
'திறந்திருந்த மாலாவின் கைப்பையை ஏண்டா பார்த்தோம்? ச்சே!' என்றானது மகேஷுக்கு.
அப்படியெல்லாம் பார்ப்பவன் கிடையாது. திறந்திருந்தது அன்பு மனைவி மாலாவின் கைப்பையென்பதால் எடுத்துக்கொண்ட உரிமை! அல்ப ஆசை! எதேச்சையாக பார்த்தது, இப்போது விபரீதத்திற்கு விதை தூவியது.
அப்படி என்னதான் இருந்தது அப்பையினுள்..?
பிரபல பத்திரிகையொன்றிலிருந்நு வெட்டியெடுக்கப்பட்ட, புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யகுமாரின் கலர்ஃபுல் ஃபோட்டோ கட்டிங்தான்.
'மனம் ஒரு குரங்கு' என்பதற்கேற்ப, மகேஷின் மனம் அலை பாய்ந்தது. வீடு, அலுவலகம் என இரண்டையும் அருமையாக கையாள்வதில் மாலா கில்லாடி என்பதில் சந்தேகமே கிடையாது.
இரு பசங்களும் பள்ளியில் முறையே ஏழு மற்றும் ஐந்தாம் வகுப்புக்களில் படிக்கின்றனர்.
உடைக்கேற்றவாறு காதணி, ஸ்டிக்கர் பொட்டு, வளையல், மாலை, கைப்பையெனத் தவறாமல் அணிந்து அலுவலகம் செல்லும் மாலா, மகேஷைவிட நல்ல நிறம்.
'மாலாவின் கைப்பையில் எதற்காக சூர்யகுமார் ஃபோட்டோ? எப்படி கேட்க? என்னவென்று கேட்க? பிரபல விளம்பர நிறுவனத்தில் சினிமா சம்பந்தப்பட்ட பகுதியின் தொடர்பு அதிகாரியாக பணிபுரியும் மாலாவின் கைப்பைக்குள்... அவன் கொடுத்திருப்பானோ? என்ன விதமான பழக்கம்?'
நைசாக அதையெடுத்து தனது ஃப்ரீப்கேஸினுள் போட்ட சமயம்...
"புதுசா வாங்கின லேட்டஸ்ட் ஸ்டிக்கர் பொட்டு எங்க வெச்சேன்?", கூறியவாறே ஹாலுக்கு வந்த மாலா.
எதேச்சையாக டீவி யை ஆன் செய்ய, சேனலில் சூர்யகுமாரின் பாடல் காட்சி ஒளிபரப்பாக, "வாவ்" என்றாள். மகேஷும் சூர்யகுமாரின் விசிறிதான் என்றாலும், இப்போது ரசிக்கவில்லை. பார்க்க பிடிக்காமல், வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொள்கையில்,
"என்னங்க! உங்க ஆள்... பாக்கலையா?"
"என் ஆளா? உன் ஆளா?" என்றவனை வியப்புடன் பார்த்து, "என்ன! என்ன சொல்றீங்க?"
"ஒன்றுமில்லை. ஆஃபீஸில் முக்கியமான மீட்டீங். ஏதோ யோசனை. சரி! சரி! நீயும் கெளம்பு. காலங்காத்தால என்ன டீவி?" கடுப்புடன் கூறிச்சென்றான்.
இவருக்கு எனன ஆச்சு? ஆஃபீஸ் டென்ஷன் போல! நைட்ல கேக்கலாம். என நினைத்தவாறே, மாலாவும் புறப்பட்டாள்.
அலுவலகத்தில் மகேஷீக்கு வேலை ஓடவில்லை. போட்டோவை கைப்பைக்குள் வைக்கும் அளவுக்கு, அவனுடன் பழக்கமா? எல்லாவற்றையும் கூறுபவள், இது பற்றி ஒன்றுமே கூறவில்லையே?
வேண்டாத கற்பனைகள். மண்டை காய்ந்தது. காஃபியே குடிக்காதவன், 5-6 கப் குடிக்கையில், "உடம்பு சரியில்லையா மகேஷ் சார்?" சக ஊழியர் கேட்டதற்கு, 'உம்' கொட்டினான்.
வீடு திரும்புமுன், ஃப்ரீப் கேஸிலிருந்து, அந்த ஃபோட்டோவையெடுத்து கிழித்துப்போட்டான். மனசு சிறிது சமாதானமானாலும், இதுபோல வேறு ஃபோட்டோ இருக்குமோ? உள்மனசு பேசியது. தொலைந்து போன நிம்மதியுடன், தாமதமாக வீடு திரும்பினான்.
டைனிங் டேபிளில் மகேஷீக்காக காத்திருந்த மாலா, "மீட்டீங் லேட்டாயிடுச்சு போல! பசிக்குது சாப்பிட வாங்க!" என்றாள். ஃப்ரெஷ் ஆகி உடை மாற்றி சாப்பிட அமர்ந்தவன் ஒன்றும் பேசாமல், பேருக்கு சாப்பிட்டு முடிக்கையில்,
"என்னங்க! என் கைப்பையிலிருந்த ஒரு பேப்பர் கட்டிங்கைப் பாத்தீங்களா? காணலை!"
"கட்டிங்கா? நானா? உன் கைப்பையை பாக்கறதுதான் வேலையா? ஆஃபீஸ்ல எனக்கு தலைக்கு மேல வேலை..." சீறினான்.
"எதுக்கு எரிஞ்சு விழறீங்க? ஆஃபீஸ்ல என்ன ஆச்சு? லேட்டாயிடுச்சே! சொல்லுங்க." அன்புடன் கேட்டவளிடம்,
"ம் ... சந்தேகமா?"
"இல்லீங்க! அது வந்து...!"
"என்ன வந்து, போயி? சீக்கிரம் சொல்லு. டயர்டா இருக்கு."
"என் சிநேகிதி ராதா, அவ பொண்ணுக்கு வரன் பாக்கறா! ரெண்டு நாள் முன்னாடி வந்த ஆங்கில மாத இதழ் ஒன்றில் 'வரன் தேவை' விளம்பரம் பார்த்தேன். அவ பொண்ணுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணித்து. அவளிடம் கொடுக்கலாம்னு கட் பண்ணி கைப்பைக்குள் வெச்சேன். அது கலர்ஃபுல்லா இருக்கும். தேடிப்பார்த்தேன். கெடைக்கலை. அதான்... ஜஸ்ட் கேட்டேன். ஸாரிங்க!"
ஒரு வினாடி திடுக்கிட்டவன், "நானும் ஸாரி...". முணுமுணுத்தவாறே, ஒருவித குற்ற உணர்வுடன் வேகமாக எழுந்து சென்றவனைப் புரியாமல் பார்த்தாள் மாலா.