

‘இன்னார்க்கு இன்னார்’ என்று எழுதி வைத்தான் என்பார்கள்.
அந்த இன்னார் இனியார் கதைகள் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் உப்பிலி வாழ்க்கையில் நடந்த ஒரு ஆச்சரியமான விஷயம் இதோ...
உப்பிலி வேத காவ்ய பாடசாலையில் படித்த போது அவன் கையை எதேச்சையாகப் பார்த்த சீனிவாச சாஸ்திரி “உனக்குப் பெண் இங்கே இல்லேடா.. அயல் தேசம் தான்..”
அதை உப்பிலி மறந்தே போய்விட்டான்.
அவனுக்கு என்னவோ திருமணம், வைதீகச் சடங்குகள் இவற்றில் எல்லாம் வர வர நம்பிக்கை குறைய ஆரம்பித்து விட்டது.
அக்கினி சுற்றி வலம் வரும் தம்பதிகள் கொஞ்ச நாளைக்கெல்லாம் கோர்ட்டில் போய் விவாகத்தை ரத்து செய்வது அவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயம்.
'விவாகத்துக்கு மந்திரங்கள் இருப்பது போல ரத்துக்கு என்று எதுவும் இருக்கா? இல்லை. அப்புறம் ஏன் இந்தக் கூத்து கண்றாவிகள்?' என்பான்.
ஒரு நாள் அப்பு சாஸ்திரிகள் கூப்பிட்டு அனுப்பினார், “மலேசியாவில் ஒரு யாகம்.. வர்றியா.. பாஸ்போர்ட் வச்சிருக்கியா..?”
“இருக்கு மாமா..”
“ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு வா... டிக்கெட் விசா வாங்க ஏஜெண்ட்டுக்குத் தரணும்”
பத்து நாள் கழித்து அப்பு சாஸ்திரிகளோடு மலேசியாவில் போய், கோவில் ஒன்றில் மூன்று நாள் கும்பாபிஷேக யாகம் சுபமாக முடிவடைந்தது. அதை முழுவதும் வீடியோ எடுத்த ஒரு சீனத்துப் பெண், உப்பிலியிடம் கடைசி நாள் அன்று, “என் பெயர் கிருஷ் லீ.. எனக்கு சமஸ்கிருதம் சொல்லித் தர முடியுமா ?”
“அதுக்கு நான் எப்படி.. என் விசா இதோட முடிஞ்சிடும். ஊருக்குப் போயிடுவேன்...”
“உங்க உச்சரிப்பு அற்புதமா இருக்கு. உங்களை மாதிரி ஒருத்தர் கிட்டே தான் சமஸ்கிருதம் படிக்கணும். இங்கே தங்கறதைப் பத்திக் கவலை வேண்டாம். என் அப்பா பெரிய ஜர்னலிஸ்ட். இங்கே எமிகிரேஷன், அயல் நாட்டு தூதரகங்களில் அவருக்கு செல்வாக்கு அதிகம். அவர் நினைச்சா உங்களுக்கு இங்கே பர்மனெண்ட் கார்டே வாங்கித் தர முடியும்… சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கு.”
அப்புவிடம் கேட்ட போது, “மெதுவா வாயேன்... நல்ல சந்தர்ப்பம். அங்கே வந்து என்ன கிழிக்கப் போறே..? அடுத்த மாசம் இன்னொரு கோவிலுக்கும் யாகம் பண்ண வர்றோம். பிடிக்கலைன்னா அப்ப எங்க கூடத் திரும்பிடு,”என்றார்.
கிருஷ் லீயின் கற்கும் அறிவு அபாரமாக இருந்தது. இந்த அளவு தமிழ், சமஸ்கிருத உச்சரிப்பு நம்ம நாட்டு பெண்களுக்கு வர்றதே சந்தேகம்..
மாதா மாதம் ஒரு பெரிய தொகை சம்பளம் வந்தது. அதை ஊருக்கு அனுப்பி வைத்தான். கிருஷ் லீயுடன் இன்னும் பல நாட்டு மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள். ஒரு வருஷத்தில் உப்பிலி பெரிய ஆசிரியராகி விட்டான்.
மலேஷிய நாட்டில் கோலாலம்பூரில் இருந்த அவன் பாடசாலைக்கு பினாங்கிலும் தபால் மூலம் கற்க ஒரு கிளை திறக்கப்பட்டது. கிருஷ் லீ அதை நிர்வகித்தாள். இங்கும் அங்குமாகப் பறந்தான் உப்பிலி.
சிங்கப்பூரிலும் ஒரு பாடசாலை திறக்க அவள் தந்தை முடிவு செய்தார்.
ஊரில் கிரகப்பிரவேசம், அவன் தங்கை திருமணம் இவை அடுத்து அடுத்து நடந்தன. வந்து போனான் உப்பிலி.
கிருஷ் லீயும் அவனுடன் திருச்சி வந்திருந்தாள்.
அப்பு கேட்டார், “எப்போடா கல்யாணம் ?”
“இப்போதைக்கு இல்லை மாமா ! மலேசியாவில் இன்னும் ஒரு பாடசாலை திறக்க கிருஷ்ணை முடிவு பண்ணி இருக்கா..”
அப்போது அவள் அவன் அருகில் இருந்தாள்.
அவளை உப்பிலி 'கிருஷ்ணை' என்று தான் கூப்பிடுவான்.
ஒரு நாள் கிருஷ் லீ உப்பிலியிடம் கேட்டாள். “எப்போ கல்யாணம்..?”
“எனக்கு அதில் எல்லாம் இஷ்டம் அவ்வளவா இல்லே.”
“ஏன்..?”
“சொல்லத் தெரியலே.. யார் என்னைக் கல்யாணம் பண்ணிக்குவா? எதுக்கு இப்படி கேட்கிறே கிருஷ்ணை..?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?”
இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை உப்பிலி.
சிறிது நேரம் யோசித்தான். “சரி..” என்றான்.
அடுத்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாளில் உப்பிலி - கிருஷ்ணை என்கிற கிருஷ் லீ திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சீனிவாச சாஸ்திரி காலில் உப்பிலி, கிருஷ்ணை விழுந்த போது, “நான் சொன்னது பலிச்சிடுச்சா?”, என்பது போல ஆசீர்வதித்தார்.