

நாக்பூரின் வெக்கை நிறைந்த மதியத்தில், அந்த அரசு மருத்துவமனையின் நடைபாதைகளில் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தாள் டாக்டர் மீனாட்சி.
தனக்கு இப்படியொரு தண்டனையா? என மனதில் கேள்வி எழுந்தது.
அவள் பதட்டதுக்குக் காரணம், தான் பணி புரிந்து வரும் அந்தப் பல் மருத்துவக் கல்லூரியிடமிருந்து வந்த அந்த நோட்டீஸ் தான்.
அவள் கையில் இருந்த அந்த நோட்டீஸ், அவளது கைக்குழந்தையின் மென்மையான வருடலை விடவும் கனமாக இருந்தது.
'விடுமுறை எடுத்த நாட்களைக் கழித்துவிட்டு, மீதமுள்ள நாட்களைப் பணி நாட்களாகக் கருத முடியாது. இது ஒப்பந்த மீறல். இதற்காக நீங்கள் இருபத்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.' அந்த வரிகளைப் படித்தபோது மீனாட்சிக்குத் தலை சுற்றியது.
மகப்பேறு விடுமுறை என்பது ஒரு பெண் தன் உடலுக்கும், உயிருக்கும் கொடுக்கும் ஓய்வு. அது எப்படி ஒரு குற்றமாகும்? சட்டம் ஒரு பெண்ணின் இயற்கையான மாற்றத்தை 'பணி முறிவு' (Break in Service) என்று எப்படிச் சொல்லலாம்?
இதமான காற்றை அள்ளி வீசும் கோயம்புத்தூரில் பல் மருத்துவப் படிப்பு முடித்த கையோடு, கன்சர்வேடிவ் டென்டிஸ்ட்ரி அண்ட் எண்டோடோன்டிக்ஸ் படிப்பில் முது நிலை பட்டமும் பெற்றுக் கோல்ட் மெடலிஸ்ட் ஆகப் பரிமளித்தாள்.