்மா மணியன் தம்பதிகளுக்கு. இவர்கள் மகள் கண்மணி படிப்பிலும் அறிவிலும் மகா கெட்டி. அழகிலும் அம்சமானவள் தான்.