சிறுகதை: தோழமை!

Friends and husband and wife
Tamil Short story | Friends and CoupleAI Image
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on
Mangayar malar strip
Mangayar malar strip

‘‘ல்கத்தாவிலிருந்து கண்ணன் மெஸேஜ் போட்டிருக்கான்‘‘ என்றார் பிராணதார்த்தி.

‘‘என்னவாம்? ரொம்ப வருஷமாச்சே, வெகேஷனுக்கு நம்ம வீட்டுக்கு வந்து டேரா அடிக்கப் போறாங்களா? போதுமடா சாமி, வருஷம் தப்பினாலும் அவங்க வர்றது தப்பாது. புருஷன், பொண்டாட்டி, பிள்ளைகள், பெண்ணுடன் லூட்டி அடிக்க வேண்டியது. அடுத்த மாசம் நாம் செலவுக்கு கடன் வாங்க வேண்டியது ’’ படபடவென்று பொரிந்து தள்ளினாள் விசாலம்.

அவளுடைய வேதனை அவளுக்குத்தான் தெரியும். அந்த அம்மா வந்து உட்கார்ந்து கொண்டு மாமியாரைவிட மோசமாக வேலை வாங்குவாள். கூட மாட ஒத்தாசையாகச் சுண்டு விரலை அசைக்க வேண்டுமே, ஊஹூம். கேட்டால், ‘கேஸ் டிரபிள்’ என்று சொல்லிக் கொண்டு மார்புக்கு நேரே மேலும் கீழுமாக கையசைத்து அபிநயித்தும் காட்டுவாள்.

இரண்டு பையன்கள், மூத்த பெண் ஒருத்தி, அதுகளும் அம்மா மாதிரிதான். எடுப்பது, உடைப்பது, கத்துவது, கலாட்டா பண்ணுவது. ஒரே அமர்க்களம் தான். அவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். தன் கணவருடன் பேச ஆரம்பித்தால், நாலு வருஷ லீவு தொடர்ந்து வந்தாலும் போதாது. ஹூம்.

‘‘என்னங்க, பதிலே பேச மாட்டேங்கறீங்க? அவங்க இங்கே வந்து ‘டேரா’ போடப் போற சமாசாரம் தானே?’’

‘‘எப்பவோ, பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னால், கண்ணன் தன் மனைவி, குழந்தைகளுடன் அடுத்தடுத்து இரண்டு மூன்று வருடங்கள் வந்தது என்னவோ வாஸ்தவம்தான். அதுக்காக ஒவ்வொரு வருஷமும் உன் வீட்டை விட்டா மெட்ராஸிலே வேறே வீடு வாசல் அவனுக்கு கிடையாதுங்கிற மாதிரி பேசறியே.’’ பிராணதார்த்தி மனைவியைக் கடிந்து கொண்டார்.

‘‘பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் இல்ல, பத்து வருஷங்களுக்கு முன்னால்.’’

‘‘ஏதோ ஒன்று. அந்த நாளில் காலேஜ்ல படிக்கும்போது நானும் கண்ணனும் எவ்வளவு உயிருக்கு உயிராப் பழகினோம்னு உனக்கே நான் சொல்லியிருக்கேன். என் ஆபிஸ் டிரெயினிங்குக்காகக் கல்கத்தாவுக்கு அனுப்பிச்ச போது ஒரு மாசம் என்னை அவன் எப்படி கவனிச்சுண்டான்! உனக்காக பனாரஸ் பட்டுப் புடவை, உன் பையனுக்கு பேண்ட், சட்டைத் துணி, பெண்ணுக்கு சல்வார் கம்மீஸ், எனக்கு சூட் துணின்னு எக்கச்சக்கமா வாங்கி கொடுத்தானே, அப்போ வாயெல்லாம் பல்லாச்சே உனக்கு, மறந்திட்டியா?’’

‘‘சரி, சரி இப்ப என்ன அதுக்கு? என்ன விஷயமாம் கடிதாசிலே?’’

‘‘அவங்க லீவுக்கெல்லாம் ஒண்ணும் வரல்லே. அவனோட ஒரே பெண் வசந்திக்கு பிள்ளை பார்க்கிறானாம். நம்ம பையன் ஹரிசுதனோட ஜாதகத்தை அனுப்பேன்னு கேட்டிருக்கான்.’’

விசாலம் உடனே நெகிழ்ந்து போனாள். ‘‘ஏங்க, அப்படியா எழுதியிருக்காங்க? ஒரே பெண்ணாச்சே, நிறைய செய்வாங்க. பூர்வீகச் சொத்து நிறைய இருக்குன்னு அந்த அம்மா சொல்லியிருக்காங்க. வருஷா வருஷம் டேரா போட்ட விசுவாசத்தை மறக்காமல் ஜாதகம் கேட்டு எழுதியிருக்காரே!’’

பிராணதார்த்தி மௌனமாக எழுந்து போனதைக் கண்ட விசாலம், ‘‘என்னங்க, எப்ப ஹரி ஜாதகத்தை அனுப்பப் போறீங்க?’’ என்று கேட்டாள்.

‘‘உடனே கண்ணனுக்குத் தகவல் தெரிவிக்கணும் விசாலம். இப்போதைக்கு என் பையனுக்கு கல்யாணம் பண்ணறதாக இல்லே, வேறே பையன் ஜாதகம் கிடைச்சால் அனுப்பறேன்னு எழுதணும்.’’

‘‘ஏங்க, உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?’’

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உதவி ஆசிரியர்!
Friends and husband and wife

‘‘பைத்தியம் இல்ல விசாலம், தோழமை. ஏதோ சில வருஷங்கள் நம்ம வீட்டுக்கு வந்து டேரா போட்ட நன்றிக்காகவா ஜாதகம் கேட்டிருக்கான்னு நினைக்கிறே? தோழமைக்கு (Friendship) அவன் காட்டுற மரியாதை அது. உன் பிள்ளை மூன்று வருஷ பி.காம் படிப்பை ஆறு வருஷமாப் படிச்சுண்டிருக்கான். இவனுக்கு கல்யாணம் பண்ணிக்க என்ன யோக்கியதை இருக்கு? பொறுப்பில்லாமல் படிக்கிற இவன், இதே மாதிரிதானே பொறுப்பில்லாமல் குடும்பம் நடத்துவான்? சரி, உன் ஆசைப்படியே ஜாதகம் அனுப்பறோம்னு வச்சுக்கோ, உன் பிள்ளையின் படிப்பு யோக்கியதை தெரிஞ்சா, ஜாதகம் பொருந்தலேன்னு அவன் சுலபமா பதில் எழுதிடலாமே! அந்த அவமானம் தேவைதானா? இந்த நட்பின் மரியாதையை இப்படியே காப்பாத்திப்போமே, என்ன சொல்ற?’’

விசாலத்தின் முகவாய்க் கட்டையும், தோள் பட்டையும் வெகு நேரத்திற்கு வலித்துக் கொண்டிருந்தன, அவளுடைய மனசைப்போல!

logo
Kalki Online
kalkionline.com