

கல்யாணம் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் வரும். ஆணுக்கு 30 வயதிற்குள் கல்யாணம் ஆக வேண்டும். பெண் 18 ஐ தாண்டியதும் சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்.
சுந்தரம் சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சர்வர் வேலை செய்து வருகிறார். 20 வயதில் இருந்து இப்போது 30 வயது வரும் வரை அதே ஹோட்டலில் தான் விடாமல் வேலை செய்தார்.
அவர் எஸ்.எஸ்.எல்.சி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவர் அப்பா மாரடைப்பால் இறந்து போனார்.
அக்காவும், அம்மாவும் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் மாப்பிள்ளை வீட்டில் வாழ்ந்தார்கள்.
10 வருடங்களுக்கு முன்பே சுந்தரம் சென்னை வந்து விட்டார். பிரபலமான ஹோட்டலில் சர்வர் வேலை கிடைத்தது.
10 வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்கு கல்யாண ஆசை வந்தது.
அவர் அதை அக்கா பொன்னியிடம் சொன்னார்.
பொன்னி அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் எல்லாம் பெண் தேடினார்.
பையன் ஒரு ஹோட்டல் சர்வர் என்று கேட்டதும் அவர்கள் விலகி விட்டார்கள்.
சுந்தரத்திற்கு சென்னையில் வீடு இல்லை. தினமும் ஹோட்டலில் தான் படுத்து கொள்வார். ஆனால்… பக்கத்தில் உள்ள வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்று ஆரம்பித்து அதில் மாசாமாசம் ₹1000 போட்டு வந்தார். வீண் செலவு செய்வது என்பது இல்லை.
10 வருட சேமிப்பு இப்போது ஒரு பெரும் தொகையாக மாறி இருந்தது. சுந்தரம் அக்காவை சென்னைக்கு வரவழைத்தார்.
மணமகன் தேவை என்ற பகுதியை வாரம் தவறாமல் தினசரியில் பார்ப்பார்.
4 அல்லது 5 பெண்களை தேர்வு செய்து இருந்தார்.
அக்காவிற்கு ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்தார். பொன்னியிடம் 5 பெண்கள் முகவரியை தந்தார்.
பாவம் சர்வர் சுந்தரம்.
அக்கா 5 பெண்கள் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். எல்லோரும் சர்வர் என்று தெரிந்ததும் பின் வாங்கி விட்டார்கள்.
ஆம்.
சர்வர் என்றால் கல்யாணத்தை மறக்க வேண்டும்.
சர்வர் சுந்தரம் மனம் நொந்தார்.
அக்காவிற்கு நன்றி சொல்லி கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
அவர் ஹோட்டலில் 3 நாட்கள் விடுமுறை கேட்டார். முதலாளி உடனே சம்மதம் தெரிவித்தார்.
ஆம். ரொம்ப சின்சியர் சர்வர்.
சுந்தரம் வங்கியில் எத்தனை பணம் உள்ளது என்று பார்த்தார்.
சுமார் ₹1,00,000க்கு மேலே இருந்தது.
பனகல் பார்க்கில் அமர்ந்து யோசித்தார். தான் சர்வராக இருக்கும் வரையில் கல்யாணம் கானல் நீர் தான்.
எனவே ஒரு முடிவுக்கு வந்தார். ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று. ஒரு சின்ன டீ கடை போட்டு அதில் போண்டா, பஜ்ஜி, பக்கோடா, உளுந்து வடை மற்றும் பருப்பு வடை செய்து… புதிய வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்.
தி.நகரில் வாடகை அதிகம் இருப்பதால் அவர் சென்னை முழுக்க சுற்றி பார்த்தார்.
ஆற்காடு ரோட்டில் அவிச்சி பள்ளிக்கு எதிரே ஒரு சின்ன கடை கிடைத்தது.
அட்வான்ஸ் ₹15,000. சுந்தரம் கொடுத்து விட்டார்.
கடைக்கு வேண்டிய சாமன்களை தி.நகரில் வாங்கி விட்டார்.
வரும் வெள்ளி சுபமுகூர்த்த நாள். அன்றே கடையை திறப்பது என்று முடிவு எடுத்தார்.
ஹோட்டல் முதலாளி சந்தோஷமாக அவருக்கு ₹7,000 கொடுத்து அனுப்பி வைத்தார்.
நன்றி சொன்னார் சர்வர்… இல்லை இல்லை... டீ கடை முதலாளி.
அவருக்கு கீழ் ஒரு டீ மாஸ்டர்.
ஒரு ஸ்நாக்ஸ் மாஸ்டர்.
இருவரும் நன்றாகவே வேலை செய்தார்கள்.
வெள்ளிக்கிழமை.
கடை திறந்தது.
முதல் நாளே அமோக வியாபாரம். பக்கத்தில் உள்ள வங்கியில் கணக்கு ஆரம்பித்து சேமிப்பை தொடர்ந்தார்.
அவர் கடை ஸ்நாக்ஸ்க்கு படு கிராக்கி..!
ஒரு வருடம் ஓடியே போய் விட்டது. வரவு செலவு கணக்கு பார்த்தார். சுமார் ஒரு லட்சம் லாபமாக மிஞ்சியது.
இப்போது சுந்தரம் சர்வர் இல்லை. டீ கடை முதலாளி.
இனி அவர் கல்யாணத்திற்கு எந்த தடையும் இல்லை.
சுந்தரத்திற்கு விரைவில் கல்யாணம்…!