

மாடியிலிருந்து "அம்மா, அம்மா" என்று அழைத்தபடி இறங்கி வந்த சத்யன் கிச்சனில் இருந்த அம்மாவிடம். "அம்மா காபி கொடுங்களேன், நான் ஸ்ருதியை கூட்டிட்டுவர போகணும்" என்றான்.
"என்ன சத்யா மணி 5 தானே ஆகுது , 6 மணிக்குதானே வேன் வரும்?" என்ற அம்மா காபியுடன் நின்றாள். "இல்ல அவ இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வந்துடுறா. வழியில 'டிராபிக் ஜாம்' வேற இருக்கும், உன் மருமகளும் லேட்டாச்சுன்னா டென்ஷன் ஆகிடுவா" சத்யன் சொல்லிமுடிக்கும்முன் "ஆமா, உன்னை விடவா?" என்ற பர்வதம் நகைத்தாள்.
அதை காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல் கிளம்பினான் சத்யன். 'நல்ல பிள்ளை அப்பா மாதிரியே' என்று நினைத்தபடி மீண்டும் கிச்சனில் நுழைந்தாள்.
பர்வதம், சேதுராமன் தம்பதியருக்கு மூத்த மகள் பூரணி பிறந்து ஆறு வயதிற்கு பிறகு பிறந்தவன்தான் இந்த சத்யன். பூரணி, அவள் கணவர் சந்திரன், அவர்களின் குழந்தைகள் வசிப்பது ஹைதராபாத்தில்.
சத்யன் மீது பூரணிக்கு அளவு கடந்த பிரியம். அதனால் விடுமுறை நாட்களில் அடிக்கடி தன் அக்காவைப் பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவான். பூரணியும் குழந்தைகளின் விடுமுறையில் இங்கு வருவது வழக்கம்.