

ஜனாவுக்கும், ஜெயாவுக்கும் அன்று 30-வது திருமண நாள். இப்பொழுது ஜனாவுக்கு 60 வயது. ஜெயாவுக்கு 55 வயது ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரும் நன்றாக படித்து திருமணம் ஆகி வாழ்க்கையில் நிம்மதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு இங்கு தனிக் குடித்தனம்தான்.
ஜெயா-ஜனா தம்பதியினர் மிகவும் அன்னியோன்யமானவர்கள். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்பவர்கள். எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் ஒவ்வொரு திருமண நாளின் போதும் பண்டிகை நாட்களிலும் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வார்கள். இருவரும் அரசுப் பணியில் இருந்தவர்கள். அதன் காரணமாக இருவருக்கும் இப்பொழுது மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது. மகிழ்வான, நிறைவான வாழ்க்கையினை வாழ்பவர்கள்.
ஆனால் அன்று மாலை கோவிலுக்கு ஜோடியாக சென்றபோது ஜனாவுக்கு ஒரு விபரீத ஆசை வந்துவிட்டது. அவன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். இன்னும் பல ஆண்டுகள் அவள் வாழ்வாள் என்ற அன்பின் வெளிப்பாட்டில் வந்த நல்ல எண்ணம்தான்…‘எனக்கும் அவளுக்கும் வயது இடைவெளி 30 வருடம் இருக்க வேண்டும்’ என்று கடவுளிடம் மனமுருக பிரார்த்தனை செய்தான்.
ஜெயாவும் தன் பங்கிற்கு, ‘தனது கணவனின் அறுபதாவது வயதில் அவருடன் அந்தமானுக்கு சுற்றுலா பயணம் போக வேண்டும்’ என்று கடவுளை அப்போது வேண்டினாள். அவளுக்கு அந்தமானுக்கு சென்று ‘அந்த மானைப் பாருங்கள் அழகு..’ என ஜனாவுடன் டூயட் பாட வேண்டுமென்ற ஆசை. எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு வந்த அவளுக்கு அந்தமானுக்கு செல்லும் வாய்ப்பு மட்டும் இதுவரை கிடைக்காதது குறித்து பெருத்த ஏக்கம் இருந்து வந்தது.
இரவு 9 மணி இருக்கும். இருவரும் கோவிலிருந்து வீட்டிற்கு திரும்பினார்கள். வழியில் ஒரு பிரபலமான ஓட்டலில் நன்றாக இரவு உணவை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.
இருவரும் தனித்தனியே கடவுளை வேண்டிக் கொண்ட வரங்கள் உண்மையான வடிவத்தை பெறுமா என்று நினைத்துக் கொண்டே படுத்தார்கள்.
ஜனா காலையில் எழுந்து கண்ணாடியை பார்த்தான். ‘உனக்கு வயது 85, ஜெயாவுக்கு வயது 55.‘இருவருக்கும் வயது இடைவெளி முப்பது. உன் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது’ என்றது கண்ணாடி. கண்ணாடி காட்டிய அவன் முகம் அது உண்மை என்றது.
85 வயதான ஜனா 55 வயதான ஜெயாவுடன் அந்தமானுக்கு போய் டூயட் பாடினால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருந்தது அவனுக்கு. ‘பார்ப்பவர்கள் என்ன சொல்லுவார்கள்?’ என்ற நினைப்பு வேறு.
வெகுண்டு போன ஜனா புரண்டு படுத்தான். படுக்கையிலிருந்து கீழே விழுந்தான். தான் கண்டது கனவு என்பதை புரிந்து கொண்டான்.
பரபரப்புடன் ஜெயாவை எழுப்பினான். ‘என்னங்க, அந்தமான் போக டிக்கெட் கிடைத்து விட்டது. அடுத்த திங்கட்கிழமை காலை புறப்படணும்’ என்று உளறிக் கொண்டே அவளும் எழுந்தாள். இருவரின் பிரார்த்தனைகளும் கனவில் நிறைவேறி விட்டன. ஆனால் கனவில்தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள சிறிது நேரமானது.
‘தான் போட்ட கணக்கு ஒன்று. ஆண்டவன் போட்ட கணக்கு வேறு ஒன்று. இனி இந்த மாதிரி வேண்டவே கூடாது’ என்று சொன்னான் ஜனா.
‘என்ன சொன்னீங்க?’ என்று கேட்ட ஜெயாவிடம், ‘நான் ஒன்றும் சொல்லவில்லையே’ என்று அசடு வழிந்தான். ஜனா தான் கண்ட கனவினை வெளியே சொல்ல முடியாமல் தவித்தான். ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் ஜெயா.